☰ உள்ளே....

பத்துத்தலை இராவணன்...கோவில் பிரஹாரத்தை சுற்றிவரும்போது எதேச்சையாக கண்ணில் பட்டார் அந்த சூப்பர் வில்லன். நமக்குதான் வில்லன்களை பிடிக்குமே என்று அங்கிருக்கும் மற்ற ஹீரோக்களை விட்டுவிட்டு அந்த வில்லன் சிலையை நோக்கிச் சென்றேன். பொதுவாக எல்லா சிவன் கோவில்களிலும் ஒரு மூலையில் இராவணன் இருப்பார், சுவாமி வீதி உலாக்களில் அவரே முன்நின்று தேரை செலுத்துவார். இராவணின் பேவரிட் கடவுள் சிவபெருமான் - சிவபெருமானின் டாப் மோஸ்ட் பக்தர் இராவணன். இந்த பந்தமே என்னதான் இதிகாச வில்லனாக இருந்தாலும் அவர் வீதியுலாக்களில் கூடவே செல்லும்படியானது. தத்துரூபமாக வடிவமைக்கப்பட்ட அந்த சிலையை வெறித்துக் கொண்டிருந்தேன். பின்னால் இருந்து என்னடா யோசனை? என்று அக்கா தலையைத் தட்டினாள். "யார் இந்த இராவணன்? இராவணனுக்கு பத்துத்தலை எப்படி வந்தது? அவரது  பிரம்மாண்டமான இதிகாச அட்வெஞ்சர் வரலாறு என்ன? யாரைக் கேட்கலாம் ? யோசிக்கிறேன்" என்றேன். சரி ஒரு நூறு ரூபாய் கொடு நான் சொல்கிறேன் என்றாள். அதை நீட்டியவுடன் 'நான் ஆட்டோ பிடிச்சி வீட்டுக்கு போகிறேன் நீ பொறுமையாக பத்துத்தலையின் கதையை கேட்டு தெரிந்துகொண்டு வா' என கோவிலிலிருந்து அவள் மட்டும் புறப்பட்டாள். பத்துத்தலையைப் பற்றி தெரிந்துகொள்ளாவிட்டால் என் ஒற்றைத் தலை வெடித்துவிடும் போலிருந்தது.

புகழ்பெற்ற இராமாயண இதிகாசத்தின் வில்லன் இந்த இராவணன். தசக்கிரீவன், தசமுகன், இலங்கேஸ்வரன், இரவணேஸ்வரன், திரிலோக அதிபதி, சிவதாசன் என எக்கச்சக்க பெயர் வைத்து இவரை அழைத்தாலும் ஆதார் கார்டில் இருக்கும் பெயர் இராவணன். இரு + ஆவணன் பேருரிமை கொண்டவன் என்றும், இருள் + ஆவணன் கருமை நிறமுடையவன் என்றும் பொருள்.
முன்பொரு காலத்தில் "விச்ரவசு" என்ற மகா முனிவர் வாழ்ந்து வந்தார். அவரது மகன் "குபேரன்" செல்வங்களுக்கெல்லாம் அதிபதியாக விளங்கி வந்தான். (திருப்பதி வெங்கி பத்மாவதியாரை மணமுடிக்க பணம் கொடுத்து உதவினாரே அதே! குபேரன்தான்). அந்த குபேரன் நவரத்தினங்களால் அழங்கரிக்கப்பட்ட புஷ்பக விமானத்தை வைத்திருந்தான். அதில் உலகில் நினைத்த இடத்திற்கெல்லாம் பறந்து சென்று செல்வங்களை ஈட்டிவந்தான். இதனை கவணித்த "சுமாலி" என்ற அசுரன் தனக்கும் குபேரனைப்போல ஒரு மகன் இருந்தால் உலகையே ஆட்சி செய்யலாம் என நினைத்தான். அவளது மகளான "கைகனி" என்பவளிடம் தனது ஆசையைக் கூறி அசுரகுலம் தழைக்க நீ விச்ரவசு முனிவரை மணந்துகொண்டு குபேரன்போல் ஒருவனை குழந்தையாக பெற்றுக்கொள் என வேண்டினான். கைகனியும் இதற்கு சம்மதித்து முனிவரை சந்திக்க காட்டிலுள்ள அவரது குடிசைக்குச் சென்றாள்.

அசுர குலத்தை சேர்ந்த பேரழகு பதுமையான கைகனியை கண்டதும் முனிவருக்கு பட்டாம்பூச்சி பறக்கத் தொடங்கியது. இருந்தும், "Will You Marry Me"என கைகனியே முன்வந்து கேட்டதால் தாடியைத் தடவியபடி அனைத்திற்கும் ஓகே என சம்மதம் தெரிவித்தார். பழம் நழுவி பாலில் விழுந்தது அதுவும் ஞானப்பழம். உடனே கைகனி முனிவரை தன்னுடன் உடலுறவு கொள்ள அழைத்தாள். 'இது அந்திக் கருக்கல் நேரம் இந்நேரத்தில் யார் ஒருவர் உறவுகொள்கிறார்களோ அவருக்கு விகாரமான குழந்தை பிறக்கும், குழந்தை குறையுள்ளதாக இருக்கும் எனவே இரவு வரை காத்திரு பிறகு கச்சேரியை வைத்துக் கொள்ளலாம்' என முனிவர் அவளது வேண்டுகோளை மறுத்தார். முனிவர் ஏதோ சதி செய்து தனது மனதை மாற்ற நினைக்கிறார் என சந்தேகப்பட்ட கைகனி அவரை மயக்க ஜோதிலட்சுமி, அனுராதா, சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி அஸ்திரத்தை கையில் எடுத்தார். வேறுவழியின்றி சென்சார் போர்டிக்கு பயந்து கதவை சாத்தினார் விச்ரவசு முனிவர்.

பத்துமாதங்களுக்குப் பிறகு பத்து தலைகள், இருபது கைகள், பயங்கரமான விழிகளுடன் முனிவர் சொன்னதுபோல ஒரு குழந்தை கைகனிக்கு பிறந்தது. குழந்தையைக் கண்ட அவள் அதனை தூக்கிக்கொண்டு முனிவரைத்தேடி ஓடினாள். தான் செய்த தவறை மண்ணித்து தவவலிமையை பயன்படுத்தி குழந்தையை மீட்க கெஞ்சினாள். முனிவர், அது இயலாத காரியம் வேண்டுமென்றால் அவனை அழகாக மாற்றுகிறேன் என பத்து முகத்தையும் அழகாக்கினார். மேலும் இவன் வலிமை நிறைந்தவனாகவும், யாரும் வெல்லமுடியாதவனாகவும் விளங்குவான் என்றும் "தசக்கிரீவன்" (தசம் என்றால் பத்து, கிரீவம் என்றால் கழுத்து) செல்லமாக தசமுகன் என பெயர் வைத்தும் அந்த குழந்தையை ஆசிர்வதித்தார்.

தசமுகன் வளர்ந்து டீன்ஏஜ் பருவத்தை அடைந்ததும் ஒருமுறை கைலாயத்திற்கு சென்றான். தன் பலத்தை சோதிக்க கைலாயமலையை தூக்கி கடலில் வீச நினைத்தான். அந்த மலையும் அதன் சுற்றுவட்டார ரியல் எஸ்டேட்டும் சிவபெருமானுக்கு சொந்தமானதால் அவன் மலையை தூக்கும்போது சிவபெருமான் தன் கட்டைவிரலால் மலையை அழுத்தினார். தசமுகனின் இருபதுகைகளும் மலையின் இடுக்கில் மாட்டிக்கொள்ள வலி பொறுக்காமல் அவன் கதறி அழத் தொடங்கினான். அவனது அழுகை உலகையே அச்சுருத்தும்படி கேட்டுக்கொண்டே இருந்தது. வழிப்போக்காக வந்த முனிவர் ஒருவர் சிவனின் கோபத்தை தனிக்க அவரது பேவரிட் சாமகானப் பாடலை பாடு சிவன் மனம்மிறங்கிவிடுவார் என ஐடியா கொடுத்துச் சென்றார். தசமுகனும் சாமகானத்தைப் பாட சிவன் உள்ளம் குளிர்ந்து அவனை விடுவித்தார். மேலும் நீ வலிதாங்காமல் உலகமே நடுங்க அழுததால் இன்றுமுதல் இராவணன் (அழுதுகொண்டே இருப்பவன்) என அழைக்கப்படுவாய் என ஆசி கூறினார். அன்றுமுதல் இராவணன் சிவபெருமானின் ஒப்பற்ற பக்தராக விளங்கினான்.

இராமாயணக் கதையின்படி இராவணன் இலங்கையை ஆண்ட மன்னன். விபீடணன், கும்பகர்ணன் மற்றும் சூர்ப்பனகை மூவரும் உடன் பிறந்தவர்களாவார், அவனது மனைவி மண்டோதரி இவர்களுக்கு இந்திரஜித், மாயசுரன் என்ற இரண்டு மகன்கள் உண்டு. சீதையின் மேல் ஆசைப்பட்டு அவளை கடத்தி வந்து அனுமாரை வம்பிழுத்து இராமண் இலட்சுமணனிடம் சண்டை போட்டு மீதிக்கதை திரைக்கதை கிளைமேக்ஸ் நமக்குத் தெரிந்ததே.

திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் 1946 -ல் "புலவர் குழந்தை" என்பவர் "இராவண காவியம்" என்னும் கவிதை நூலை படைத்தார். அதில் இராவணனை கதாநாயகனாகவும் இராமணை வில்லனாகவும் சித்தரித்து இராமயணத்தை எதிர்மறை சிந்தனையில் எழுதியிருந்தார். அதன்படி இரண்டாம் கடல்கோளுக்குப் பின் தோன்றிய இலங்கையில் விச்சிரவாவு என்ற மன்னன் தமிழகத்தினை ஆண்டுவந்தான். அவரது மனைவியின் பெயர் கேசகி இவர்களுக்கு இராவணன், கும்பகர்னன், விபீடணன் என மூன்று ஆண்பிள்ளைகளும் காமவள்ளி என்ற ஒரு பெண்குழந்தையும் பிறந்தனர். தம் தந்தையின் மறைவிற்குப் பிறகு தமிழகத்தை மூத்தவன் இராவணன் ஆண்டு வந்தான். சிறந்த சிவபக்தனாக விளங்கிய அவன் தமிழ்மொழியை வளர்ப்பதிலும் பங்குவகித்தான். கலைகள் பலவற்றை கற்றும் நூல்கள் பல பயின்றும் ஒப்பற்றவனாக விளங்கினான்.

ஒருமுறை இராவணன் சம்மருக்கு மலைப்பிரதேசம் பிக்னிக் சென்றிருந்தான். அங்கு முல்லை நாட்டு மன்னன் மாயோன் என்பவரின் மகளைப் பார்த்ததும் மனதை பரிகொடுத்தான். அதுவரை பாஸ்வேர்ட் தெரியாமல் மூடியிருந்த அவனது காதல் போல்டர் வண்டார்குழலி என்ற பெயரை கேட்டதும் சட்டென திறந்தது.

யாரோ இவள்தான் எவ்வூரோ
    அயலோ இக்குன் றினளோதான்
பேர்ஏ தோயா ரோஇவளைப்
     பெற்றோர் பருவம் உற்றனளோ
ஓரோன் நானே அதுவன்றி
      ஒப்பொன் பானும் உடையாளோ
காரோ மானாக் கருங்குழலாள்
      கருத்தும் எதுவோ அறியேனே

- என கவிதையும் எழுதத் தொடங்கினான். கவிதை முற்றி மன்னிக்கைவும் காதல் முற்றி வண்டார்குழலியை முறைப்படி திருமணம் செய்துகொண்டு காதல் உணர்வில் சிறந்தவனாகவும் நல்ல இல்லற வாழ்க்கையும் வாழ்ந்து வந்தான்.

வடநாட்டிலிருந்து ஆரியர்கள் தமிழகக்திற்கு வந்தனர். அவர்களில் சில முனிவர்கள் உயிர்ப்பலி கொடுத்து யாகங்களை நடத்தினர். அதனை தடுப்பதற்காக இடைவள நாட்டை ஆண்டுவந்த அரக்கர்குல தமிழ் அரசியான தாடகை என்பவள் இராவணனின் உதவியை நாடினாள். அவனும் சுவாகு என்ற படைத்தலைவனையும் தனது சேனைகளையும் அனுப்பி வைத்தான். இதனால் முனிவர்களின் யாகம் தடைபட்டது. முனிவர்களின் தலைவரான கோசிகன் என்பவர் தன் பங்கிற்கு உதவிக்கு இராமண் பிரதர்ஸ் & கோ வை அனுகினார். யாகம் மீண்டும் தொடர அதனைத் தடுத்த தாடகை சுவாகு மாரீசன் மூவரையும் அவர்களது படையையும் இராமண் பிரதர்ஸ் கொண்றனர். இதனால் இராமணுக்கும் இராவணனுக்கும் பகை மூண்டது. இராவணன் தன் தங்கை காமவள்ளியை பாதுகாக்க கரன் என்பவனை நியமித்திருந்தான். அந்த கரனையும் இராமண் அழித்து காமவள்ளியை தன் இச்சைக்கு இணக்க வற்புறுத்தினான். காமவள்ளி இராமணின் ஆசைக்கு மறுக்க அவளது உறுப்புகளை வெட்டி கொண்றான். தனது ஒரே தங்கையைக் கொண்ற இராமணை பழிதீர்க்க சீதையை கடத்துகிறான் இராவணன். இருந்தும் அவளை கண்ணியமாக நடத்துகிறான். பிறகு இராமண் சூழ்ச்சிகளை செய்து இராவணனை அழித்து சீதையை மீட்பதாக இராவணகாவியத்தில் புலவர் குழந்தை எழுதியிருந்தார்.


இராமகாவியமாகட்டும் இராவணகாவியமாகட்டும் இரண்டிலும் பொதுவாக இராவணன் இலங்கையை ஆண்ட மன்னனாக சித்தரிக்கப்பட்டுள்ளான். இலங்கையில் இராவணனை கடவுளாக வழிபட்டு வருகின்றனர். பல இடங்களில் அவருக்கு தனியே கோவில்கள் இருப்பதின் மூலம் இதனை அறியலாம். இராவணன் இலங்கையை ஆட்சி செய்த காலம் பொற்காலமாக விளங்கியிருக்கிறது. இலங்கையில் உள்ள இராவண நீர்வீழ்ச்சி, இராவண வெட்டு, திருக்கோதீஸ்வரம், திருக்கோணேச்சரம், சிகிரியாக்  குன்றம், கதிர்காமத்திலுள்ள சில இடங்களில் கிடைத்த ஆதாரங்களில் இராவணன் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருக்கின்றன. இராவணன் சிறந்த சிவபக்தனாக இலங்கை முழுவதும் பல சிவாலயங்களை எழுப்பியிருக்கிறான். இலங்கை என்றும் அழியாமல் இருக்க ஒருமுறை சிவபெருமானை நோக்கி இராவணன் நீண்ட தவம் புரிந்தான். தவத்தில் மகிழ்ந்த சிவன் அவனுக்கு ஆத்ம லிங்கத்தை ஒரு கண்டிஷனுடன் பரிசாக தந்தார். இதை இலங்கையில் வைக்கும் வரை வேறெங்கும் தரையில் வைக்காதே என அறிவுறுத்தி அனுப்பினார். இராவணன் அதனை தூக்கிக்கொண்டு இலங்கை வரும்வழியில் தேவர்கள் சூழ்ச்சி செய்து அதனை லபக்கிக் கொண்டனர் என்ற கதை இன்றளவும் இலங்கை மக்களால் நம்பப்படுகிறது. உடல்கூறு, மலை வாகடம், மாதர் மருத்துவம், நாடி, எண்வகை, நஞ்சு மருத்துவம் போன்ற 27 மருத்துவ நூல்களை எழுதி இராவணன் சிறந்த மருத்துவனாகவும் விளங்கியிருக்கிறான்.


இந்தியாவைப் பொருத்தவரை இராமணே கதாநாயகனாக இருந்தாலும் நொய்டா, ஜோத்பூர், கான்பூர், காக்கிநாடா ஆகிய நகரங்களில் இராவணனுக்கு தனி கோவில்கள் உள்ளன. இராவணன் பிறந்த இடம் உத்திரபிரதேசத்தில் உள்ள நொய்டாவில் "பிஸ்ரக்ஹ்" என்னும் ஊரில் இருக்கிறது. இங்குதான் இராவணனின் தந்தை விச்ரவசு முனிவர் வாழ்ந்ததாகவும் இங்குள்ள கோவிலில் அவர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் இருக்கிறது எனவும் நம்பப்படுகிறது. இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படும் தசரா பண்டிகையின் கடைசிநாள் இராவணணின் மறைவை அனுசரிப்பதற்காகவே நடத்தப்பட்டு வருகிறது. இராவணன் சத்திரியன் இல்லை இதிகாசப்படி பிரம்மாவின் வழிதோன்றல் விச்ரவசு முனிவரின் மகன். அவன் சுத்த பிராமணன் அதற்குச் சான்றாக இராவணின் கதை, நாடகங்கள் மற்றும் சில சிலைகளில் அவன் பூநூல் அணிந்திருப்பதைக் காணலாம் என்ற கூற்றும் சிலரிடம் நிலவுகிறது. குஜராத்தில் உள்ள ஜோத்பூர் மாவட்டத்தின் மாண்டூர் கோவிலில் பூஜை செய்யும் தேவ் என்ற பிராமண இனத்தவர்கள் இராவணின் வழித்தோன்றலாக இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

இராவணன், கும்பகர்ணன், விபீடணன் மூவரும் கடவுளை நோக்கி நீண்ட தவம் புரிந்தனர். அவர்களில் ஐந்து புனித நெருப்புகள் சூழ ஆயிரம் வருடங்கள் காற்றை மட்டும் உட்கொண்டு ஒற்றைக்காலில் நின்று தவமிருந்த இராவணன் உச்சகட்டமாக தனது பத்துத்தலைகளை ஒவ்வொன்றாக வெட்டி நெருப்பில் போடத் தொடங்கினான். அவர்ககளது இந்த தவத்தின் வலிமையில் மகிழ்ந்த பிரம்மா அவர்கள்முன் தோன்றி சாகாவரத்தை தவிர்த்து வேறு வரங்களை கேளுங்கள் குழந்தைகளே என ஆப்ஷன் கொடுத்தார். இராவணன் கர்ந்தவர்கள், தேவர்கள், அசுரர்கள், யக்ஷகர்கர், ராட்சதர்கர் மற்றும் பாம்பு போன்ற எந்த உயிரிணங்களாலும் எனக்கு மரணம் நிகழக்கூடாது என வேண்டினான். பிரம்மாவும் அதற்கு சம்மதித்து மனிதர்களாலும் உனக்கு மரணம் வராது, நீ சிறந்த வீரனாய் வெல்லமுடியாத சாம்பியனாய் விளங்குவாய் என வரம் கொடுத்து தவத்தில் இழந்த அவனது தலைகளையும் திருப்பிக் கொடுத்தார். மேலும் இருள் சூழ்ந்த உறக்கத்தை கும்பகர்ணனுக்கும் எதிரிகளை மதிக்கும் அளவிற்கு நேர்மை குணத்தை விபீடணனுக்கும் அளித்தகாக மகாபாரத கதையில் ஒருபகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்துத்தலை இருபது கைகள் வலிமை பொருந்திய உடல் என இராவணனின் தோற்றம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும். கோவில் பிரஹாரத்தை சுற்றிவரும்போது எதேச்சையாக கண்ணில்பட்ட அந்த சிலையும் அப்படித்தான் இருந்தது. அசுரனாக அரக்கனாக, அரசனாக, காதலனாக, சிவபக்தனாக, தவவலிமை கொண்டவனாக பல கலைகள் கற்ற பண்டிதனாக, வீணை வாசிப்பதில் வல்லவனாக, மருத்துவனாக, தமிழ் மொழிக்கு தொண்டு செய்தவனாக அவரைப்பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டபோது மேலும் என்னை பிரம்மிக்கவே வைத்தது. எனது ஒற்றைத்தலையும் தப்பித்தது.