☰ உள்ளே....

கனவு - காணும் வாழ்க்கை..


நல்லதோ கெட்டதோ நேற்றுஒரு கனவு கண்டேன் தெரியுமா? என சொல்லக் கேட்டிருப்போம் நாமும் கனவு கண்டிருப்போம், கனவு இல்லாத தூக்கம் என்பதே கிடையாது. கனவு என்றவுடன் நமக்கெல்லாம் அப்துல்கலாம் அய்யாதான் நினைவுக்கு வருவார். அவர்தான் நம் கனவுகளை தட்டியெழுப்பியவர். மனிதர்களைப் போல விலங்குகள் கூட கனவுகாணும் என கண்டுபிடித்துள்ளனர் டைகர் கனவில் ஜூலியோ ரோஸியோ வந்து டூயட் பாடலாம். அழுங்கு (Armadillo) என்ற விலங்குதான் அதிகமாக கனவு காணுமாம் அதன் கனவு என்னவாக இருக்கும்? வாருங்கள் கனவு உலகத்திற்குள் கொஞ்சம் பயணிக்கலாம்.

இந்த கனவு என்பது என்ன? 

நாம் கண்ட காட்சிகள், நமது சிந்தனை, மற்றும் கோபம், அழுகை, சிரிப்பு, துக்கம், பயம், காமம் போன்ற உணர்சிகளின் தூக்கநிலை பிரதிபலிப்பே இந்த கனவுகள். அதாவது நம்முடைய எண்ணங்கள் மற்றும் நினைவுகளை தூக்கும்போது மூளை ரீவைன்ட் செய்து பார்த்துக்கொள்கிறது.

கனவு எங்கிருந்து வருகிறது?

நம் மூளையில் இருந்து கனவு வருகிறது என்று நமக்குத் தெரியும் ஆனால் மூளையில் எந்த மூலையில் இருந்து வருகிறது என இதுவரை கண்டுபிடிக்கவில்லை. பல விஞ்ஞானிகளுக்கு அதை கண்டுபிடிப்பதுகூட ஒரு கனவாகவே இருக்கிறது. இதற்காக பலபேர் மூளையை கசக்கிக்கொண்டு ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். நமது தூக்கத்தில் REM (Rapid Eye Moment) என்ற நிலையில் கனவு பிறக்கிறது. இந்த நிலையில் சராசரியாக 20 முதல் 30 நிமிடங்களை வரை ஒரு கனவு நீடிக்கிறது. மெகாசீரியல் மாதிரி இல்லாமல் ஒரு குறும்படம் அளவிற்குள் கனவு முடிந்துவிடுகிறது. ஒருநாளைக்கு எண்ணற்ற கனவுகண்டாலும் வெறும் 10 சதவீத கனவு மட்டுமே நமது மெமரிகார்டில் சேமிக்கப்படுகிறது அதிலும் விழிக்கும் தருணத்தில் காணும் கனவே பெரும்பாலும் நினைவில் இருக்கும்.

கனவு எப்படியிருக்கும்?

கலர்ஃபுல் கனவு என்று சொல்லுவார்கள் ஆனால் கனவு பழைய திரைப்படம் போல கருப்பு வெள்ளையில் இருக்கும். டீன்ஏஜ் பருவத்தினருக்கு காமம் கலந்த கலர்ஃபுல் கனவு வரும் அதற்கு ஹார்மோன்கள் காரணமாக இருக்கும் அந்த கனவுகளுக்குப் பின் முன் விளைவுகளும் ஏற்படும். குழந்தைகளின் உலகம் எப்போதும் வண்ணமயமானது, அவர்களது கனவும் வண்ணமயமாகவே இருக்கும். இதை தவிர்த்து மற்ற கனவுகள் அனைத்தும் சரோஜாதேவி காலத்து கருப்பு வெள்ளைதான். பால்யகால நினைவுகள் கனவுகளாக வருகிறது என்றால் கொஞ்சம் கவணமாக இருக்க வேண்டும். அப்படி வந்தால் உங்களுக்கு வயதாகிவிட்டது என்று அர்த்தம். கனவுகளுக்கு நம் கண்கள் மிக முக்கியம், பெரும்பாலான காட்சிகள்தான் கனவாய்வரும். ஆனால் பார்வையற்றவர்களுக்கு காட்சி என்பது உணர்சியாக இருப்பதால் அவர்களுக்கு வாசனை ருசி, தொடு உணர்வு போன்றவை கனவாக வரும்.


Sigmund Freud என்பவர் கனவுகளை ஊரவைத்து, அடித்து துவைத்து, அலசி, காயபோட்டு, அயர்ன்பண்ணி "The Interpretation of Dreams" என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். இன்றுவரை இதுதான் கனவுகளுக்கான வேத புத்தகம். கனவுகளைப் பற்றிய படிப்பிற்கு  Oneirology என்றுபெயர். கனவுகளைப்பற்றி நடந்த ஆராய்ட்சிகள் அதிகம் இதில் "Calvin S Hall " என்பவரின் ஆராய்ச்சி மிகமுக்கியமானதாகக் கருதப்படுகிறது. 1940 ஆம் வருடம் தொடங்கி தான் இறக்கும் வரை (1985) கனவோடு வாழ்ந்து கனவுகளைப் பற்றி ஆராய்ந்தார். தினமும் காலையில் எழுந்து பல்லு விளக்கி காபி குடித்துவிட்டு வெளியில் கிளம்பிவிடுவார். தம் கண்ணில்படுவோரிடம் எக்சியூஸ் மீ மை நேம் இஸ் கெல்வின், நேற்று நீங்க என்ன கனவு கண்டீர்கள் சொல்ல முடியுமா? என 45 வருடங்களில் பலரது, பலகோடி கனவுகளை திரட்டி அவற்றில் சிறந்த 50000 கனவுகளையும் அதன் அர்த்தங்களையும் தொகுத்து வைத்துள்ளார்.

கனவு பலன்கள் என ஆயிரக்கணக்கான புத்தகங்களும் வெப்சைட்டுகளும் தற்போது கிடைக்கின்றன அவற்றிர்குள் நாம் கண்ட கனவைத் திணித்தால் ஹாரிபார்ட்டர் 7 பாகமும் தொடர்ச்சியாக பார்த்ததுபோல் ஆகிவிடும். அதனால் நிஜ உலகத்திற்குள் வருவோம். முன்பே சொன்னதுபோல நமது எண்ணங்கள் மற்றும் நினைவுகளின் வெளிப்பாடுதான் இந்த கனவு. நமது மனதில் தேங்கிக்கிடக்கும் தேவையற்ற குப்பைகளை வீசிவிட்டு, எண்ணங்களை அழுகுபடுத்தி, சிந்தனைகளை அடுக்கிவைத்து, நினைவுகளை பத்திரப்படுத்தி வைத்தால் நாம் கானும் கனவு எப்போதும் இனிமையானதாக இருக்கும்..