Little Terrorist - எல்லையில்லா அன்பு.

ங்கிலேய அதிகாரி அரைபோதை மயக்கத்தில் கிழித்த கோடு (இந்தியா-பாகிஸ்தான் எல்லை), பொக்கைவாய் கிழவனின் பேச்சைக் கேட்காமல் காதி உடையும் லினன் கோட்டும் ஏற்படுத்திய பிரிவினை (யார் என்று தெரிந்ததே). காவியும் பச்சையும் கலந்து எண்ணெய் ஊற்றி எழுபது ஆண்டுகளாக அனையாமல் எரிக்கப்படும் தீ (இந்து முஸ்ஸீம் கலவரம்) இவற்றிற்கிடையே எது நடந்தாலும், வாயும் வயிறும் வேறாயினும் ரத்தமும் சதையும் ஒன்றே என மனித நேயத்துடன் வாழ்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அத்தகைய எளிய மனிதரின் மனித நேயத்தை அழகாக வெளிக்காட்டும் குறும்படம்தான் Little Terrorists.


பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் கிரிக்கெட் பந்து தடுப்பு வேலியைத்தாண்டி இந்திய எல்லைக்குள் விழுகிறது. பத்து வயதான ஜமால்(சலீம்) அதனை எடுக்க தடுப்பு வேலியைத் தாண்டுகிறான். சாமர்த்தியமாக நுழைந்த அவன் பந்தை எடுத்துக் கொண்டு வெளிவரும் நேரத்தில் தூரத்தில் கண்காணிப்பிலிருக்கும் இந்திய வீரர்களின் கண்களில் படுகிறான். அவர்களிடமிருந்து தப்பித்து ஓடி அருகில் இருக்கும் இந்திய கிராமத்திற்குள் செல்லும் பாதையில் ஒளிகிறான். பிறகு அவ்வழியே சைக்கிளில் செல்லும் 'லோகா' என்பவரை பின் தொடர்ந்து கிராமத்தை நோக்கிச் செல்கிறான்.

இந்திய எல்லைப்பகுதியில் வசிக்கும் இந்து பிராமண வகுப்பைச் சேர்ந்த லோகா தன்னை பின்தொடரும் ஜாமாலை முதலில் விரட்டினாலும் பிறகு அவன்மீது இறக்கப்பட்டு அவனது அடையாளங்களை அகற்றி தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார். அங்கு தன் மருமகள் ராணி என்பவளுடன் இணைந்து அவனுக்கு அடைக்கலம் கொடுக்கிறார். இதற்கிடையில் எல்லையில் ஊடுருவிய ஜமாலுவை இளம் தீவிரவாதி என இந்திய படைவீரர்கள் தேடி கிராமம் முழுவதும் சோதனையிடுகின்றனர். ஜமாலுவை தப்பிக்க வைக்க லோகாவும் ராணியும் அவனது தலைமுடியை மழித்து குடுமி வைத்து ஒரு இந்து பிராமண சிறுவனாக மாற்றுகிறார்கள். மேலும் தேடுதலிலிருந்து தப்பித்த அவனை பெற்றோர்களிடம் சேர்ப்பதாக வாக்கு கொடுக்கின்றர். ஜமால் எல்லை தாண்டி பாகிஸ்தான் சென்றானா? தன் குடும்பத்துடன் இணைந்தானா? வழியில் என்ன நடந்தது? என்பதுதான் குறும்படத்தின் மீதிக்கதை. 2004 ஆம் ஆண்டு வெளிவந்து அகாதமி விருதுகளின் கதவைத் தட்டிய இந்த குறும்படத்தை தவறாமல் ரசியுங்கள்.


📎

  • Directed & Written by - Ashvin Kumar.
  • Cinematography - Markus Hursch.
  • Year - 2004.
  • Language - Hindi, Urdu, Bangla.
  • Country - India.