தூண்டில் கதைகள்.



பெரிய வாசிப்பிற்கு சற்று சலிப்பாக இருந்தது நூலகத்திலிருக்கும் என்பதுகளில் வெளிவந்த சில குமுதம் வார இதழ்களை தூசித்தட்டினேன் பால்யகால நினைவுகள் எச்சில் விரலில் ஒட்டி புரண்டுக் கொண்டிருந்தது.
வெள்ளிக்கிழமை வெளிவரும் வார இதழ்கள் அடுத்தநாள் மதியம்தான் வீட்டிற்கு வரும். அத்தை குமுதம் வாங்குவாள், எதிர்விட்டு அம்பி அண்ணா ஆனந்தவிகடன், உமையாள் அக்கா தேவியும் ராணியும், சோமு மாமா குங்குமம். ரேடியோவைத் தவிர்த்த அந்த காலகட்டத்தில் எங்கள் தெரு முழுவதும் சுற்றிவரும் இந்த வார இதழ்களும், தினசரி செய்தித்தாள்களும் மட்டுமே பொழுதுபோக்காக இருந்தது, அதுவே உன்னதமாகவும் இருந்தது.
தலையரங்கம், சிறுகதை, தொடர்கதை, ஜோக்குகள் என அனைத்து வார பத்திரிக்கைகளும் அச்சுஅசல் ஓரே மாதிரியான வடிவத்தைக் கொண்டிருந்த அந்த என்பதுகளில் குமுதம் மட்டும் சற்று விலகி குறுக்கெழுத்துப் போட்டி, ஆறு வித்தியாசம், சினிமா விமர்சனம், கவிதை, கட்டுரை, சமையல் குறிப்பு, நடுப்பக்க நடிகை என வார இதழ்களில் புரட்சியை ஏற்படுத்தியது. வாரம்தோறும் வாசிப்பவர்களை இழுக்க புதிய முயற்சிகளை கையாண்டு எல்லாவற்றிலும் அவர்கள் புதுமையை புகுத்தினர். சோகமும் பெண்ணியமும் வழிந்தோடிய தொடர்கதை மற்றும் சிறுகதைகளிலும் மாற்றத்தை கொண்டுவந்தனர். அந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மறைந்த எழுத்தாளர் "சுஜாதா" அவர்கள்.

அந்த காலகட்டத்தில் குமுதத்தில்

1. அனுபாவின் தீர்மானம்.
2. மறக்க முடியாத சிரிப்பு
3. ஒருநாள் மட்டும்.
4. ஆக்சன் வேண்டும்.
5. மற்றொரு பாலு.
6. குந்தவையின் காதல்.
7. தண்டனையும் குற்றமும்.
8. சுயம்வரம்.
9. யாருக்கு?
10. பெய்ரூட்.
11. வானில் ஒரு.
12. க்ளாக் ஹவுஸில் ஒரு புதையல்.

என பன்னிரண்டு சிறுகதைகளை சுஜாதா எழுதினார் . வழக்கமான கதைசொல்லும் பாணியிலிருந்து சற்று விலகி காதல்,சோகம் , நகச்சுவை, திரில்லர், க்ரைம், விஞ்ஞானம் கலந்த கலவையாக எழுதினார். புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் போல ஒவ்வொரு கதையின் முடிவும் அடுத்த கதைக்கு ஆரம்பமாகும் யுக்தியையும், வாசகனை அடுத்தவாரம் வரை தவிக்கவிடும் தந்திரத்தையும் அதில் புகுத்தியிருந்தார். விறுவிறு என்று பயணிக்கும் கதையை சட்டென நிறுத்தி ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்து அட! போட வைத்தார். "தூண்டில் கதைகள்" என பெயரிடப்பட்ட அந்த பன்னிரண்டு வார கதைகள் மற்ற வாசகர்களையும் குமுதத்தின் பக்கம் தூண்டில் போட்டு இழுத்தது எனலாம்.

நூலகத்தில் அந்த சிறுகதைகளை படித்துக் கொண்டிருந்தேன் ஒருசில வார குமுதம் கைக்கு கிடைக்கவில்லை மேலும் சிலவற்றின் முடிவு மற்றும் தொடங்கிய விதம் தெரியாமலும் போக, சுஜாதாவின் இந்த சிறுகதைகள் மொத்த தொகுப்பாக கிடைக்குமா? என தேடிக் கொண்டிருந்தேன். நண்பர் விசா பப்ளிகேஷன்ஸ் புத்தகத்தை எனக்கு அனுப்பிவைத்தார் "தூண்டில் கதைகள்" என்னும் அதே தலைப்பில் விசா அந்தச் சிறுகதைகளை தொகுத்து வெளியிட்டுள்ளனர். வார பத்திரிக்கைகளிலும் சிறுகதை எழுதும் வடிவத்திலும் மாற்றத்தை ஏற்படுத்திய அந்த காலகட்டத்து கதைகளை மீண்டும் அந்த பால்யகால நினைவுகளோடு வாசித்து மகிழ்ந்தேன்.
  • தூண்டில் கதைகள்.
  • சுஜாதா.
  • விசா பப்ளிகேஷன்ஸ். 
வாசிப்பை நேசிப்பவர்களுக்கும் வாசிக்க தொடங்கியிருக்கும் நண்பர்களுக்கும் இந்த சிறுகதை தொகுப்பு மிகச் சிறந்த மற்றும் புதிய அனுபவமாக இருக்கும் அதை தங்கள் பார்வைக்கும் அறிமுகப்படுத்துகிறேன்.