☰ உள்ளே....

தீபாவளி பட்டாசு...அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து சூரியனை எழுப்பி குட்மார்னிங் ஹேப்பி தீபாவளி சொல்லிவிட்டு, அண்டா நிறைய கொதிக்கும் வெந்நீரில் எண்ணெய் தேய்த்து குளித்து, பற்கள் தந்தியடிக்க குளிரில் நடுங்கியபடி புதிதாக எடுத்த ஜட்டி பனியன் தொடங்கி மஞ்சள் பூசி சாமிக்கு படைத்த ஆடைகள் அனைத்தையும் உடுத்திக்கொண்டு, நெற்றி நிறைய விபூதி பட்டையோடு அம்மா அப்பா காலிலும் போட்டோவில் சிரிக்கும் தாத்தா முறைக்கும் பாட்டி காலிலும் விழுந்து வணங்கி, சீனி உருண்டையை வாய்க்குள்லேயும் சீப்பு முறுக்கை பாக்கெட்டிலும் அதக்கிக்கொண்டு, மங்கலான வெளிச்சத்தில் ஒரு 1000 வாலா சரவெடி பட்டாசை வைக்கும்போது தீபாவளி கலைகட்ட ஆரம்பிக்கும்.

அணுகுண்டு லெட்சுமி வெடி கனேஷ் வெடி என பெரும் சப்பத்தோடு புஷ்விடும் சீனிப்பட்டாசு வரைக்கும் கொளுத்திப் போட்டுவிட்டு, பாஸ்பரஸ் மினிமினுக்கும் கையோடு சைக்கிளை மிதித்துக்கொண்டு பக்கத்து தெருவில் இருக்கும் அத்தைக்கு தீபாவளி பலகாரம் கொடுக்கும் சந்தடி சாக்கில் தேன்மொழி வீட்டிற்கு முன்பு ஒரு 8, மலர்விழி வீட்டிற்கு முன்பு ஒரு 8 என புது சட்டையைக் காட்டி 88 போட்டுவிட்டு திரும்பும்போது பாதி தீபாவளி முடிந்துவிடும். பட்டாசு சப்தத்திற்கு பயந்து ஓடிய தெருநாயும் ஊர்க் குருவியும் திரும்பலாமா? வேண்டாமா?  என யோசிக்கும் மந்தமான மதியப்பொழுதில் வெடிக்காத பட்டாசுகளைத் தேடி அதன் உள்ளிருக்கும் மருந்துகளை அணுசக்தி விஞ்ஞானி அளவிற்கு வகைபிரித்து கலந்து மொத்தமாகக் கொளுத்தி ஆனந்தப்படும் போது மொத்த தீபாவளியும் மகிழ்சியுடன் முடிந்திருக்கும்.

பள்ளி விடுமுறை பலகாரம் புதுத்துணி என எல்லாம் இருந்தும் பட்டாசுகள் மட்டுமே தீபாவளி கொண்டாட்டத்தை சிறப்பாக்குகின்றன. 40% முடிகள் நரைத்து அரை கிழவனான போதிலும் அந்த பால்யகால தீபாவளி நினைவுகள் வெடிக்காத பட்டாசு போல மனதில் இன்றும் இருக்கிறது. அந்த நினைவுகளோடு தீபாவளியின் மொத்த சந்தோஷங்களை ஒளித்து வைத்திருக்கும் பட்டாசை பிரித்துப் பார்க்கலாம் எனத் தோன்றியது.

பாஸ்பரஸ் (Phosphorus-Pb), சல்பர் (Sulpher- S), கார்பன் (Corbon-C), குளோரின் (Chlorine-Cl), பொட்டாசியம் (Potassium-K), மற்றும் ஆக்ஜிசன் (Oxigen-O2) இவைகளே பாட்டாசுகளின் முக்கிய மூலப்பொருட்களாகும். பாஸ்பரஸ் எரிபொருளாகவும், சல்பர் (கந்தகம்) ஒட்டும் பொருளாகவும் எரிபொருள் ஊக்கியாகவும் பயன்படுகிறது. கார்பன் கருப்பு நிற துகள்களாக எரிபொருட்களை பாதுகாக்கவும் வானவேடிக்கைகள் மற்றும் தீப்பொறிகளை மேலே செலுத்தவும் உதவுகிறது. குளோரின் ஆக்ஜிசனை நிலைநிறுத்தவும் பொட்டாசியம் வெடிமருந்து கலவைகளை கலப்பதற்காகவும் பட்டாசுகளில் சேர்க்கப்படுகிறது. இதனைத் தவிர்த்து எரிவதற்கு தேவைப்படும் ஆக்ஜிசனை பாட்டாசு காற்றிலிருந்து எடுத்துக்கொள்கிறது. 

இஸ்ட்ரோன்சியம் (Strontium-Sr) , கால்சியம் (Calcium - Cu), சோடியம் (Sodium - Na), பேரியம் (Barium - Ba), காப்பர் (Cupper - Cu), அலுமினியம் (Aluminium - Al), மெக்னீசியம் (Megnessium - Mg), ஜிங் (Zink - Zn), டைட்டானியம் (Titanium - Tn) போன்ற தனிமங்கள் சில உப்புகள் மற்றும் மேலே குறிப்பிட்ட முக்கிய மூலப்பொருட்களுடன் இணைந்து மத்தாப்பு மற்றும் வானவேடிக்கைகளுக்கு நாம் விரும்பும் வர்ணஜாலங்களைக் கொடுக்கிறது. இசுட்ரோன்சியம் நைட்ரேட், இசுட்ரோன்சியம் கார்பனேட், இசுட்ரோன்சியம் சல்பேட் சிவப்பு நிறத்தையும், கால்சியம் கார்பனேட், கால்சியம் குளோரைடு, கால்சியம் சல்பேட் ஆரஞ்சு நிறத்தையும், சோடியம் நைட்ரேட், சோடியம் ஆக்சலேட், சோடியம் கிரையோலைட் மஞ்சள் மற்றும் தங்க நிறத்தையும் கொடுக்கிறது. பச்சை நிறத்திற்கு பேரியமும் நீல நிறத்திற்கு காப்பர் II குளோரைடும் வெண்மை மற்றும் வெள்ளி நிறத்திற்கு அலுமினியமும் தயாரிப்பில் சேர்க்கப்படுகிறது. இதனைத் தவிர்த்து மெக்னீசியம் மத்தாப்புகளுக்கு வெண்மை நிறத்தைக் கொடுக்கவும் வான வேடிக்கைகைகள் பிரகாசமாக மின்னவும் உதவுகிறது. ஜிங் நீலம் கலந்த வெண்புகையை வெளியிடவும், டைட்டானியம் வெள்ளி நிற ஒளிரும் கதிர்களை வெளியிடவும் பட்டாசுகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

பல வேதிப்பொருட்கள் நிறைந்த பட்டாசுகள் காற்று, ஒலி, விலங்குகள், பறவைகள் என சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவித்தாலும் பட்டாசுகள் இல்லாத தீபாவளியும் அதன் நினைவுகளும் இனிமையாக இருக்காது எனதே தோன்றுகிறது.