☰ உள்ளே....

Guiding Light - நீ...ண்ட மெகா சீரியல்.பெரும்பாலான வீடுகளின் டிவியின் நேரங்களை மெகா சீரியல்களே ஆட்கொள்(ல்)ளுகின்றன. வாரத்தில் ஒருநாள் அரைமணிநேரம் ஆரம்பித்த சீரியல் தற்போது ஆறுநாள் இருபது மணிநேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது (தனி சேனல் தொடங்கினாலும் தொடங்குவார்கள்). கதை பற்றாக்குறைக்காக ஹிந்தி ஆங்கிலம், கொரியன் என மொழிபெயர்ப்பு செய்யப்பட்டும் சில மெகா சீரியல்கள் தற்போது ஓடிக் கொண்டிருக்கின்றன. இனி அரேபியன், பெர்சீனியன், மற்றும் ஊமை பாஷையில் இருந்துகூட மெகா சீரியல்கள் வர வாய்ப்பிருக்கிறது. ஒவ்வொரு சேனலிலும் எந்த சீரியல்? எத்தணை மணிக்கு? ஒளிபரப்புகிறார்கள் இரண்டு வருடமாக நீளும் கதைதான் என்ன?  ஒவ்வொரு கதாபாத்திரங்களின் பிரச்சனை என்ன? நேற்று என்ன நடந்தது? நாளை என்ன நடக்கும் ? கதை எங்கு போகிறது? என அப்டேட் தகவல்களை துள்ளியமாக நினைவில் வைத்திருப்பது என்பது ஒரு கலைதான். இந்த மெகா சீரியல் கலை ரசிகர்களுக்கு சவால் விடக்கூடிய விதமாக ஒளிபரப்பட்ட டிவி சீரியல்தான் "Guiding light" இதுவே உலகின் மிக நீ...ண்ட மெகா சீரியல்.

1937 ஆம் ஆண்டு "Irna Phillips" என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த கதை NBC என்ற ரேடியோவில் தினமும் 15 நிமிடங்கள் ஒலிபரப்பப்பட்டது. பிறகு டிவி புழக்கத்திற்கு வந்த பிறகு ஜுன் 30 1952 ஆம் ஆண்டு CBS Television சேனலுக்கு மாற்றப்பட்டது. 1968 ஆம் ஆண்டுவரை வெறும் 15 நிமிடங்கள் ஓடிய இந்த சீரியலை 1977 -ல் 30 நிமிடங்களுக்கு மாற்றினார்கள். இடையில் சில சில மாற்றங்களும் தொழில்நுட்பங்களும் உருவாக 1977 முதல் 60 நிமிடங்களுக்கு மாற்றி, இந்த சீரியலை 18 செப்டம்பர் 2009 -ல் போதும் சாமி என முடித்துக் கொண்டனர். ரேடியோவில் 2500 எபிசோடுகள், டிவியில் 15762, மொத்தம் 18262 எபிசோடுகள் மற்றும் 57 சீசன்களை கலக்கிய இந்த சீரியலின் கதைதான் என்ன?

Friedrich Papa Bacler உலகப்போரின்போது ஜெர்மனியில் இருந்து அகதியாக அமேரிக்காவிற்கு வருகிறார். அவருக்கு Bill, Mera மற்றும் Trudy என மூன்று குழந்தைகள் இவர்கள் வளர்ந்து ஆளாகின்றனர். Bill குடிக்கு அடிமையாகின்றான் பிறகு திருந்தி நல்வழி வாழ்கின்றான். மூவருக்கும் திருமணம் ஆகிறது குழந்தைகள் பிறக்கிறது. அவர்களும் வளர்கிறார்கள் அவர்களுக்கும் திருமணம் ஆகிறது குழந்தைகள் பிறக்கிறது அவர்களும் வளர்கிறார்கள். குடும்பம், குட்டி குழப்பம், கசமுசா என நாம் பார்க்கும் அதே அரைத்த மாவில் நான்கு தலைமுறைக்கு இ...ழுத்து தோசை சுட்டிருக்கிறார்கள்.

57 வருடங்களில் 1653 முக்கிய கதாபாத்திரங்கள், 39 இயக்குனர்கள், 59 தயாரிப்பாளர்கள், 19 இசையமைப்பாளர்கள், 42 ஆர்ட் டைரக்டர்கள், 13 எடிட்டர், 39 மேக்கப்மேன்கள் என தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிந்த இந்த சீரியலை 1952 முதல் 2008 வரை Procter & Gamble நிறுவனத்தார் ஒருவர் மட்டுமே வழங்கி வந்தனர். ஆனால் இந்த மெகா சீரியலை தொடர்ச்சியாக முழுவதும் பார்த்த ஒருவர் இருக்கிறாரா? எனக் கேட்டால் .....?