☰ உள்ளே....

ஹிட்லரின் கடற்போர் சாகசங்கள்.


"உலகம் முழுவதும் ஒரே பேரரசு " ஒன்றினை நிறுவவேண்டும் என்று அலெக்சாண்டர் கண்ட கனவை, ஜூலியஸ் சீசர் கட்டிய மனக் கோட்டையை, நெப்போலியன் தீட்டிய திட்டத்தை நினைவாக்க இந்த நூற்றாண்டில் ஜெர்மனியில் வீறுகொண்டு எழுந்தவன் "அடால்ப் ஹிட்லர்". விளைவு இரண்டாம் உலகப்போர்.

முதல் உலகப் போர் முடிந்து 21 வருடங்களுக்கு பிறகு நன்றாக உறங்கிக் கொண்டிருந்த போர் எனும் டைனோசரின் காதுக்குள் துப்பாக்கியை விட்டு எழுப்பியவன் ஹிட்லர். அது எழுந்து கிட்டத்தட்ட 70 நாடுகளை சேர்ந்த 5 கோடிக்கும் மேற்பட்ட மனிதர்களை (ஹிட்லர் உட்பட) விழுங்கி ஏப்பம் விட்ட வரலாறு அனைவரும் அறிந்ததே. முதல் உலகப்போரில் ஜெர்மனி தோற்று சரணடைந்து அனைத்தையும் இழந்திருந்தது. அதன் இடைப்பட்ட கால வளர்ச்சி என்பது பிரம்மிக்கத்தக்கதே இதற்கும் ஹிட்லரே காரணம்.
இரண்டாம் உலகப்போரில் நிகழ்ந்த சம்பவங்கள் அநேகம்! கடைபிடிக்கப்பட்ட போர்முறைகளும், தந்திரங்களும், அதுவரை வேறெந்த போர்களிலும் கடைபிடிக்காதவை. குறிப்பாக ஜெர்மனியின் கடற்படை சாகசங்கள் உலகையே பிரம்மிக்க வைத்தது. கடல் அரசனான பிரிட்டனை கதிகலங்க வைத்தது ஹிட்லரின் கடற்படை. கடல் ஆதிக்கத்தில் தன்னிகரற்றுத் திகழ்ந்த பிரிட்டனின் உயிர் நாடியை ஜெர்மனியின் குட்டி கடற்படை சோதித்து பார்த்தது. இதன் அங்கம் வசித்த யூ - படகு பல பெரிய கப்பல்களைக்கூட யூ டேர்ன் போடச்செய்தது. வரலாற்று பக்கங்களின் யூ - படகின் சாகசங்கள் இன்றும் நிலைத்து நிற்பவை.


வெர்சேல்ஸ் சமாதான உடன்படிக்கை, பிரிட்டன் - ஜெர்மன் கடற்படை ஒப்பந்தம் என ஜெர்மனி சில உடன்படிக்கைகளில் கையெழுத்து போட்டிருந்தாலும். ஹிட்லர் அதை மதிக்கவில்லை. தரச்சாற்றிதழ் வாங்கிய இந்திய தொழில்சாலைகள் போல அழகாக பிரேம் செய்து அவற்றை எல்லாம் சுவற்றில் மாட்டியிருந்தார் அவ்வளவுதான். "கடல் மார்கமாகவும் ஆகாய மார்கமாகவும் பிரிட்டனை தாக்கி பட்டினி போட்டே பணிய வைப்பேன்...கடலில் ஜெர்மன் யூ- படகுகளின் யுத்தம் தொடங்கிவிடும். அதன் பின் பிரிட்டிஷ்காரர்கள் நிம்மதியாக தூங்குவார்களா என்பதை பார்கிறேன்"-என்று ஹிட்லர் கர்ஜித்தார். "போர்க்காலத்தில் ஜெர்மன் யூ-படகே என்னை மிகவும் அச்சுருத்தியது; அதன் பீதியில் பல நாள் விழித்திருந்தேன்" பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பின்நாளில் கூறியிருந்தார்.


இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில் ஜெர்மானியர்கள் பெற்ற அடுத்தடுத்த வெற்றிகளுக்கு மூலகாரணம் ஹிட்லரின் கடற்படையும் கடற்போர் சாகசங்களும்தான். இந்த புத்தகம் அந்த சாகசங்களை அழகாக எடுத்துரைக்கிறது. சலிக்காத வரலாற்று ஆசிரியர் வகுப்பு எடுப்பதுபோல எளிய நடையில் எழுதியுள்ளார் ஆசிரியர். இரண்டாம் உலகப்போரை பற்றியும், ஹிட்லரின் வாழ்க்கையைப் பற்றியும் மேலோட்டமாக குறிப்பிட்டுவிட்டு சாகசத்திற்கு தாவுகிறார். கிட்டதட்ட ஒரு திரைப்படத்தை பார்ப்பதுபோல் இருக்கிறது. அறிய புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளது. புத்தகத்தை படிக்கும் போது அந்த போர்ச் சுழலுக்கே சென்றுவருவது போல் இருக்கிறது. சிறந்த படைப்பு ஆசிரியர் தோராளி சங்கரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. தவறாமல் வாசியுங்கள்.

ஹிட்லரின் கடற்போர் சாகசங்கள்.
ஆசிரியர்- தோராளி சங்கர்.
சென்னை புக்ஸ் வெளியிடு.
விலை ரூ.300

யூ - படகின் சாகசம்.