புத்தகப்புழு.

அக்கரை உள்ள பெற்றோரும், அலமாறி நிறம்பிய புத்தகங்களும் வாய்க்கப் பெறும் குழந்தைகளே அதிஷ்டசாலிகள். - ஜான் மெக்கலே.



வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் நாம் நினைவு வைத்துக் கொள்ளுவதில்லை. ஒவ்வொரு நாளும் விசேசமாக இருந்ததில்லை. பிறப்பு, இறப்பு, உறவு, நட்பு, காதல் சோகம், மகிழ்ச்சி என நம் வாழ்வில் சில முக்கிய தருணங்களையும் அதன் நாட்களையும் மட்டுமே நினைவில் வைத்திருக்கிறோம். அந்த நினைவுகளை வாழ்க்கையின் முக்கிய புள்ளியாகக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். நாம் வாசிக்கும் புத்தகங்களும் அவ்வாறானதுதான் எல்லா புத்தகங்களும் முக்கியமானதல்ல. நம் வாழ்க்கைக்கு ஊக்கம் தரும் புத்தகங்களே நம்மில் நினைவிலிருக்கும் அதுவே வாழ்க்கையை சுழற்ற உதவும்.

வாழ்க்கை மற்றும் வாசிப்பு இந்த இரண்டிற்கும் இடையேயான தொடர்பை அன்புக்கு ஏங்கும் 12 வயது சிறுமியின் வாயிலாக விளக்கும் ஜெர்மன் நாட்டு திரைப்படம்தான் "The Book Thief".

1938 ஆம் ஆண்டு Liesel தன் தாய் மற்றும் தம்பியுடன் ஜெர்மனிக்கு பயணம் செய்து கொண்டிருப்பதில் கதை தொடங்குகிறது. நோய்வாய்ப்பட்ட அவளது தம்பி பயணத்தின் பாதியிலே இறக்க அவனை அடுத்த நிறுத்தத்தில் புதைக்க ஏற்பாடு செய்கின்றனர். அப்போது அங்கு வேலை செய்யும் ஒருவர் தன் புத்தகத்தை தவறவிட Liesel முதல் முறையாக ஒரு இறப்பு மற்றும் ஒரு புத்தகத்தை அனுபவமாக பெறுகிறாள்.




ஜெர்மனியை வந்தடையும் Liesel, Rosa Hubermann மற்றும் Hans Hubermann தம்பதிகளுக்கு தத்துக் கொடுக்கப்படுகிறாள். பக்கத்து வீட்டில் வசிக்கும் Rudy Steiner அவளோடு நட்புடன் பழகுகிறான், முதல்நாள் பள்ளிக்கு செல்லும் Liesel படிக்கவும் எழுதவும் முடியாமல் சிரமப்படுகிறாள் வளர்ப்புத் தந்தையான Hans அவளுக்கு எளிமையான புத்தகத்தை வாசிக்க கற்றுக்கொடுக்கிறார். ஹிட்லரின் Hitler Youth Moment இயக்கத்தில் சேரும் Liesel ஜெர்மன் முழுவதும் புத்தகங்களை எரிக்கும் போராட்டத்தில் வேண்டா விருப்பாக கலந்துக்கொள்கிறாள். நகரத்தின் பொதுவான இடத்தில் எரியூட்டப்பட்ட புத்கத்திலிருந்து சிலவற்றை பொறுக்குகிறாள். இதற்கிடையில் சலவை செய்த துணிகளை நகரத்தின் மேயர் வீட்டிற்கு சென்று கொடுத்துவரும் தருணத்தில் மேயரின் மனைவி Lisa Hermann -ன் நட்பு கிடைக்கிறது. மேயரின் மனைவி யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைத்திருக்கும் புத்தக அறையில் எப்போதும் நுழையலாம் என்ற அனுமதியையும் Liesel பெறுகிறாள். (ஹிட்லர் பல புத்தகங்களுக்கு நாடுமுழுவதும் தடை செய்திருந்தார் அவ்வாறு தடை செய்யப்பட்ட புத்தகங்களை வைத்திருப்பவர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்).

புத்தகங்களைப் போலவே ஜெர்மன் முழுவதும் யூதர்களை அழிக்கும் படலம் தொடங்குகிறது. Hans -ன் நண்பரின் மகன் Max Vandenburg என்ற இளைஞன் Liesel வீட்டிற்கு வருகிறான். யூதரான Max - ஐ வீட்டிற்கு கீழே உள்ள பதுங்கு அறையில் Hans தம்பதிகள் ஒளித்து வைக்கின்றனர். Max உடன் நட்போடு பழகும் Liesel நோய்வாய்பட்ட அவன் படிப்பதற்காக மேயர் வீட்டிலிருந்து தெரியாமல் ஒரு புத்தத்தை எடுத்து வருகிறாள். Max அதை படித்துக்காட்ட புத்தகங்களுடன் Liesel நெருக்கமாகிறாள். ஒருநாள் அவ்வாறு புத்தகத்தை எடுத்துவரும் போது பக்கத்துவீட்டு Rudy பார்த்துவிட Liesel நடந்ததை ஒப்புக்கொள்கிறாள் Rudy யும் நட்போடு ரகசியம் காக்கிறான். தினமும் புத்தகம் திருடும் பழக்கம் தொடர்கிறது Max-ன் உதவியுடன் Liesel புத்தக உலகத்திற்குள் நுழைகிறாள்.

Liesel வசிக்கும் தெருவில் உள்ள ஒரு யூத குடும்பத்தை ஜெர்மானியர் கொடுமைப் படுத்துகின்றனர். இதனை பார்க்கும் அவள் ஹிட்லர் மீது வெறுப்பு கொள்கிறார் யூதர்களைப்பற்றி தெரிந்துக் கொள்கிறாள். ஜெர்மன் காவலர்கள் Liesel வீட்டையும் சோதனை செய்கின்றனர் அங்கிருக்கும் Max இதற்குமேல் தங்கியிருப்பது தர்மசங்கடம் என உணர்ந்து வெளியேருகிறான் Max -ன் பிரிவு Liesel க்கு பெரும் இழப்பாக இருக்கிறது. ஓரளவிற்கு வாசிக்கவும் புத்தகங்களையும் பழகிய அவள் தன் வாழ்க்கையை The Book Theif என்ற தலைப்பில் எழுதத் தொடங்குகிறாள்.


இரண்டாம் உலகப்போர் தொடங்குகிறது Rudy யின் தந்தை இராணுவத்திற்குச் செல்கிறார். போர் தீவிரமடைகிறது ஜெர்மனி போரில் தோற்றுக் கொண்டிருக்கும் தருணம் Liesel வீட்டிலுள்ள பகுங்கு அறையில் எழுதிக் கொண்டிருக்கிறாள். திடீரென எதிரி விமானங்கள் அவள் வசிக்கும் தெரு முழுவதும் குண்டுமழைப் பொழிய அனைவரும் இறக்கின்றனர். பகுங்கு அறையிலிருந்த Liesel மட்டும் உயிர் தப்பிக்க இறந்துகிடக்கும் Hans தம்பதிகளைக் கண்டு கதறுகிறாள். தன் நண்பனான Rudy யும் இறக்க ஒட்டுமொத்த அன்பையும் தொலைக்கிறாள். தான் எழுதிய புத்தகம் மட்டும் அவளிடம் இருக்க மேயரின் மனைவி மட்டும் அவளுக்கு ஆறுதலாக இருக்கிறாள். இரண்டாம் உலகப்போர் முடிகிறது இரண்டு வருடங்களுக்குப்பின் Rudy யின் தந்தை வைத்திருக்கும் தையல் கடையில் Liesel வேலை செய்துகொண்டிருக்கிறாள் Max அங்கு வருகிறான் Liesel ஓடிச்சென்று அவனை கட்டிக்கொள்ளுகிறாள். திரைப்படம் நிகழ்காலத்திற்கு மாறுகிறது Liesel குடும்ப புகைப்படங்களை காட்டுகிறார்கள் தனது 90 வது வயதில் கனவன் குழந்தைகள் பேரக்குழந்தைகள் குடும்பம், மகிழ்ச்சி என அவள் ஒரு சிறந்த எழுத்தாளராக வாழ்ந்து மறைந்ததாக திரைப்படம் முடிகிறது.
Trailer.

Geoffrey Rush மற்றும் Emily Watson போன்ற மிகப்பெரிய நடிகர்கள் இருந்தும் Liesel ஆக நடித்த Sophie Nelisse அனைவரையும் கவருகிறாள். அன்புக்கு ஏங்கித் தவிக்கும்போதும் தன் நேசித்தவர்களை இழக்கும்போதும் மொத்த உணர்சிகளையும் முகத்தில் பிரதிபலிக்கிறாள். மெல்லிய சாரலாக வீசும் John Williams இசைக்கு அழகாக காட்சியமைத்திருக்கிறார் Florian Ballhaus. 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எழுத்தாளர் Markus Zusak - ன் The Book Theif என்ற புத்தகத்தை தழுவி இந்த திரைப்படத்தை இயக்கியவர் Brian Percival. திரைப்படம் முழுவதும் Liesel தான் நேசித்த உறவுகளை இழந்து கொண்டே வருகிறாள் இறப்பு அவளை துரத்திக்கொண்டே தொடர்கிறது. புத்தகம் மட்டும் அவளோடு நெருக்கமாக இருக்கிறது அதுவே அவளது வாழ்க்கையை சுழற்றுகிறது. புத்தகம் வாசிப்பதின் பெருமையையும் அது எப்படி வாழ்வியலோடு கலந்திருக்கிறது என்பதையும் விவரிக்கும் இந்த திரைப்படத்தை ஒருமுறை தவறாமல் தரிசியுங்கள்.