அன்பின் கடிதங்கள்.





அது ஒரு மாலைப்பொழுது, கல்கத்தாவின் சேரிகள் நிறைந்த பகுதியில் நடந்து கொண்டிருந்த அவளுக்கு கால்கள் தடுமாறியது, லேசாக தலை சுற்றுவதுபோல் இருந்தது, கண்களுக்கு முன் தோன்றிய நீர்த்திரை பாதையை மறைக்க அவள் மிகவும் களைத்திருந்தாள், அதற்கு காரணம் பசி. கல்கத்தாவில் அவளுக்கென சொல்லிக் கொள்ளும் படியான சொந்த பந்தம் என யாரும் கிடையாது, வசிப்பதற்கு வீடோ கையில் பணமோ பொருளோ எதுவும் அவளிடம் இல்லை. ஆனால் கண்ணில் கருணையும் இதயத்தில் அன்பையும் எப்போதும் வைத்திருப்பாள். அதனைக் கொண்டு பலரது பசியை போக்கியிருக்கிறாள், அதனால் பலநேரம் அவள் பசித்து இருந்திருக்கிறாள். அன்றும் அப்படித்தான் நிகழ்ந்தது.

இதற்குமேல் நடக்கவே முடியாது என உணர்ந்த அவளுக்கு அருகில் தேவாலயம் ஒன்று தென்பட்டது. தமக்கு நன்கு தெரிந்த தேவாலயம் என்பதால் மெல்ல நடந்து உதவி கேட்க அதன் கதவைத் தட்டினாள். கதவிலிருந்து வெளிப்பட்ட தேவாலயத்தின் குருவை கண்டதும் அவள் முகம் மலர்ந்தது. அந்த தேவாலயத்தின் குருவிற்கும் இவளைத் தெரியும் என்பதால் அவரும் மெல்லிய புன்னகையை உதித்தார். தமது தற்போதைய நிலையை எடுத்துக் கூறி தனது பசிக்கும் தன்னுடயை அரவணைப்பில் இருக்கும் குழந்தைகளுக்கும் எதாவது செய்யுமாறு அவள் அவரிடம் வேண்டினாள். சரி, நான் உனக்கு உதவுகிறேன் அதற்கு பதிலாக நீ இந்த பொது சேவையை விட்டுவிட்டு இறைசேவை செய்ய மறுபடியும் மடத்தில் இணைவதாக இருந்தால் என்ற வலையை அவர் விரித்தார்.

"ஒவ்வொரு தனி மனிதனிலும் நான் கடவுளைக் காண்கிறேன். ஒரு நோயாளியின் உடலைத் தொடும்போது கடவுளைத் தொடுவதாக உணர்கிறேன்"

- என்ற குறிக்கோளோடு உலகின் சக்திவாய்ந்த வாடிகன் மடத்தின் கீழ் இயங்கும் லொரோட்டோ என்ற கிருஸ்தவ சபையிலிருந்து அவள் தற்போதுதான் விளகியிருந்தாள். அதை மனதில் கொண்டு அதில் மீண்டும் இணைவதற்காகத்தான் அந்த தேவாலயத்தின் குரு அவளின் அந்த நிலையிலும் நிபந்தனையை விதித்தார். கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்ற வாசகத்தின் உண்மையை உணர்ந்த அவள் எதுவும் பேசாமல் திரும்பி தெருவில் நடையைக் கட்டினாள். தீடிரென அவளது மனதில் அந்த எண்ணம் உதித்தது. நான் அதை செய்தே ஆகவேண்டுமா? அப்படி செய்தால் என்ன தவறு? இந்த யுக்திக்கு பலன் கிடைக்குமா? என மனதில் பல கேள்விகள் எழுந்தது. ஆம்! தவறேயில்லை, வேறு வழியே இல்லை என மனதை தேற்றிக்கொண்ட அவள் அந்த காரியத்தை செய்யத் தொடங்கினாள்.

வெளிநாட்டு பெண்மணி ஒருத்தி வங்கதேசத்தின் பாரம்பரியமான நீலவண்ணக் கரை போட்ட வெள்ளைப் புடவையில் கல்கத்தாவின் தெருவில் பிச்சை எடுப்பதை சிலர் அதிசயமாக பார்த்தனர், ஒருசிலர் தங்களால் இயன்றதை கொடுத்துவிட்டு சென்றனர். பிச்சையெடுப்பது என அன்று அவளது மனதில் உதித்த எண்ணத்திற்கு பலன் கிடைத்தது. அன்றிலிருந்து தினமும் மாலை வேளையில் பிச்சைகேட்டு தெருக்களில் திரிவதை அவள் வாடிக்கையாக வைத்திருந்தாள்.

யாசகம் பெற்றுதான் பொதுசேவை செய்ய வேண்டும் என முடிவு செய்தபின் அவள் அதற்கென வேறுபல யுக்திகளையும் கையாளத் தொடங்கினாள். அவற்றில் ஒன்று கடிதம் எழுதுவது. 'கடிதம் இரண்டு இதயங்களுக்கு இடையே போடப்படும் வார்த்தைகளால் ஆன இணைப்பு பாலம்' என தமக்கு பரிச்சியமானவர்களுக்கு கடிதம் எழுதி அதன் மூலம் யாசகம் கேட்கத் தொடங்கினாள். அந்த கடிதங்களின் மூலம் சில நல்ல இதயங்கள் அனுப்பிய பணமும் பொருளுதவியும் இவளை அடைந்தது. அதனைக் கொண்டு ஒரு சிறிய குடிசையை வாடகைக்கு எடுத்து தனது சேவை மையம் "மிஷன் ஆஃப் சாரிட்டியை" தொடங்கினாள். முதலில் குழந்தைகளின் படிப்பு என தொடங்கிய அவளது சேவை மெல்ல வளர்ந்தது. தெருவோரம் கைவிடப்பட்டவர்களை அரவனைக்கத் தொடங்கினாள். பசியால் துடித்தவர்களுக்கு அமுதூட்டினாள், அநாதையாக இறந்தவர்களை நல்லடக்கம் செய்தாள். நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மனதிற்கு அன்பையும் ஆறுதலையும், உடலுக்கு மருந்துகளையும் அளித்தாள். தொழுநோயாளிகளை தொட்டுத் தூக்கினாள், எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரம் நீட்டினாள், குப்பையாக இருந்த நகரை சுத்தம் செய்தாள், ஏழைகளுக்கு கல்வி போதித்தாள் இன்னும் இன்னும் எத்தனையோ என செல்லுமிடமெல்லாம் சேவையோடு சேர்த்து அன்பையும் விதைத்தாள். அவளின் சேவையை அறிந்த சிலர் தாமாகவே முன்வந்து அவளுடன் இணைந்தனர். நாளடைவில் அவளது சேவை மையம் பல எதிர்ப்புகளுக்கும் ஆதரவுகளுக்கும் இடையே உலகமெங்கும் கிளைகளைப் பரப்பியது. அவளது சேவையை பாராட்டி பரிசுகளும் பதக்கங்களும் அவளைத் தேடி வந்தது. உச்சகட்டமாக உலக அமைதிக்கான நோபல் பரிசும் அவளுக்கு கிடைத்தது. தனக்கு கிடைத்த பரிசுப் பொருட்களையும் அவள் தன் சேவைக்காக பயன்படுத்திக் கொண்டாள். அத்தனை பரபரப்பான சேவைகளிடையேயும் அவள் யாசகம் கேட்டு கடிதம் எழுதுவதை நிறுத்தாமல் தினமும் தொடர்ந்தாள். உள்ளூர் ஆசாமி தொடங்கி இந்திய பிரதமர், போப் ஆண்டவர், அமேரிக் அதிபர் என அனைவருக்கும் கடிதம் எழுதினார். ஈராக் யுத்தம் நிகழ்ந்தபோது சதாம் உசேனுக்கு போரை நிறுத்தச் சொல்லி அவள் எழுதிய கடிதம் சதாமின் இரும்பு நெஞ்சத்தையும் உருக்கியது.

நகைச்சுவை உணர்வு கொண்ட அவள் எழுதிய வேடிக்கையான கடிதமும் உண்டு. ஒருமுறை இந்தியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் தான் அடிக்கடி வெளிநாடு சென்று வருவதால் செலவுகள் அதிகமாவதால் தங்கள் விமானத்தில் தன்னை இலவசமாக அழைத்துச் செல்லவும் என அதில் வேண்டிக் குறிப்பிட்டிருந்தாள். ஆனால் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அவளது கடிதத்தை நிராகரித்து தட்டிக்கழித்தது. அவள் கலங்காமல் 'வேண்டுமானால் என்னை உங்கள் விமானத்தில் பணிப்பெண்ணாக பணி செய்ய அனுமதியுங்கள், உங்களுக்கான பணத்தை வேலை செய்து கழித்துவிடுகிறேன்' என மீண்டும் ஒரு கடிதம் எழுதினாள். பிறகு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அவளை இலவசமாக உலகமெங்கும் அழைத்துச் சென்று புண்ணியம் தேடிக்கொண்டது. கடிதம் அவளின் ஒப்பற்ற சேவையில் ஒரு அங்கமாக கருவியாக விளங்கியது. கிட்டத்தட்ட தம் வாழ்நாளில் நாற்பது வருடங்கள் பல்லாயிரம் கடிதங்களை அவள் கைப்பட பலருக்கு எழுதினாள்.


வானில் பல நட்சத்திரங்கள் தோன்றலாம் ஆனால் விடிவெள்ளியாக ஜொலிப்பவை ஒன்றே. அத்தகைய விடிவெள்ளியாய்த் தோன்றியவள் அவள். பெற்ற தாய்க்குப் பிறகு அன்னை என அழைக்கத் தகுந்த தகுதியுடைய ஒரே! நபர் அவள். அதன்படி இந்த உலகமே அவளை "அன்னை தெரசா" என அழைத்தது. அன்பு என்ற வார்த்தைக்கு அடையாளமாக விளங்கிய அந்த அன்னையின் கடிதத்துடனான வாழ்க்கை கதைதான் இந்த திரைப்படம் "The Letters".

இந்தத் திரைப்படம் வாடிகனில் உள்ள மதகுரு Celestevan Exam என்பவரின் பார்வையில் சொல்லப்படுகிறது. தெரசாவின் இளமைப் பருவத்தை தவிர்த்து, இந்தியாவில் அதுவும் கல்கத்தாவில் அவள் காலடி வைத்ததிலிருந்து கதை தொடங்குகிறது. தன்னிகரற்ற ஒருவளின் சரிதையை விளக்கும் இந்த திரைப்படத்திற்கு விமர்சனம் எதுவும் தேவையிருக்காது என நினைக்கிறேன். அதனால் தெரசாவின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவத்தைக் கொண்டு இந்த திரைப்படத்தை தங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். தவறாமல் ஒருமுறை அன்பை-அன்னையை அவளை தரிசியுங்கள்.


Direct & Written by - William Riead.

Music by - Ciaran hope.

Cinematography - Jack-N- Green.

Language - English.

Staring - Juliet Stevenson (Mother Teresa) .