☰ உள்ளே....

Hachi: A Dog's Tale..


எங்கள் வீட்டின் செல்லப்பிராணியான பப்பி குட்டியாக இருந்த சமயம், ஒருநாள் அவசரமாக வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தேன். வழக்கமாக காலைச்சுற்றி விளையாடும் பப்பி அன்றும் அவ்வாறு விளையாட நினைத்து சுற்றி வந்தது. வெளியே செல்லும் அவசரத்தில், கோபத்தில் அதை காலால் தள்ளிவிட்டு கிளம்பினேன். மதியவேளையில் அம்மாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது நீயெல்லாம் ஒரு மனுசனா? என எடுத்தவுடன் பிடிபிடித்துவிட்டாள். நீ உதைத்ததிலிருந்து பப்பி சாப்பிடாமல் விளையாடாமல் சுணங்கியே கிடக்கிறது என திட்டித் தீர்த்துவிட்டாள். மாலை வீட்டிற்குத் திரும்பினேன் எப்போதும் வாசலுக்கு ஓடிவந்து வரவேற்கும் பப்பி அன்று வரவில்லை ஒரு மூளையில் சுருண்டு படுத்திருந்தது. சற்று அருகில் சென்று அமர்ந்து தலையை தடவிக் கொடுத்து என்னை மன்னித்துவிடு என்றேன். காதையும் வாலையும் லேசாக ஆட்டியது.அம்மா தட்டில் சோரு பிசைந்து கொண்டுவந்து கொடுத்து அதை சாப்பிட சொல் என்றாள். அதனிடம் நீட்டி வருடிக் கொடுத்தபின் பசித்த குழந்தைபோல சாப்பிடத் தொடங்கியது. நான் மிருகமாகவும் ஒரு நாய் குழந்தையாகவும் மாறிய தருணம் அது.

ஆடு, மாடு, கோழி, குருவி, நாய் என வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்க்கிறோம் அவை நம்மிடம் எதிர்பார்பது தலைகோதும் சின்ன ஸ்பரிசமும் நமது நெருக்கமும் மட்டுமே. நமது உலகம் மட்டுமே பெரியதென நினைத்து அவைகளுக்கான உலகை மறந்துவிடுகிறோம். அவற்றின் உலகம் மிகவும் சிறியது அது நமது காலடி சுற்றிதான் பறந்திருக்கும். அதுபோல தன் எஜமானரே உலகம் என நம்பி, பிரிந்து சென்ற அவரின் வரவிற்காக 9 வருடங்களாக ஓரிடத்தில் காத்திருந்த நாயின் உண்மைக் கதைதான் "Hachi A Dog's Tale". 


"Hide Saburo Ueno" என்பவர் ஜப்பானில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழகத்தில் வேளாண்மைத்துறையில் புரபசராக பணிபுரிந்து வந்தார். தன் வீட்டிற்கு அருகில் உள்ள "ஷிபுயா (Shibuya) ஸ்டேசனில் இரயில் ஏறி டோக்கியோவரை சென்றுவருவது அவரது வழக்கம். ஒருநாள் பணிமுடிந்து வீட்டிற்கு திரும்புகையில் ஸ்டேசனின் பிளாட்பாரத்தில் எதேச்சையாக ஒரு நாய்குட்டி அவருக்கு கிடைத்தது. உரிமையாளர் இல்லாத அந்த நாய்குட்டியை தன் வீட்டிற்கு எடுத்துவந்தார். அவரது மனைவி இதை பிடிக்காமல் வெறுத்து ஒதுக்க (ஜப்பானிலும்  மனைவி ராஜ்ஜியம்தான்) மறுநாள் அந்த நாய்குட்டியை விலங்குகள் பாதுகாப்பு நிலையத்தில் ஒப்படைக்க துக்கிச் சென்றார். குட்டியாக இருப்பதாலும், ஏற்கனவே சில நாய்கள் அங்கு இருந்ததாலும் அந்தக் குட்டியை அவர்கள் வாங்க மறுத்தனர், வேறு வழியின்றி வீட்டிற்கே திரும்பவும் கொண்டுவந்தார். தன் வீட்டின் ஒரு மூளையில் அதற்கென ஒரு பகுதியை ஒதுக்கி தாயன்போடு வளர்க்கத் தொடங்கினார். அழகான அந்த நாய்குட்டிக்கு "ஹட்சிகோ (Hachiko) " எனப் பெயர் வைத்தார். Hachi என்றால் ஜப்பானிய மொழியில் எட்டு என அர்த்தம் (அனைவரும் வெறுத்து ஒதுக்கும் 8 என்ற நம்மரை ஜப்பானியர்கள் மட்டும் அதிஷ்டமாக கருதுகிறார்கள்). ஹட்சிகோவுடன் அண்ணியோன்யமாக பழகும் புரபசரை அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் பிறகு புரிந்து கொண்டனர். நாட்கள் நகர்ந்தது. ஹட்சிகோ வளர்ந்து பெரியதானது. புரபசரின் குடும்பத்தார் அதனை தங்கள் வீட்டின் ஒருநபராகவே பாவித்துவந்தனர், ரேசன் கார்டில் மற்றும் வாக்காளர் பெயர் பட்டியலில் சேர்க்காததுதான் குறையாக இருந்தது.


புரபசர் தினமும் வேலைக்கு செல்லும்போது ஹட்சிகோ கூடவே ஸ்டேசன் வரை வந்து வழியனுப்பும் . மீண்டும் அவர் திரும்பிவரும் நேரத்தில் அவரை அழைத்துச் செல்ல ஸ்டேசனுக்கு வந்து காத்திருக்கும் இதை தினமும் வாடிக்கையாக வைத்திருந்தது. இந்த செயல் ஸ்டேசனில் உள்ள அனைவரையும் கவர்ந்தது. வழக்கம் போல் ஒருநாள் புரபசர் வேலைக்கு கிளம்பினார். ஹட்சிகோ அவரை தடுத்து நிறுத்தி அவருடன் செல்ல மறுத்து தன்னுடன் விளையாட அழைத்தது. புரபசர் இதைப் பொருட்படுத்தாதது வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு  ஸ்டேசனுக்கு நடக்கத் தொடங்கினார். ஹட்சிகோவுடன் புரபசரை பார்த்து பழகிய ஸ்டேசனில் உள்ளவர்களுக்கு அன்று சற்று அதிர்ச்சியாக இருந்தது, அதற்கு என்னவாயிற்று என பேசத் தொடங்கினர். அன்று வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த புரபசர் திடிரென மயங்கி விழுந்தார், அவரது உயிர் அக்கணமே சட்டென பிரிந்தது. அவரது உடல் சவப்பெட்டியில் அடைத்து வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மாலைப்பொழுது நெருங்கியது புரபசர் வரும் நேரம் ஆனது ஹட்சிகோ வழக்கம்போல் அவரை அழைத்துவர ஸ்டேசனுக்கு சென்றது. அவர் வராததால் கடைசி இரயில்வரை காத்திருந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பியது. இதுபோல் ஒவ்வொருநாளும் புரபசரின் வருகைக்காக ஸ்டேசனுக்கு சென்று கடைசி இரயில்வரை காத்திருந்தது.


புரபசர் மறைந்தபின் அவரது மனைவி தங்கியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு தன் மகளின் வீட்டில் வசிக்க நினைத்து கூடவே ஹட்சிகோவையும் கூட்டிக்கொண்டு கிளம்பினார். ஷிபுயாவிற்கு சற்று தள்ளியிருக்கும் அவரது மகளின் வீட்டிலிருந்தும் அன்று மாலை ஹட்சிகோ ஸ்டேசனுக்கு வந்தது. பிறகு எங்கேயும் செல்லாமல் அந்த ஸ்டேசனின் அருகில் நிரந்தரமாக ஒரு அமைதியான இடத்தை தங்குவதற்கு தேடிக்கொண்டது. புரபசரையும் ஹட்சிகோவையும் நன்கு தெரிந்தவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தது. ஹட்சிகோ தினமும் மாலை நெருங்கியதும் ஸ்டேசன் வாசலில் உள்ள சதுக்கத்தில் வந்து அமர்ந்து கொள்ளும். குளிர், மழை, வெய்யில் என பாராமல் புரபசர் வழக்காமாக திரும்பிவரும் நேரத்தில் அவருக்காக தவறாமல் காத்திருக்கும். ஒன்றல்ல இரண்டல்ல சுமார் ஒன்பது வருடம் அவர் வருவார் என நாள்தோறும் காத்திருந்தது. ஒரு நாய் இறந்துபோன தன் எஜமானரின் வருகைக்காக காத்திருக்கும் இந்த செய்தி பத்திரிக்கையில் பரவியது, சிலர் ஹட்சிகோவை ஆச்சரிமாக பார்த்தனர், சிலர் தத்தெடுக்க முன்வந்தனர் ஆனால் ஷிபுயா ஸ்டேசனில் உள்ளவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். இறுதியில் 1935 மார்ச் 8 -ல் ஹட்சிகோ வழக்கமாக புரபசருக்காக காத்திருந்தது, கடைசி இரயில் ஸ்டேசனை  கடந்துபோனது அதிலிருந்து புரபசர் புன்சிரிப்புடன் இறங்கி வந்தார் ஹட்சிகோ ஓடிச்சென்று தழுவிக் கொண்டது. ஆம்!. அன்றுதான் அது இறந்துபோனது.


இந்த உண்மைக் கதை ஜப்பானில் மிகப்பிரபலம். டோக்கியோவிற்கு அருகில் இருக்கும் ஷிபுயா (Shibuya) என்ற ஊரில் வசிப்பவர்களில் ஹட்சிகோவை தெரியாதவர்கள் எவரும் இல்லை. ஆண்டுதோறும் ஏப்ரல் - 8 ஆம் தேதியை இன்றுவரை அன்பின் நாளாக அங்கு கொண்டாடுகின்றனர். ஷிபுயாவின் மியூசியத்திலும், பல மாற்றமடைந்த அந்த ஸ்டேசனிலும் ஹட்சிகோவின் புகைப்படங்களை இப்போதும் சென்றாலும் பார்க்கலாம். ஷிபுயாவின் ஸ்டேசன் வாசலில் கம்பீரமாக ஹட்சிகோ சிலையாக நிற்கிறது. அதன் உடல் பதப்படுத்தப்பட்டு National Science Museum of Japan -ல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் புரபசரின் கல்லறைக்கு பக்கத்தில் அதற்கும் ஒரு கல்லறை எழுப்பப்பட்டுள்ளது.


1987-ல் இந்த உண்மைக்கதையை Hachik- Monogatrai என்ற பெயரில் புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குனர் Kanero Shindo திரைப்படமாக எடுத்தார். இவற்றைத் தழுவி ஹாலிவுட்டிற்கு தக்கவாறு இடத்தைமாற்றி Lasse Hellstrom தயாரித்த படம்தான் Hachi A Dog's Tale. இதில் Richerd George புரபசராகவும் John Allen அவரது மனைவியாகவும் நடித்திருந்தனர். அமைதியாக நகரும் திரைப்படத்தில் பல காட்சிகள் கண்கலங்க வைத்துவிடுகின்றன.
இந்த படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் அழவில்லை என்றால் உங்களை மிருதன் படத்தில் வரும் சோம்பி (Zombie) பேய் கடித்ததாக அர்த்தம்.
தவறாமல் பாருங்கள்.


Directed by - Lasse Hallstrom.
Screenplay- Stephen P zlindsey.
Music- Jan A P Kaczmarek
Cinematography - Ron Fortunato
Editor - Kristina Boden.