அப்பா.



அதிகாலை விடிந்த பிறகும் இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கிய என் அப்பாவை இதுவரை நாங்கள் பார்த்ததேயில்லை. சுத்தமாக இருக்க வேண்டும், அழகாகத் தெரிய வேண்டும் உடுத்தும் உடை, பேச்சு, நடை, அன்பு, உபசரிப்பு , செய்யும் வேலை, ஒழுக்கம், நேர்மை மற்றும் அந்த புன்னகை எக்காலமும் எதற்கும் குறையக்கூடாது என்பதுதான் அவரது நியதி. கைப்பந்தாட்ட வீரரான அவர் தலைவலி காய்ச்சல் என்றுகூட ஒருநாள் சோர்ந்து பார்த்ததில்லை. 50 வயதைத் தாண்டியபோதும் TNCSC அணிக்காக விளையாடினார். குடும்பத்தைத் தவிர அவர் நேசிக்கும் மற்றொரு விடயம் இந்த கைப்பந்து. இன்றைக்கும் அடுத்த தலைமுறையோடு ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் சுறுசுறுப்பாக விளையாடுவதை ரசிக்கலாம். இடதுகை ஆட்டக்காரரான அவர் மாநில அளவில் விளையாடுவதை சிறுவயதில் நேரில் பார்த்திருக்கிறேன், அவரோடு சேர்ந்து இந்தியாவில் சில இடங்களில் சுற்றித் திரிந்திருக்கிறேன். இன்றைக்கு ஊர்சுற்றும் என் வேலைக்கு கைப்பிடித்து உலகைக் காட்டியவர் அவர்.

இரண்டு நூறு சம்பளத்திற்கு சைக்கிள் மிதித்துக்கொண்டு துவங்கியது அவரது அரசாங்க வேலை. யாரிடமும் கைநீட்டாமல் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் ரிட்டயர்டான அவருக்கு பணம் புரட்டுவது பலமுறை கண்ணாமூச்சி விளையாட்டாக இருந்திருக்கிறது. எனக்கு எதுவும் வேண்டாம் மனைவி குழந்தைகள் மட்டும் போதும் என பலகோடி ரூபாய் சொத்துக்களை ஒரு கையெழுதில் தூக்கியெரிந்துவிட்டு ஒழுகும் வாடகை வீட்டில் புதிய வாழ்க்கையை நுழைந்த தாத்தாவிற்கு பிறந்த ஒரே ஆண்குழந்தை அவர். சொந்தங்களை இழந்ததால் என்னவோ அனைவரிடம் அன்பாக பழகும் குணம் அவருக்கு வாய்த்திருந்தது. சாதாரண மூட்டை தூக்குபவர்கள் முதல் ஊரிலிருக்கும் பெரும்புள்ளிகள் வரை அவர் இவரை, இவர் அவரை தெரிந்திருப்பார்கள். கோபம் எதையும் சாதிக்காது என காட்டும் அவர் ஒருநாள் கூட வீட்டீல் சண்டையிட்டு கத்தியதில்லை. அதையும் தாண்டி அம்மாவுக்கும் அவருக்குமான சண்டைகள் எங்களால் இருக்கும் இல்லையென்றால் எங்களுக்குத் தெரியாமல் இருக்கும். சிகரெட் பிடிப்பதில்லை, குடிக்கும் பழக்கம் கிடையாது, பொய் வராது, கை நீட்டுவதில்லை என வாழத் தெரியாதவர்களுக்கு அவர் பிழைக்கத்தெரியாத மனிதன்.

ஒருமுறை முதுகுவலிக்கான அறுவைசிகிச்சை முடிந்து மருத்துவமனையில் கண்விழித்தேன் கால்மாட்டில் அப்பா ஒரு புத்தகத்துடன் அமர்ந்திருந்தார், போர் அடித்தது புத்தகம் வாங்கினேன் படித்துக் கொண்டிருந்தேன் என்றார். அவர் அந்த புத்தகத்தில் ஒரு பக்கத்தைக் கூட படித்திருக்கமாட்டார் என எனக்குத் தெரியும். எனக்கு புத்தகம் வாசிக்கப் பிடிக்கும் என அவருக்கும் தெரியும். எங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து செயல்படுபவர். இதைசெய் என காட்டியதில்லை செய்யாதே என கண்டித்ததில்லை, அனைத்தையும் வாழ்ந்து காட்டியவர் வாழ்க்கையை காட்டியவர்.

அவர் கலங்கிய மூன்று தருணங்களை அறிவேன். எனது மேற்படிப்பிற்காக ஒருமுறை செய்யாத குற்றத்திற்காக வேலையிழந்த ஒருமுறை, அம்மாவின் விபத்து. படுத்த படுக்கையான அம்மாவுடன் சேர்ந்து விழுந்தது எங்கள் குடும்பத்தின் மொத்த சந்தோசம். என்ன செய்வதறியாது திகைத்த தம்பிக்கும் எனக்கும் எதையும் தெரியப்படுத்தாமல் எல்லாவற்றையும் மறைத்து இயல்பாக சோதனைகளை கடந்த தன்னம்பிக்கை மனிதர் அவர். பெண்பிள்ளை இல்லாத எங்கள் வீட்டில் சமைத்து, துணிகளை துவைத்து, வீட்டுவேலைகளைச செய்து படுக்கையில் விழுந்த அம்மாவை ஒன்னரை வருடங்கள் குழந்தையென பார்த்துக்கொண்டு அவளைத் தேற்றி நடமாட வைத்து ஒரு கணவன் எப்படி இருக்கவேண்டும் என இல்-அறத்தையும் எங்களுக்கு கற்றுக்கொடுத்தவர் அவர்.

நாதஸ்வர இசை, ஜெய்சங்கர் படங்கள், கிரேஸி மோகன் நாடகம், எட்டுமணி செய்தி, தாமரை சீரியல், விரால்மீன் குழம்பு, மாவடு, பனங்கிழங்கு, நாட்டுப்பலகாரம், பச்சை கீரைகள், கொத்தமல்லி துவையல், எப்போதாவது போடும் வெற்றிலை பாக்கு, புதிதாக வாங்கிய புல்லட், டி-சர்ட், குளத்தில் குளிப்பது, காலையில் கொஞ்சம் பக்தி பெர்பியூம் இதுதான் அவர் சுவை. சிறுவயது முதல் அப்பாவிடம் வேடிக்கையாக ஒரு பழக்கம் இருக்கிறது அது, வெளியில் கிளம்பும் எங்களுக்கான உடைகளை அவரே அயர்ன் செய்துவைப்பார் கிளம்பும் தருணங்களில் சட்டைக் காலர் மற்றும் பின்பக்கம் மடிந்திருக்கும் உடைகளை சரிசெய்துவிட்டு ம் இப்ப ஒ.கே என வழியனுப்புவார். பள்ளி கல்லூரி தொடங்கி வெளிநாட்டு பயணம்வரை அவரது இந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது. இன்று தந்தையர் தினம் என்று அவருக்கு போன் செய்து வாழ்த்தினேன். சைக்கிள் மிதித்து கதைபேசிக்கொண்டே சினிமாவிற்கு சென்ற நாட்கள் தொடங்கி இந்தமுறை ஊருக்கு சென்றபோது என்னை அழைக்க ஸ்டேசனுக்கு வந்து காத்திருந்தது வரை அப்பாவின் நினைவுகள் வந்துபோனது.

குடும்பத்துடன் சிறிது நேரமாவது அமர்ந்து பேசும் அப்பாக்கள் கிடைப்பதே அரிது. தலைமுறை இடைவெளிகளைத் தாண்டி பழகும் அப்பாக்களும் அரிது. இரண்டையும் மிஞ்சிய அப்பா எங்களுக்கு கிடைத்தது வரம் என நினைக்கிறேன். அலுவலக வேலையாக நீண்ட தூரம் செல்ல கிளம்பிக் கொண்டிருந்தேன். அப்பாவைப்பற்றிய நினைவுகளோடும் பெருமையோடும் கண்ணாடியின் முன் நின்றேன். "தேவ் என்னடா இன் பண்ணியிருக்க சரியா எடுத்துவிடுடா" என்ற குரலுடன் பின்னால் இருந்து அவர் என் சட்டையை சரிசெய்வதுபோல் உணர்ந்தேன். நிஜம்தான் என் அப்பா என் பின்னால் என்றும் நிற்கிறார் கசங்கிய சட்டையை மட்டுமல்ல என் வாழ்க்கையையும் அழகுபடுத்த He is my role Model...