வாக்மேன்.



ஹெட்போன் இல்லாத காதுகளே கிடையாது எனலாம். காலையில் வாக்கிங் போவதில் தொடங்கி வேலை, பயணம், அலுவலகம், பள்ளி கல்லூரிகள், கடைசியாக தூங்கும்போது கூட நம்மோடு தொங்கிக் கொண்டு நமக்கு பாடல்களை தந்து கொண்டே இருக்கிறது. வசதியான மீயூசிக் சிஸ்டம் இருந்தாலும் இந்த ஹெட்போனில் தனிமையாக பிடித்த பாடல்களை, நாம் மட்டுமே கேட்டு நினைவுகளில் கரைந்து போவது தனிசுகமே. கம்மல் போல காதில் மாட்டிக்கொள்ளும் ஹெட்போன்களும், காதோடு பொருத்திக்கொள்ளும் மைக்ரோ அளவிற்கு ஹெட்போன்களும் கண்டுபிடிக்கத் தொடங்கிவிட்டனர். எல்லாம் இந்த ஸ்மார்ட்போன் வந்ததற்குப் பிறகு குறுகிய காலத்தில் நிகழ்ந்தவை. அதற்குமுன் பாடல்களை தனியே நாம் மட்டும் கேட்க, எளிதில் எங்கும் எடுத்துச் செல்ல சிறிய கேசட்பிளேயர் கொண்ட வாக்மேன்களை பயன்படுத்தி வந்தோம், இந்த வாக்மேன் தொழில்நுட்பம்தான் இன்றைக்கு நம் காதோடு உறவாடும் ஹெட்போன்களுக்கும், நினைத்த இடத்தில் பாடல்களை கேட்கும் ஸ்மார்ட்போன், ஐ-பேட் போன்ற சாதனங்களுக்கும் முன்னோடியாக இருந்தது. அந்த வாக்மேன் கண்டுபிடித்ததைப் பற்றிய சுவாரசியமான நிகழ்வை பார்க்கலாம்.

பெரிய டிவி அளவிற்கு டேப்ரிக்கார்டர் விற்பனையாகிக் கொண்டிருந்த நேரத்தில் 1970 ஆம் ஆண்டு Sony நிறுவனத்தார் Prototype என சொல்லக்கூடிய சிறிய அளவிலான டேப்ரிக்கார்டரை வடிவமைத்திருந்தனர். அந்த நிறுவனத்தில் முதன்மை அதிகாரியாக இருந்த "Nobutoshi Kihara" என்பவர் தீபாவளி போனஸ் அல்லது சம்பளஉயர்வு, சைடு இன்கம் எதையாவது வாங்கிவிடவேண்டும் என நினைத்து Sony நிறுவனத்தின் அமைப்பாளர் "Masaruibuka" என்பவரை காக்கா பிடிக்க அவருக்காக ஒரு சாதனத்தை உருவாக்கினார். அதாவது தன் முதலாளி விமானத்தில் பயணம் செய்யும்போது ஜாலியாக இசையை தனிமையாக கேட்டு ரசிக்க கையடக்கமான ஒரு சாதனத்தை வடிவமைத்தார். "Andreas Davel" என்பவர் உருவாக்கிய ஹெட்போனை அதில் இணைத்திருந்தார் அதுதான் வாக்மேன். பிறகு இந்த சாதனம் அனைவரையும் கவர, ஹெட்போன் கண்டுபிடிப்பின் உரிமம் வைத்திருந்த Andreas Davel என்பவரிடம் ( இன்றைக்கும் ஹெட்போனின் காப்புரிமை இவரிடம்தான் உள்ளது) முறையான அனுமதி வாங்கிக்கொண்டு 1979 ஆம் ஆண்டு வாக்மேன் சந்தைக்கு வந்தது.

அது என்ன வாக்மேன்?  இந்த பெயர் Sony நிறுவனத்தின் மற்றுமொரு அமைப்பாளர் "Akio Morita" என்பவருக்கு பிடிக்கவில்லை. உடனே யாரங்கே? என தனது அல்லக்கைகளை கூப்பிட்டு பெயரை மாற்றச் சொன்னார். Watchman, Scoopman, Discman, Talkman என ஆளுக்கொரு பெயர் வைக்க கடைசியில் அது Walkman (வாக்மேன்) என்றே அழைக்கப்பட்டுவந்தது. ஸ்மார்ட்போன் தயாரிப்பில்கூட இசைக்காக தனியாக Sony நிறுவனத்தார் Walkman serious என்ற செல்போன்களை வெளியிட்டனர். நல்லது எதுவானாலும் காதில் வாங்கிக் கொள்ளாமல் மொக்கை பாடல்களை கோட்டுக்கொண்டு எது நடந்தா எனக்கென்ன? என அதுவழியில் போய்க் கொண்டிருக்கும் இன்றைய நவீன யுகத்தை கருத்தில் கொண்டுதான் கணித்து பெயர் வைத்திருக்கிறார்கள் போலும் "வாக்மேன்".