எலிவால் தூரிகை.




து என்ன எலிவால் தூரிகை?.

மனிதனின் ஓவியக்கலை குகைகளில் தொடங்கியது. பிறகு சுவர்கள் காகிதங்கள் என வளர்ந்து தற்போது தொழில்நுட்பத்தினால் கணினிகளைக் கொண்டும் வரையப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நம் கூடவே ஒட்டிக் கொண்டிருக்கும் செல்போன் சாதனத்தை வைத்து ஓவியங்களை தீட்ட முடியுமா? என யோசித்ததுதான் இந்த எலிவால் தூரிகை. 

❗சரி!..செல்போனில் இதனை எப்படி வரைவது?

செல்போன்களில் எடுக்கும் புகைப்படங்களை அழகாக்க Photoshop என சொல்லக்கூடிய செயலிகள் ஏராளம் இருக்கின்றன. அட! ஏன்?... முடி நரைத்துக் கொட்டி, தோல் தளர்ந்து சுருங்கி எதிர்காலத்தில் நாம் எப்படி இருப்போம் (இருப்போமா?) என காட்டும் செயலிகளும் வந்துவிட்டன. அவற்றில் ஒன்றான Pics Art என்ற செயலியைக் கொண்டு வரையப்பட்டவைதான் இந்த ஓவியங்கள். 

❗இந்த செயலியில் நமக்கு தேவையான புகைப்படங்களை கொடுத்துவிட்டால் அது தானாகவே ஓவியமாக மாற்றிவிடுமா?

நிச்சையம் மாற்றிவிடும். ஆனால் பிரபல ஓவியங்கள் போலவும், மாடர்ன் ஆர்ட் என சொல்லக்கூடிய அளவிற்கான தரமும், தனித்திருக்கும் அழகும் தேவை என்றால் ஓரளவிற்கு கைவண்ணமும் கலைத்திறனும் வேண்டும். மேலும் இந்த செயலியில் உள்ள Tools என்ற அமைப்புகள் அனைத்தையும் கையாளத் தெரிந்திருப்பதும் கொஞ்சம் பொறுமையும் நிதானமும் அவசியம். அவ்வாறு இந்த செயலியை பயன்படுத்தி செல்போனில் அடியேன் வரைந்த சில ஓவியங்களை முதன்முதலாக இங்கு அறிமுகப்படுத்துகிறேன். இனிவரும் காலங்களில் எலிவால் தூரிகை என்ற இந்த பகுதியில் மேலும் சில ஓவியங்கள் இடம்பெற காத்திருக்கின்றன. நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.