புயலின் முதல் முகவரி.



R.K.சேகர் (1933- 1976) அறுபதுகளில் மலையாள திரையுலகின் நம்பர் ஒன் மியூசிக் டைரக்டர். ராஜகோபால குலசேகரா என்ற பெயரின் சுருக்கமே R.K.சேகர். அந்தக் காலகட்டத்தில் இவரது பாடல்கள் கொடிகட்டி பறந்தது. பழஷிராஜா என்ற படம்தான் இவருக்கு முதல் வாய்ப்பு கொடுத்து. அதற்குப்பின் டாக்ஸி கார், மிஸ் மேரி போன்ற படங்கள் புகழ் பெற  மொத்தம் 52 படங்கள் மலையாளத்தில் மட்டும் 23 என 127 பாடல்களுக்கு இசையமைத்திருந்தார். குறுகிய காலத்தில் வாழ்கையில் முன்னேறிய அவர் வாழ்க்கையும்  குறுகிய காலத்திலே முடிந்தது. தான் நோய்வாய்ப்பட்ட கடைசி நிமிடத்திலும் சோட்டாணிக்கரை அம்மே என்ற படத்திற்கு இசையமைத்துத் தந்தார். அவர் இசையமைத்த "பெண்படா" என்ற திரைப்படத்தில் இசைக்குழுவோடு சேர்ந்து அவரது பத்துவயது மகன் திலிப் சேகர், "வெள்ளித் தேன் கிண்ணம் போல்" என்ற பாடலுக்கு கீ-போர்டு வாசித்தான். ஓரளவுக்கு அப்பாவின் இசை ஞானம் அவனுக்கு இருந்தது. தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு குடும்பச் சுமை முழுவதும் திலீப்பின் தலையிலே விழுந்தது. ஓ!.. சேகர் பையனா என, சிலர் மீயுசிக் கம்போசிங்களுக்கு அவனுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள். அவனும் வாசித்தபின் அவர்கள் கொடுக்கும் பணத்தை எண்ணிப் பார்க்காமல் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து தன் அம்மா கஸ்தூரியிடம் நீட்டுவான். சில வருடங்கள் அந்த அழகிய குடும்பம் இந்த சிறுவனால் ஜீவித்து வந்தது.

காலம் அந்த சிறந்த இசையமைப்பாளர் R.K.சேகரை மறந்து விட்டது. எப்போதாவது பழைய மலையாளப் பாடல்களை கேட்டால் இது சேகர் மியூசிக் என வெகு சிலரே அறிவார்கள். இன்றைய தலைமுறைக்கு R.K சேகர் என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால் அவரை A.R ரஹ்மானின் அப்பா என்று சொன்னால் ஒரு சிலருக்கு தெரியும் வாய்ப்பிருக்கிறது. ஆமாம்!..அந்த பத்துவயது சிறுவன் திலிப்சேகர்தான் A.R. ரஹ்மான் வெள்ளித் தேன் கிண்ணம் என்ற தன் தந்தை இசையமைத்த பாடல்தான் ஆஸ்கார் நாயகனின் முதல் முகவரி. எப்போதாவது அந்த பாடலை கேட்க நேர்ந்தால் காதை நன்கு தீட்டிக் கொள்ளுங்கள். அது ஆஸ்கர் நாயகனை நமக்குத் தந்த R. K. சேகருக்கு கொடுக்கும் மிகப் பெரிய வெகுமதியாக இருக்கும்.