☰ உள்ளே....

மக்கள் கலைஞர்."டேய்! டேய்! ஒரு நிமிசம் அத வைடா"- என கரண்டியை காட்டி மிரட்டி டிவி ரிமோட்டை பிடுங்கி சப்தத்தை அதிகப்படுத்திவிட்டு அடுப்படியில் ஏதாவது வேலை செய்துகொண்டே அம்மா முணுமுணுக்கும் பாடல்கள் ஏராளம். ஆனால் அப்பாவிற்கு என்ன பாடல் பிடிக்கும்? அவர் எப்போதாவது ஒரு பாடலை மெய்மறந்து பார்த்து கேட்டு ரசித்து பாடியிருக்கிறாரா என்பது சந்தேகமே. காலையில் சுப்ரபாதத்தோடு எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜையறையில் பய பக்தியோடு சப்தமில்லாமல் சில ஸ்லோகங்களை அவர் உச்சரிப்பார். மங்கள இசையும் கர்நாடக சங்கீதமும் அவருக்கு கொஞ்சம் பிடிக்கும். அதனைத் தவிர்த்து அவருக்கு பிடித்த திரைப்பட பாடல்கள் என்றால் அது ஜெய்சங்கர் நடித்த படங்களிலிருந்து இருக்கக்கூடும்.
எழுபதுகளின் தமிழ்சினிமாவின் நம்பர் ஒன் போட்டியில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி இவர்களோடு சீராக ஓடிக்கொண்டிருந்தவர் ஜெய்சங்கர். கொஞ்சம் விவரம் தெரிந்த அன்றைய இளைஞர்களின் சாய்ஸ் இந்த "சுப்பிரமணியன் சங்கர்". 1938 ஆம் ஜூலை 2 ஆம் நாள் சென்னையில் பிறந்து கல்லூரி படிப்பை முடித்த இவருக்கு "இரவும் பகலும்" (1965) என்ற திரைப்படத்தில் முதல் வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் "ஜோசப் தளியாத்" அவரது பெயரின் முதல் பகுதியை எடுத்துவிட்டு ஜெய்சங்கர் என மாற்றி வைத்தார். ஜெய் என்றால் வெற்றி என பொருள் அந்த வெற்றிக்காக படிக்கட்டுகளில் ஏறவும் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும் அவருக்கு சிறிது காலம் தேவைப்பட்டது. அவரது திரைப்படங்களில் விறுவிறுப்பிற்கு குறைவிருக்காது. காதல் காட்சிகள், சண்டைக் காட்சிகள் நகைச்சுவை, சஸ்பென்ஸ், கவர்ச்சி கலந்து அடுத்தது என்ன நடக்கும் என்ற இருக்கையின் நுணிக்கு இட்டுச்செல்லும் திரைக்கதை இருக்கும். CID மற்றும் போலிஸ் கதாபாத்திரங்களுக்கு தமிழ் சினிமாவில் தைக்கப்பட்ட கோட் சூட், யூனிபார்ம் இவருக்குத்தான் கணகச்சிதமாக பொருந்தியிருக்கிறது. அதனால் அவரை ரசிகர்கள் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என அழைத்தனர்.

வெள்ளிக்கிழமை தோறும் வெளியாகும் தமிழ் திரைப்படங்களில் ஜெய்சங்கரின் படம் கட்டாயம் இருக்கும். கையைக் கடிக்காத வசூலினால் தயாரிப்பாளர்கள் மத்தியில் வெள்ளிக்கிழமை நாயகனாக அவர் விளங்கினார். படம் சரியாக போகவில்லையா பரவாயில்லை எனது பாதி பணத்தை பிறகு வாங்கிக்கொள்கிறேன் என தயாரிப்பாளரின் கழுத்தை நெறிக்காத ஒரே ஹீரோ இவராகத்தான் இருக்கக்கூடும். அய்யா, அண்ணா என உள்ளுக்குள் வெறுப்பை வைத்துக்கொண்டு பழகும் அன்றைய திரையுலக பிரமுகர்களிடையே ஹாய், ஹலோ என படு இயல்பாக பேசக்கூடியவர் ஜெய்சங்கர். 150 படங்களுக்குமேல் கதாநாயகனாக நடித்து, முரட்டுக்காளை படத்தில் வில்லனாக தனது இரண்டாவது அத்தியாயத்தை தொடங்கி, பிறகு குணச்சிந்திர வேடங்களில் புகழ்பெற்று 3 ஜூன் 2000 ஆம் ஆண்டு இவர் மறைந்தார். உதவி செய்தவர்களை நான் மறைந்த பிறகு ஒருக்காலமும் தொந்தரவு செய்யக்கூடாது என தன் மகன்களுக்கு கட்டளையிட்டு, திரையுலகைத் தாண்டிய பொதுவாழ்க்கையிலும் மிக கண்ணியமாக வாழ்ந்தார். அதனால்தான் அவரை "மக்கள் கலைஞர்" என அனைவரும் போற்றுகின்றனர்.

இத்தகைய சிறப்புமிக்க ஒரு நடிகனின் ரசிகனாக அப்பா இருப்பது ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவரின் புண்ணியத்தில் C.I.D சங்கர், வல்லவன் ஒருவன், யார் நீ?, நீலகிரி எக்ஸ்பிரஸ், இரு வல்லவர்கள் என ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். பாலச்சந்தர் இயக்கிய நூற்றுக்கு நூறு திரைப்படத்தின் கிளைமேக்ஸ் தேடி டிவிடி கடைகளாக அலைந்திருக்கிறேன். இந்த பதிவை எழுதுவதற்கு முன் ஜெய்சங்கர் நடித்த படங்களிலிருந்து சில பாடல்களை சேமித்து, அப்பா மதியம் சாப்பிட்டுமுடித்து கண்ணசரும் வேலையில் ஒளிக்கச் செய்தேன். சோபாவில் படுத்திருந்த அவர் தலையணையை நிமிர்த்தி சாய்ந்து கைகளை பின்புறம் கட்டிக்கொண்டு பாடலை மெய்மறந்து கேட்கத் தொடங்கினார். ஒருசில பாடலை கடந்ததும் மெல்ல முணுமுணுத்தபடியே தூங்கிப்போனார்.

பிடித்த நடிகர், நடிகை, இசையமைப்பாளர், பாடகர், இருக்கிறார்கள் என்பது மட்டுமில்லாமல் கேட்ட மற்றும் கேட்கும் தருணங்களும் ஒரு பாடலை அழகாக்குகின்றன. அந்த தருணம் அவருக்கு கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.

அவர் ரசித்த பாடல்கள்.