☰ உள்ளே....

A Long Way Gone - Memoirs of a Boy Soldier.குழந்தைத் தொழிலாளர்கள் என்பதே சட்டத்திற்கு புறம்பான செயல் அதிலும் குழந்தை வீரர்கள் என்பது மனிதத்தையும் மீறக்கூடிய செயல். உலகம் கண்ட இரண்டு பெரும் போர்களிலும் குழந்தை வீரர்கள் (சிறுவர் - சிறுமியர்) ஈடுபடுத்தப் பட்டிருக்கிறார்கள். வளர்ந்த நாடுகள் என இன்று மார்தட்டிக் கொள்ளும் நாடுகள் கூட போர்களில் சிறுவர்களை கணிசமான அளவு பயன்படுத்தி இருந்தனர். ஆனால் இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு விழித்துக் கொண்ட உலகம் சிறுவர்களை இராணுவத்தில் அனுமதிப்பதை தடை செய்தது மேலும் இராணுவத்தில் சேர்வதற்கான கட்டாய வயது வரம்பைக் கொண்டுவந்தது. இன்று இராணுவத்தில் சிறுவர்களை எந்த நாடும் அனுமதிப்பதில்லை. அதற்கு மாற்றாக புரட்சி, விடுதலை, சுதந்திரம், மதம் என தீவிரமாக செயல்படும் சில இயக்கங்களின் மூலம் அவர்களின் கையில் விளையாட்டு பொருட்களுக்கு பதிலாக விபரீதமாக ஆயுதங்கள் திணிக்கப்படுவது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஈராக் யுத்தம் தொடங்கி வியட்நாம், ஆப்கானிஸ்தான் போர், ஆப்பிரிக்க நாடுகளின் உள்நாட்டு கலவரங்கள், ஏன்! நமக்கு நன்கு பரிச்சியமான இலங்கை யுத்தத்திலும் கணிசமான அளவு சிறுவர்கள் ஒற்றர்களாகவும் மனித வெடிகுண்டாகவும் கேடையமாகவும் பற்றாக்குறை வீரர்கள்களாகவும் முன்நிறுத்திய வரலாறு நமக்கு தெரிந்ததே. அவ்வாறு தன் நாட்டின் கலவரத்திற்காக, ஒரு இயங்கத்தின் செயல்பாட்டிற்காக பதப்படுத்தப்பட்ட - பயன்படுத்தப்பட்ட சிறுவன் ஒருவனின் சுயசரிதைதான் இந்த புத்தகம் "A Long Way Gone".

உலகம் தோன்றிய இரகசியம், இயற்கை வளம், அபூர்வங்கள் என கொட்டிக் கிடக்கும் பிரதேசம் ஆப்பிரிக்கா. அதைவிட அங்கு பத்து அடிக்கு பூமியைத் தோண்டினால் பற்பசை விளம்பர நடிகையைப் போல் வைரம் பல் இளிக்கத் தொடங்கும். உலகின் 90% வைரம் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து கிடைக்கிறது அவ்வாறு கிடைக்கும் ஒவ்வொரு வைரக்கல்லிற்கு பின்பு இரத்தம் தோய்ந்த கொடூரம் ஒளிந்திருக்கிறது. வளர்ந்த நாடுகளின் பின்னணியில் ஆயுதம், போதை, மதம் இவற்றைக் கொண்டு கொடூரங்களை நிகழ்த்தி வைரங்களை மனித உயிர்களை விட மலிவாகப் பெற ஆப்பிரிக்க தேசத்து அரசாங்கமே முன்னின்று செயல்பட்டு வருகிறது என்பதுதான் உண்மை. அத்தகைய ஆப்பிரிக்க தேசத்து நாடுகளில் ஒன்றுதான் சியரா லியோன் (Sierra Leone).

மேற்கண்ட இயற்கை வளத்திற்கும் வைரத்திற்கும் குறைச்சலில்லாத அந்த நாட்டில் 1990 ஆம் ஆண்டு உள்நாட்டு கலவரம் வெடித்தது. ஆளும் அரசிற்கு எதிராக "Revolutionary United Front (RUF)" என்ற அமைப்பு புரட்சியைத் தூண்ட அப்பாவி மக்கள் இதில் வழக்கம்போல் சிக்கி சின்னாபின்னமாகிப் போனார்கள். புரட்சி என்ற பெயரில் கிராமங்கள் அழிக்கப்பட்டன, ஆண்களும் பெண்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர், சிறுமிகளை கற்பழித்தும் கைகளை துண்டித்தும் கொடுமைப் படுத்தினர். (இதைப்பற்றி முன்பே விரிவாக எழுதியிருக்கிறேன். டிகாப்ரியோ நடித்த பிளட் டைமன்ட் திரைப்படத்திலும் இதனை அப்பட்டமாக காட்டியிருப்பார்கள்). மேலும் சிறுவர்களை அநாதையாக்கி போதைக்கு அடிமையாக்கி இயக்கத்தில் கட்டாய வீரனாக மாற்றினர். அவ்வாறு மாற்றப்பட்ட சிறுவர்கள் போதை மயக்கத்தில் இயக்கத்தின் அத்தனை அட்டூழியங்களையும் நிகழ்த்தினர். விரிவாகச் சொன்னால் பெருந்தலைகள் சிலரைத் தவிர்த்து இயக்கத்தின் முக்கால்வாசி வீரர்கள் சிறுவர்களாக இருந்தனர். அவர்களில் ஒருவன்தான் இஸ்மாயில் பீச் (Ishmael Beah).


பாடுவதிலும் ஆடுவதிலும் ஆர்வமும் திறமையும் கொண்ட இஸ்மாயில் பத்துவயது வரை தனது கிராமத்தில் (Mogbwemo) வசித்து வந்தான். நாட்டில் உள்நாட்டு கலவரம் தீவிரமடையத் தொடங்கியபோது ஒருநாள் அவன் பக்கத்திலிருக்கும் கிராமத்தில் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்திவிட்டு திரும்பிக் கொண்டிருந்தான். அவன் தன் கிராமத்தை அடைவதற்கு முன்பு RUF இயக்கத்தினர் கிராமம் மொத்தத்தையும் அழித்திருந்தனர். அவனது தாய், தந்தை, பாட்டி, சகோதரர்கள் அத்தை மற்றும் உறவினர்கள் அனைவரும் இறந்துவிட்டனர் என்ற நிலைமை கூடத் தெரியாமல் கிராமத்திலிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என நகரத்தை நோக்கி செல்லும் அகதிகள் சிலருடன் இஸ்மாயிலும் சேர்ந்து கொண்டான். விதியும் அவனை பின் தொடர்ந்தது. அகதிகளாக அலைந்து கொண்டிருந்த உயிர் பிழைத்தவர்களையும் RUF இயக்கத்தினர் சூழ்ந்து கொண்டு கொண்று குவிக்கத் தொடங்கினர். சிறுவனான இஸ்மாயில் மற்றும் அவன் வயதை ஒத்த சிறுவர்களையும் அவர்கள் பிடித்துச் சென்றனர். அவ்வாறு பிடித்துச் சென்ற இஸ்மாயிலுக்கு இயக்கத்தின் மூலம் சில போதனைகள் அளிக்கப்பட்டது கூடவே போதையும் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் இஸ்மாயில் RUF இயக்கத்திற்காக அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டான், மனிதத் தன்மைக்கு எதிராகவும் செயல்படத் தொடங்கினான். இதற்கிடையில் உலக நாடுகளின் பார்வை சியரா லியோன் மீது படத் தொடங்கியது. சில நாடுகள் மற்றும் ஐநாவின் தலையீட்டால் ஓரளவிற்கு உள்நாட்டு கலவரங்கள் அங்கு கட்டுக்குள் வரத் தொடங்கியது. UNICEF அமைப்பினர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்யத் தொடங்கினர். 11 வருட காலம் நீடித்த உள்நாட்டு கலவரம் முடியும் தருணத்தில் RUF இயக்கத்தில் இருந்து சிறுவர்களையும் அவர்கள் மீட்டனர். அதில் இஸ்மாயிலும் அதிஷ்டவசமாக உயிருடன் இருந்தான்.

இஸ்மாயிலுக்கு UNICEF அமைப்பின் மூலம் போதைப் பழக்கத்திலிருந்து முதலில் விடுதலை கிடைத்தது. அதில் பணிபுரிந்த எஸ்தர் என்பவளின் கருணையால் தான் தொலைத்த திறமைகளையும் அவன் மீட்டெடுத்தான். எழுதப் படிக்க கற்றுக்கொண்ட அவன் உலக நிகழ்வுகளை தெரிந்து கொண்டான். தன் சொந்த நாட்டின் கலவரத்தையும் தன்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளையும் வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தவும் அவன் விரும்பினான். ஒரு கதைபோல வாக்குமூலம் போல இயல்பாக தன் சுயசரிதையாக அதனை அவன் எழுதி முடித்தான்.


இஸ்மாயில் எழுதிய இந்த புத்தகத்தில். வண்ணவண்ணக் கனவுகளோடு ஆடிப்பாடி சுற்றித் திரிந்த சிறுவன் ஒருவனின் வெறுங்கையில், சமூகம் திணித்த பாவக் கணக்குகள் முழுவதும் கதைகளாக தேங்கியிருக்கிறது. ஒரு புதிய களம், புதிய மனிதர்கள், இவற்றோடு ஒடுக்கப்பட்ட ஒருவனின் அந்த புதிய கதையை தவறாமல் வாசியுங்கள்.

A Long Way Gone.
(Memoirs of a Boy Soldier).
Ishmael Beah.
Sarah Crichton Books.