☰ உள்ளே....

Autumn Leaves - மிதவை.உன்னதமான உலக சினிமாக்களை வரிசைகட்டினால் ஈரானிய திரைப்படங்களே முதல் இடத்தில் நிற்கும். பிரம்மாண்ட படைப்புகளோ, ஆச்சரிமூட்டும் கதையோ, வியக்க வைக்கும் தொழில்நுட்பங்களோ ஈரானிய படைப்பாளிகளுக்கு தேவைப்படாது. தெருவில் வித்தைகாட்டும் சாதாரண பாம்பாட்டியை ஒரு கையடக்க கேமராவில் படம்பிடித்து சத்தமில்லாமல் மயக்கி சகல விருதுகளையும் அவர்கள் தட்டிச் சென்றுவிடுவார்கள். "Children of Heaven, The White Ballon, The Cow, Bashu, Where is my Friend's Home இன்னும் பல திரைப்படங்களை இதற்கு எடுத்துக்காட்டுகளாக கூறலாம். குறும்படங்களை எடுத்துக்கொண்டால் அதிலும் அவர்களுக்கு முதலிடம்தான். தரமான ஒரு படைப்பைத் தர அவர்களுக்கு ஒரு சிறிய பொறி போதும் சிலசமயம் அது கூட தேவையிருக்காது. அந்த வகையைச் சார்ந்ததுதான் இந்த குறும்படம் "Autumn Leaves".

அது ஒரு இலையுதிர் காலம், ஈரானிய சிறுமி ஒருத்தி தனது வீட்டுப்பாடத்தை எழுதிக் கொண்டிருக்கிறாள். எதேச்சையாக அவள்மீது விழும் காய்ந்த இலை ஒன்று அவளது கவனத்தை திசை திருப்புகிறது. அந்த காய்ந்த இலையுடன் சிறிதுநேரம் விளையாடும் அவள் அவசர அவசரமாக பள்ளிக்கு புறப்படுகிறாள் ஆனால் தாமதமாக தனது பள்ளிக்கூடத்தை அடைகிறாள். மேலும் அவளது தாமதத்திற்காக குப்பைகளை பொறுக்கும் தண்டனையைப் பெறுகிறாள். அந்த குப்பைகள் அனைத்தும் முன்பு அவள் வீட்டில் விளையாடிய அதே இலையுதிர் காலத்து காய்ந்த இலைகளாக இருக்கிறது.

இரண்டே நிமிடங்கள் ஒன்றுமில்லாத கதை ஆனால் காட்சிகள் அனைத்தும் மனதை கொள்ளையடிக்கின்றன. படத்தின் தலைப்பிற்கு ஏற்றவாறு ஒவ்வொரு இடத்திலும் இலையுதிர் காலத்தின் எச்சங்கள் தென்படுவது கூடுதல் அழகு. பள்ளிப்பருவத்தில் வகுப்பறைக்கு தாமதமாகச் சென்று தண்டனையாக குப்பைகளை பொறுக்கிய அனுபவம் தங்களுக்கு இருக்கிறதா? "Autumn is a second spring when every leaves is a flower" என்பதற்கேற்ப நீங்கள் இலையுதிர் காலத்தின் ரசிகரா? அப்படி என்றால் இந்த வார்த்தைகளற்ற குறும்படம் தங்களையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை.


Written & Directed by - Saman Hosseinpuor.
Music - Fardin molasalimi, Sirvan Azizi.
Cast - Kamad Amjadi, Leila Soltani.
Country - Iran
Year - 2015.