அன்னா கரினினா.




இலக்கிய உலகின் இமயம் என போற்றப்படுபவரின் படைப்பு, நூற்றாண்டுகாலம் கடந்த பொக்கிஷம், உலக மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்ட நாவல். கலாச்சாரம் ரஷ்யா, உலக புகழ்பெற்ற காதல் கதை என்ற சிறப்புகளோடு இந்த புத்தகத்தை கையில் எடுத்தேன். காதல் என்றால் அழகும் அற்புதமும் உணர்சிகளுக்கான போராட்டமும் முடிவில் சோகமும் (அதுதானே காதலின் குணம்) நிறைந்திருக்கும் என்ற ஐயம் இருந்தது. மொழிபெயர்ப்பின் சிலந்திவலை சிக்கலில் நுழைந்து கவணமுடன் வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டு இந்த அற்புத நாவலை ஓர் இரவில் வாசித்து முடித்தேன்.

"முதலில் இழக்கத் தயாராகு பிறகு காதலிக்க தொடங்கு" என்ற உலக பழமொழி உண்டு அதற்கேற்ப கதையின் நாயகி காதலை தொடங்குகிறாள் தன்னையே இழக்கிறாள்.

ஆப்ளான்ஸ்கி (Stepan Stiva Arkadievich Oblonskiy) என்னும் செல்வச்சீமான் குழந்தைகள் பெற்று அழகு குறைந்துவிட்ட தன் மனைவிக்கு துரோகம் செய்துவிட்டு வேறொரு பெண்ணுடன் வாழ்க்கை வாழ்கிறான். அவனது செயலை அறிந்த மனைவி டாலி (Princess Daria Dolly Alexandrovna) குழந்தைகளுடன் கணவனை பிரிய முடிவு செய்கிறாள். இந்த குழப்பத்தில் இவர்கள் இருவரையும் இணைத்துவைத்து சமாதானப்படுத்த ஆப்ளான்ஸ்கியின் தங்கை அன்னா (Princess Anna Arkadievna Karenina) அங்கு வருகிறாள். சகோதரனின் குடும்பத்தில் சகஜநிலையை ஏற்படுத்திவிட்டு ஊர்திரும்பும் வேலையில் அன்னாவின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. உல்லாச பேர்வழியான விரான்ஸ்கி (Count Alexey Kirillovich) என்ற வாலிபன் அன்னாவிடம் மோகம் கொள்கிறான். ஏற்கனவே கிட்டி (Princess Ekaterina Kitty Alexandrovna Scherbackaya) என்ற பெண்ணை காதலிக்கும் அவன் அன்னாவிற்காக தனது உல்லாச போக்கையும் நடத்தையையும் மாற்றிக்கொண்டு மனதாற அவளை நேசிக்கத் தொடங்குகிறான். எட்டுவருட திருமண வாழ்கையில் அலுப்பும் கணவன் கரீன் (Count Alexy Alexandrovich Karenin) என்பவன்மீது கொண்ட வெறுப்பும் அன்னாவை விரான்ஸ்கியின் காதல் மீது தள்ளுகிறது. கணவன் கரீன் ஒருநிலையில் மாமனிதனாகவே செயல்படுகிறான் இருந்தும் அவனது இல்வாழ்க்கையில் இணங்காத அன்னா விரான்ஸ்கியிடம் தன்னை முழுவதும் ஒப்படைக்கிறாள்.

கட்டிய கணவன் ஒருபுறம், ஏழுவயது மகன் ஒருபுறம், காதல் ஒருபுறம், ஊரார் தூற்றும் ஏச்சுக்களும் ஒருபுறம் என அவளது உணர்ச்சிகளையும் அதனைத் தொடரும் போராட்டங்களும் நாவல் முழுவதும் பரவியிருக்கிறது. இதற்கிடையில் பிரபு லெவின் (Konstantin Kostya Dmitrievich Lyovin) என்பவன் கிட்டி என்பவளை காதலிக்கிறான். பிரபு லெவின் காதலிக்கும் கிட்டி விரான்ஸ்கியால் கைவிடப்பட்டவள் என தெரிந்தும் தனது உயரிய குணத்தால் அவளை ஏற்று திருமணமும் செய்துகொள்கிறான். இவர்களது காதலும் அதனைத் தொடர்ந்த வாழ்க்கையையும் நாவல் சுவாரசியமாக விளக்குகிறது. ஊரார் போற்றும் லெவின்- கிட்டி இருவரின் தூய காதலும் அதன் வாழ்வும், ஊரார் தூற்றும் அன்னா விரான்ஸ்கியின் காதலும் இருவேறு கோடுகளாக ஒரே நாவலில் பயணிக்கிறது. இடையில் வாரெங்கா என்ற அன்பும் மனிதநேயமும் கொண்ட ஒரு பெண்ணின் காதலும் அது நிறைவேறாத சோகமும் நம்மை கலங்க வைக்கிறது. அன்னா, கரீன், விரான்ஸ்கி, டாலி, ஆப்ளான்ஸ்கி, கிட்டி, லெவின், வாரெங்கா என்ற ரஷ்ய மனிதர்களின் வாழ்க்கையோடு ஆழ்ந்த காதலையும் அதனைத் தொடர்ந்த சிக்கலான மன ஓட்டத்தையும் இந்த நாவல் பிரதிபலிக்கிறது . அந்த காலகட்டத்தில் ரஷ்யாவில் வாழ்ந்த செல்வச்சீமான்களின் ஆடம்பர வாழ்க்கையையும் அவர்களது செயல்கள், எண்ணங்களையும் உள்ளது உள்ளபடி கலைத்தண்மையோடு விவரித்து அவர்களது போக்கிற்கு சாட்டையடி கொடுக்கிறது.

1875-1877 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்த நாவலை எழுதியவர் புகழ்பெற்ற இலக்கியமேதை "லியோ டால்ஸ்டாய்" (Leo Tolstoy). போரும் அமைதியும் என்ற காவியத்தை படைத்தபிறகு அவரால் எழுதி முடிக்கப்பட்ட அழகியல் நாவல் இது. செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த டால்ஸ்டாய் கிருஸ்துவமத போதனைகளில் நாட்டம் கொண்டவர். ஏழை எளிய மக்களிடம் அன்பு செலுத்துவது அவர்களுடன் சேர்ந்து தானும் உழைப்பது பிறருக்கு உதவி செய்வது என தன் வாழ்க்கை முழுவதும் கடைபிடித்தார் அதை தனது எழுத்துக்களிலும் காட்டினார். இந்த நாவலில் வரும் லெவின் கதாபாத்திரத்தினூடே தனது கருத்துக்களையும் விதைத்திருக்கிறார். நூற்றாண்டு கடந்த படைப்பு எனினும் இதை தமிழில் மொழிபெயர்த்தும் அரை நூற்றாண்டுகள் கடந்துவிட்டது. மனித உணர்வுகளை கண்ணாடியில் விழும் பிம்பமாய் வெளிப்படுத்தும் இந்த காதல்கதை புத்தகத்தை தவிர்த்து நாடகம் திரைப்படம் என பல வடிவங்களில் ஐந்து தலைமுறைகளைத் தாண்டியும் இன்றும் உயிர்ப்புடன் திகழ்கிறது. 2012 ஆம் ஆண்டு Joe Write என்பவரின் இயக்கத்தில் வெளிவந்த Anna Karenina திரைப்படம் இந்த நாவலை தற்போதைய தலைமுறைக்கு தக்கவாறு அழகாக காட்டியிருந்தது.


"பேனுமொரு காதலை வேண்டியன்றோ பெண்மக்கள்" என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப, காதல் கிடைத்துவிட்டால் ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுவதும் மகிழ்சியும், அதையே தவறவிட்டால் சோகமே முடிவாகும் என்பதையும் இந்த நாவலில் உணரலாம். கிளாசிக் வரிசை உலக இலக்கியங்களை அசைபோட தவறாமல் வாசியுங்கள்.