ஜங்கிள் புக்.



Mickey Mouse, Donald Duck போன்ற கார்டூன் கதாபாத்திரங்கள் உலக அரங்கில் புகழ்பெற்ற காலத்தில் இந்தியர்களை அனிமேசன் உலகத்திற்குள் கைப்பிடித்து அழைத்துச் சென்றவன் சப்பை மூக்கு "மௌக்லி". 1993- 98 ஆண்டில் டவுசர் மாட்டிக்கொண்டு சுற்றித்திரிந்த சிறுவர்களில் மௌக்லியையும் "தி ஜங்கிள் புக் " சீரியலையும் தெரியாதவர்களே இருக்க முடியாது. ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12.00 -1.00 மணிக்கு தூர்தர்சனில் ஒளிபரப்பப்படும் இந்த அனிமேசன் சீரியலுக்காக காத்திருந்த நிமிடங்கள் அனைத்தும் நினைவுகளின் பொக்கிஷம்.


ஜப்பான் டிவி சேனலான T.V Tokyo -ல் 1989 ஆம் ஆண்டு தொடங்கி 52 எப்பிசோடுகளாக ஓடிக்கொண்டிருந்த "Junguru Bukku Shonen Moguri" என்ற சீரியலின் இந்திய பதிப்பு இந்த ஜங்கிள் புக். "Fumio Kurokawa" என்பவர் இயக்கத்தில் "Hideo Shimazu " இசையில் "Nippon Animation company" இதை தயாரித்திருந்தனர். 1894 ஆம் ஆண்டு Rudyard Kipplings எழுதிய புகழ்பெற்ற "The Jungle Book" புத்தகத்தைத் தழுவி கதை அமைத்திருந்தனர். 


Rudyard Kippling -ன் தந்தை "John Lock wood Kippling" இந்தியாவில் பிறந்தவர் சிறிது காலம் இங்கு பணிபுரிந்தவர். இந்திய காடுகளின்மேல் காதல் கொண்டு அலைந்தவர். தன் இறுதி காலகட்டத்தில் அந்த காடுகளின் அனுபவங்களை ஓவியங்களாக பதிவு செய்தார். அவருடன் இணைந்து அவரது மகன் அனுபவங்களை ஓவியங்களோடு சேர்த்து புனைக்கதையாக எழுதி பத்திரிக்கையில் வெளியிட்டார். அந்த கதைகளின் தொகுப்பே The Jungle Book. மொத்தம் மூண்று பாகங்களைக் கொண்ட இந்த புத்தகத்தை தழுவி உலகமெங்கும் பல திரைப்படங்களும் சீரியல்களும் வெளிவந்துள்ளன. சிறுவர்களின் சாரண இயக்கத்தில் இந்த கதையை தன்னம்பிக்கைக்காக இன்றளவும் போதிக்கின்றனர். 

சென்ற நூற்றாண்டின் கதையை, போன தலைமுறையில் நாம் ரசித்த காட்சிகளை, இந்த காலகட்டத்தில் நவீன வடிவில் புதிய தொழில்நுட்பத்தில் Warner Brothers திரைப்படமாக தயாரித்துள்ளனர். தற்போது திரையரங்குகளில் தலை"தெறி"க்க ஓடிக் கொண்டிருக்கும் சில படங்களுக்கிடையே, இந்தியர்களின் முதல் ஆதார்ச அனிமேசன் நாயகன் மௌக்லியும் அமைதியாக கலக்கிக் கொண்டிருக்கிறான். நமது பால்யகால நினைவுகளை மீட்டெடுக்கவும், அடுத்த தலைமுறைக்கு நாம் அனுபவித்த அந்த அழகிய உலகத்தை காட்டவும் திரையரங்குகளுக்கு குழந்தைகளுடன் சென்று இந்த படத்தை பாருங்கள். 

Introduction song of the serial..

Trailer