☰ உள்ளே....

பொனொபோ - ஒருலட்சம்விட்ட தாத்தா...நாம் யார்? நாமெல்லாம் எங்கிருந்து வந்தோம்?.
குரங்கிலிருந்து பரினாம வளர்ச்சிபெற்று மனிதன் வந்தான் என்பது அனைவரும் அறிந்ததே அதிலும் "Apes" என குறிப்பிடப்படும் கொரில்லா, சிம்பன்சி, உராங்குட்டான் இவற்றோடு நாம் நெருங்கிய தொடர்பில் இருக்கின்றோம். அந்தவகையில் மனிதனின் பண்புகளோடு 98-99.4 % ஒத்த அமைப்புடைய மற்றொரு குரங்கின் (சிம்பன்சியின் அப்டேட் வெர்சன்) இனத்தை கண்டுபிடித்துள்ளனர் அதுதான் "பொனொபோ Bonobo". இவைதான் நமது ஒன்றுவிட்ட தாத்தா மன்னிக்கவும் ஒருலட்சம்விட்ட தாத்தா. மாற்றம் அடையாத அந்த தாத்தாவின் மற்ற வாரிசுகளைப்பற்றி (நம் சொந்தங்களை) தெரிந்துகொள்ள நினைத்தால் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ காடுகளுக்குச் செல்ல வேண்டும். வாருங்கள் பயணிப்போம்.


1928 ஆம் ஆண்டு ஜெர்மனியை சேர்ந்த உடற்கூறு அறிவியலர் "Ernst Schwarz" என்பவர் பெல்ஜியத்தில் உள்ள Tervuren அருங்காட்சியகத்தில் இருந்த சிம்பன்சியின் மண்டையோட்டை ஆராய்ந்தார், சிறிய சிம்பன்சியின் மண்டையோடு என நினைத்திருந்த அது மற்றதை விட வேறுபட்டு காணப்பட்டது. அதனை நன்கு ஆராய்ந்த அவர் சின்பன்சியைப் போன்று வேறொரு குரங்கினம் இருப்பதாகவும், அதன் மண்டையோட்டின் அமைப்பு மனிதனோடு ஒத்துப்போவதாகவும் 1929 ஆண்டு தமது ஆய்வுகளை சமர்ப்பித்தார். அதற்குப்பின் 1933 ஆம் ஆண்டு அமேரிக்காவைச் சேர்ந்த "Harold Coolidge" மேலும் சில தகவல்களை சேகரிந்தார். "Robert Yerkes" என்ற அறிவியலர் DNA ஆய்வின் மூலம் சிம்பன்சிகளுக்கும் பொனொபோக்களுக்கும் உள்ள வேறுபாட்டை உலகிற்கு தெரியப்படுத்தினார். மனிதனின் நெருங்கிய சொந்தந்தைப் பற்றிய ஆராய்ட்சிகள் தொடர்ந்தவண்ணம் நடந்தது. இறுதியில் 1954- ஆம் ஆண்டு "Edward Paul Tratz" மற்றும் "Heinz Heck" என்பவர்கள் காங்கோ காடுகளில் வசிந்த குரங்கினத்திற்கு பொனொபோ என பெயர் வைத்து, நாம் யார்? நாமெல்லாம் எங்கிருந்து வந்தோம்? என்ற கேள்விக்கு பதிலும் அளித்தனர். காங்கோ ஆற்றின் அருகில் உள்ள "Bolobo" என்ற நகரின் தவறுதலான உச்சரிப்பின் "Bonobo" என்ற வார்த்தையே அந்த கேள்விகளுக்கு விடையாக அமைந்தது.


கருத்த உருவம், சிவந்த உதடு, சிறிய காதுமடல், எடுப்பான புருவங்கள், சற்று அகலமான மூக்கு, உடலில் தேவையான அளவு ரோமங்கள், 34-60 கிலோகிராம் எடை, 115 செ.மீ உயரம் என ஒரு பொனொபோ 40 வருடங்கள் உயிர்வாழக் கூடியது. சிம்பன்சியைவிட அளவில் சிறியதான இவை முதலில் "Pigmy Symbonsy" என அழைக்கப்பட்டது. சிம்பன்சியோடு ஒப்பிடுகையில் ஒரு ஆண் பொனொபோ ரித்திக் ரோஷன்-சல்மான்கான் அளவிற்கு திடகாத்திரமாகவும் ஒரு பெண் இலியானா-தமன்னா போன்று சிக்கெனவும் காணப்படும். நடக்கும்போதும், அமரும்போதும் ஒவ்வொன்றிர்க்கும் உள்ள தனித்தனியான முகத் தோற்றத்தினாலும், மேலே குறிப்பிட்ட உடல் அமைப்பாலும் இவைகள் சிம்பன்சிகளிடமிருந்து வேறுபட்டு மனிதனை ஒத்து காணப்படுகின்றன. பொனொபோக்கள் இலைகள் கனிகள் விதைகள் இவற்றையே மிகவும் விரும்பி உண்ணுகின்றன. வார விடுமுறை அல்லது ஒரு பண்டிகை தினத்தில் மட்டும் அணில்கள், டீயூக்கர் என்ற மான்கள் மற்றும் முதுகெலும்பில்லாத சிலவற்றை அசைவமாக சேர்த்துக் கொள்ளும் வழக்கம் இதற்கு உண்டு. மேலும் கரையான், ஈசல்கள், எறும்புகள் போன்றவை இவைகளின் நொறுக்குத் தீனி பட்டியலில் உள்ளது.


பொனொபோக்ககள் மனிதர்களைப் போலவே சமுதாய வாழ்க்கையை மேற்கொள்ளுகின்றன. ஆண்கள் உணவு சேகரிக்க அதிகாலையில் கூட்டமாக வெளியில் சென்று மாலை வீடு திரும்புவதும், அதுவரை பெண்கள் தங்கள் இருப்பிடத்தையும் குழந்தைகளையும் பராமரித்து கட்டியவனுக்காக காத்திருப்பதும், பகிர்ந்து உண்ணுதல், சுக துக்கங்களில் பங்கெடுத்தல், இரவு பத்துமணி செய்தி சேனல்களில் நடப்பதைபோல அன்றைய நிகழ்வுகளை வெட்டியாக விவாதித்து அரட்டையடித்தல் எனவும் வாழும் இவற்றின் சமுதாய வாழ்க்கை மற்ற குரங்கினங்களை ஒப்பிடுகையில் மேம்பட்டவையாக இருக்கின்றது. மேலும் மற்றவற்றைக் காட்டிலும் பிறர் நலனில் அக்கரை செலுத்தி, கருணையும் பொறுமையும் கொண்டு, சண்டை சச்சரவிற்குச் செல்லாமல் அன்பே சிவம் என அமைதியாகவும், காதல் என வந்துவிட்டால் மன்மதன் அம்பு எனவும் இவைகள் வாழ்க்கையை நடத்துகின்றன.


பெண் பொனொபோக்கள் ஆணைவிட சற்று சிறிய தோற்றம் கொண்டது இருந்தும் பெண்களே அவற்றின் சமுதாயத்தில் மேலாதிக்கம் செய்கின்றது (அங்கேயுமா?). மேலும் ஆண்- பெண் இவற்றிர்க்கிடையே ஆதிக்க போட்டி மற்றும் கருத்துவேறுபாடுகள் என்பது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. பொனொபோக்கள் தனித்தனி பெண்களிடம் கூட்டாக உடலுறவு செய்யும் பழக்கம் கொண்டது. இவைகள் மற்ற விலங்கினங்களைக் காட்டிலும் மிக அபூர்வமாக மனிதர்களைப் போலவே முகத்தை பார்த்து மல்லாந்து படுத்து உடலுறவில் ஈடுபடுகின்றன (Face to Face Position). தொடுதல் முத்தமிடல்  ------ -------- ------போன்ற காமசூத்ரா விளையாட்டிலும் கெட்டிக்காரர்களாக இருக்கின்றன. ஆண்-ஆண் மற்றும் பெண்- பெண் பாலுறவு நடவடிக்கையும் சுயஇன்பம் காணும் பழக்கமும் இவைகளுக்கு உண்டு. ஒரு பெண் பொனொபோ ஐந்து வருடத்திற்கு ஒருமுறை என்ற இடைவெளியில் ஒரேஒரு குட்டியை மட்டும் பிரசவிக்கிறது, அதனை தோளில் சுமந்தபடி பல வருடங்கள் பாதுகாக்கிறது. மற்ற விலங்குகளைப் போலில்லாமல் தாய் மகன் உறவு அதன் வாழ்நாள் முழுவதும் தொடர்வதாகவே இருக்கிறது.


பொனொபோக்கள் கண்ணாடியைக் கொண்டு தன்னைத்தானே சுய பரிசோதனை செய்யும் MSR (Mirror Self Recognition Test) சோதனையில் தேர்ந்தவை. அவைகள் ஒவ்வொன்றும் தனித்தன்மையான குரலில் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன. முகபாவனைகளாலும் செய்கையாலும் அவைகள் கட்டளையிடுகின்றன. அதேபோல் மனிதனின் மொழியையும் கட்டளைகளையும் புரிந்து நடக்கும் திறன் பொனொபோக்களுக்கு உண்டு. Great Apes Trust என்ற அமைப்பினர் "Kanzi" மற்றும் "Panbanisha" என்ற இரு பொனொபோக்களுக்கு 3000 மேற்பட்ட வார்த்தைகளை பயிற்றுவித்தனர் அதனை அந்த மொனொபோக்கள் வரைகணிதக் குறியீட்டைக் கொண்டு மிகச் சரியாக அடையாளம் காட்டின. ஒரு பொனொபோவை அதிமான கட்டணம் வசூலிக்கும் வசதியான தனியார் பள்ளியில் சேர்த்தால் மாநிலத்தில் முதல்மதிப்பெண் பெற வாய்ப்பும் இருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி சுமார் 29000 - 50000 பொனொபோக்கள் காங்கோவில் வாழ்வதாகவும் ஒரு நூறு மற்ற மிருகக்காட்சிசாலையிலும் வாழ்வதாக கணக்கிட்டுள்ளனர். காடுகளை அழித்தல், வேட்டையாடுதல், உள்நாட்டு கலவரம், மாறும் பருவநிலை என பொனொபோக்கள் அழியும் நிலையில் உள்ளது. DNA மாதிரி, உடல் அமைப்பு, உணவுப் பழக்கம், சமுதாய வாழ்க்கை, உடலுறவு, இனப்பெருக்கமுறை, தாய் சேய் பிணைப்பு, சிந்திக்கும் திறன் இவற்றை காணும்பொழுது பொனொபோக்கள் மனிதர்களை ஒத்தவை என்பது புலனாகிறது. "தாமே முதல்தரமானவன்"என்ற எண்ணமும், தாம் வாழ மற்ற இனத்தை அழிக்கும் குணமும் மட்டுமே மனிதர்களையும் பொனொபோக்களையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.