☰ உள்ளே....

ஃபை ஃபை ஃபை (Life of PHI).

இன்று கணக்கு பாடம் என்ன ரெடியா?. ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக் கொள்ளுங்கள், கூடவே அளவெடுக்கும் டேப்பை கைவசம் வைத்திருங்கள். பேனா பேப்பர் ஒகே  அளவெடுக்கும் டேப் எதற்கு? கடைசியில் சொல்கிறேன்.  

ஒரு முட்டை அதன் நடுவில் ஒரு கோடு கொண்ட Φ (φ) இந்த குறியீட்டை கணிதத்தில் சில சூத்திரங்கள் மற்றும் ஜியாமென்டிரிக்கலில் (வடிவியல்) பார்த்திருப்போம். பெரும்பாலான சிக்கலான கணித குறியீடுகள் அனைத்தும் கிரேக்க மொழியின் உயிரெழுத்தின் வடிவம் கொண்டிருக்கும். ஆல்பா, பீட்டா போல இந்த குறியீடும் அதே வகைதான் PHI. நாம் அடிக்கடி பயன்படுத்தும் π (22/7) கிடையாது குழப்பிக் கொள்ள வேண்டாம் இது வேறு, இதற்குப் பெயரும் PHI, ஃபை என உச்சரிப்பார்கள். கிரேக்கத்தில் புகழ்பெற்ற சிற்பியான "Phidias" என்பவரின் நினைவை போற்ற இந்த பெயரை வைத்தனர். இதன் மதிப்பு தோராயமாக 1.618 அதாவது 1.6180339887....என நீண்டுகொண்டே போகும். கணிதத்தில் மட்டுமல்லாமல் கலைத்துறை, அண்டவியல், இறையியல், கட்டடவியல் போன்றவற்றிலும் இந்த PHI-யின் பங்கு மிக முக்கியமானது. 1.618 என்ற இந்த எண்ணை "Golden Ratio " என்கிறார்கள்.


மைக்கேல் ஆங்கிலே, ஆல்பர்ட் டூரர், டாவின்சி போன்ற புகழ்பெற்ற ஓவியர்கள் இந்த அதிசய எண்ணை பயன்படுத்தி தங்களது கைவண்ணத்தில் பல ஓவியங்களை வரைந்திருக்கின்றனர். எகிப்து பிரமிடுகள் மற்றும் நியூயார்க்கில் உள்ள யுனைடெட் நேஷனல் கட்டிடம் போன்றவை இந்த எண்ணைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இசைத்துறையில் பீத்தேவனின் ஐந்தாவது சிம்பெனி இசையிலும், மோசார்டின் இசையிலும் இந்த எண் உள்ளது. மர்மமான கணித தோற்றங்கள் இருந்தாலும் இந்த எண் இயற்கையின் கட்டுமானத்திலும், தாவரம் மற்றும் விலங்குகள் ஏன்? மனிதர்களிடம் கூட பரிணாம விதிகளின்படி புதைந்துள்ளது. பல அறிஞர்கள் இந்த எண் பிரபஞ்சத்தை உருவாக்கியவனால் முன்கூட்டியே உருவாக்கப்பட்டிருக்கும் என நம்புகின்றனர். அதனால் இதை தெய்வீக சமத்தன்மை கொண்ட எண்ணாக பார்க்கின்றனர்.


அப்படி என்ன? தெய்வீக சமத்தன்மை இந்த எண்ணில் இருக்கிறது. இந்த PHI பற்றிய சுவாரசியங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் ஆனால் நமது கணக்கு பாடம் போர் அடித்துவிடும் அதனால் இந்த பையை (PHI) கொஞ்சம் ஓரமாக வைத்துவிடுவோம் சரியா? கையில் பேனா பேப்பர் மற்றும் அளவெடுக்கும் டேப்பை வைத்திருக்கிரீர்களா? தற்போது செய்முறை பாடத்தை தொடங்கலாம்.

முதலில் உங்கள் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை அளவெடுங்கள், பிறகு தலையில் இருந்து உங்கள் வயிற்றின் தொப்புள் வரை அளவெடுத்து கிடைக்கும் எண்ணால் வகுங்கள், கிடைக்கும் விடையை குறித்துக் கொள்ளுங்கள். மேலும் தோளிலிருந்து கைவிரல் நுனிவரை அளவெடுங்கள், அதை உங்கள் முழங்கையிலிருந்து கைவிரல் நுனிவரை கிடைக்கும் அளவால் வகுங்கள், கிடைக்கும் விடையை குறித்துக்கொள்ளுங்கள். இடுப்பிலிருந்து தரைவரை கிடைக்கும் அளவை கால்முட்டியிலிருந்து தரைவரை கிடைக்கும் அளவால் வகுங்கள் குறித்துக்கொள்ளுங்கள். இப்படியாக விரல் இணைப்புகள், கால்நுனி, முதுகுத்தண்டு, என செய்துபாருங்கள் கிடைக்கும் விடையை குறித்துக்கொள்ளுங்கள். அவ்வாறு கிடைக்கும் ஒவ்வொன்றின் விடையும் ஃபை ஃபை ஃபை. நாம் யாவரும் PHI 1.618 என்ற எண்ணோடு தெவ்வீக சமத்தன்மையில் இருப்பதை உணரலாம்..