☰ உள்ளே....

Ajaya...Roll of the Dice - கௌரவன்.


ஹீரோக்களின் கதை அழகானது அதைவிட வில்லன்களின் கதை சுவாரசியமானது. ஹீரோக்கள் செய்யும் செயல்களுக் கெல்லாம் நியாயம், தர்மம், விதி, அதிசயம், தெய்வீகம் என சப்பைக்கட்டு கட்டிவிடப்படும் ஆனால் வில்லன்களுக்கு அந்த புண்ணாக்குகள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. ஹீரோக்கள் பிறந்ததிலிருந்து நன்கு பதப்படுத்தப்பட்டு ஒரு இங்குபேட்டர் பேபிபோல வளர்க்கப் படுவார்கள். வில்லன்கள் வாழ்க்கையோ அதற்கு எதிராக காட்டாற்று வெள்ளம் போல் இருக்கும். ஹீரோக்கள் உருவாக ஏழு நட்சத்திரம் ஒன்று கூடி ஜாதகத்தில் ஏழு எட்டு கட்டங்கள் சரியாக இருக்க பிறந்தால் போதும். வில்லன்கள் உருவாகுவதற்கு அவர்களுடைய பிறப்பு மட்டுமின்றி வளர்ந்த விதம், இந்த புரையோடிப் போன சமுதாயம், மதம், கடவுள், பழமை, சட்டதிட்டம், என அனைத்தும் காரணமாக இருக்கும். சமீபத்தில் வெளிவந்த தனிஒருவன் திரைப்படத்தில் அழகான வில்லன் அரவிந்தசாமியை நாமெல்லாம் ரசித்தோம் இல்லையா?. இந்த வில்லன்கள் இல்லை என்றால் புராண இதிகாச கதைகள் முதல் சாதாரண பெட்டிக்கடை கதை வரை எதுவுமே இருக்காது. அதனால்தான் வில்லன்கள் வாழ்க்கை கதை சுவாரசியமானது.

நமக்குத் தெரிந்த மகாபாரதம் குருச்சேத்திரப் போரில் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட கதை. இதில் பாண்டவர்கள்தான் ஹீரோ. "தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்" என்ற பஞ்ச் டயலாக் இடம்பெற்ற காவியம். நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான கதை அதைப்பற்றி சொல்லத் தேவையில்லை. கதையில் வரும் பாண்டவர்கள், கிருஷ்ணன், திரௌபதி, பீமன், அர்சுணன், குந்தி என அனைவரைப் பற்றியும் இந்திய மொழிகள் பலவற்றில் புகழ்ந்துத்தள்ளி பல இலக்கியப் படைப்புகள் வெளிவந்திருக்கிறது. நம்ம செகன்ட் ஹீரோ கர்ணனைப் பற்றிக்கூட காவியம் இருக்கிறது. ஆனால் மாகாபாரத மெயின் வில்லன் துரியோதனனை அலசி ஆராய்ந்த எந்த இலக்கியப் படைப்பும் இல்லை. சமஸ்கிருதத்தில் பாசா என்பவர் எழுதிய "ஒருபங்கா " என்ற நாடகமும் "கதாயுதா "என்ற கவிதைப் படைப்பும் ஓரளவுக்கு இந்த வில்லனைப் பற்றி கூறுகிறது. அடடா! யாருமே துரியோதனனை சீண்டவில்லையே என்ற எண்ணத்தைப் போக்குகிறது இந்த புத்தகம். "Ajaya- Roll of the Dice " என்ற இந்த புத்தகத்தின் (எதிர்) நாயகன்  துரியோதனன்.

சக்திமிகு பாரதகண்டத்தில் இராஜவம்சத்தில் பெரும் குழப்பம் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது. ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பீஷ்மர் அரசின் ஒற்றுமையைக் காக்க போராடிக் கொண்டிருக்கிறார். பார்வையற்ற திருதராஷ்டிரன் அந்நிய நாட்டைச் சேர்ந்த தன் மனைவி காந்தாரியுடன் அரசவையில் சிவனே என அமர்ந்திருக்கிறார். இறந்துபோன அவரின் தம்பியின் மனைவியான குந்தி, தன் மூத்த மகன் தருமனை அரியணையில் அமர்த்த துடித்துக் கொண்டிருக்கிறாள். இது ஒரு புறம் இருக்க, தென்னக இராஜ்யங்களை கட்டியமைத்த பரசுராமன், குருவம்சத்தை வீழ்த்தி புதிய எழுச்சிமிகு பாரதத்தை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான். வேடர் குலத்தைச் சேர்ந்த ஏகலைவன் சமுதாயத்தில் நிலவும் சாதி அமைப்பை மீறி பழமையை உடைத்தெரிந்து தான் ஒரு சிறந்த போர் வீரணாக ஆகக் கனவு கண்டு கொண்டிருக்கிறான். நாகர்களின் தலைவன் தட்சகன் தீண்டத் தகாதவர்களையும், கீழ்ஜாதி என ஒதுக்கப் பட்டவர்களையும் ஒன்றுசேர்த்து நாட்டில் புரட்சியையும், கலவரத்தையும் தூண்டிவிட காத்திருக்கிறான்.பண்பாடு, பழமை, சாதிப் பிரிவினை இவைகள் தொலைந்து போகாமல் இருக்க தௌமியன் போன்ற பிராமணர்கள் அரசிற்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இவற்றையும் தாண்டி இராஜ வம்சத்தையும் ஒட்டுமொத்த பாரதத்தையும் அடியோடு புறட்டிப்போட்டு, தன் பழி தீர்த்துக்கொள்ள அந்நிய நாட்டைச் சேர்ந்த ஒருவன் (சகுனி) பகடையுடன் காத்திருக்கிறான் அவன் உருட்டும் பகடைக்கு இந்த பாரதம் ஆட்டம் காணப் போகிறது. இத்தனை சிக்கல்களுக்கிடையே நியாயப்படி தனக்குச் சேரவேண்டிய அரியணைக்காக போராடும் நிலமை துரியோதனனுக்கு வாய்க்கிறது. எல்லாவிதத்திலும் தங்களைவிட சிறந்து விளங்கும் பாண்டவர்களையும், சிக்கலான இந்த அரசியல் குழப்பங்களையும் சமாளிக்க அதர்மம், அநீதிகள், சூழ்ச்சி, வஞ்சகம், சதி போன்றவற்றை அவன் கையில் எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறான்.

மாகாபாரத்தில் தோற்றுப் போனவர்களின் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது இந்த புத்தகம். இதில் கர்ணண், அசுவத்தாமன், ஏகலைவன், பீஷ்மர், துரோணர், சகுனி, தட்சகன் போன்றவர்களின் கதையும் அடங்கியுள்ளது. தோற்கடிக்கப்பட்டு, ஏளனம் செய்யப்பட்டு, மிதித்து நசுக்கப் பட்டவர்களின் கதை. துரியோதனன் என்ற சொல்லுக்கு "வெல்லப்பட முடியாதவன் என்று பொருள் ". மாகாபாரதத்தை வேறோரு கோணத்தில் வாசிக்க நினைத்தால் இந்த புத்தகத்தை கையில் எடுக்கலாம்.

நூலாசிரியர்.

இந்தியாவின் வளர்ந்துவரும் எழுத்தாளர் "ஆனந்த் நீலகண்டன்". இந்த புத்தகம் இவரது இரண்டாவது படைப்பு. வில்லன்கள் மீது இவருக்கு அப்படி என்ன காதலோ தெரியவில்லை இவரது முதல்பதிப்பும் மாபெரும் வில்லனின் கதையே. "அசுரன் " அதாவது  இராமாயண வில்லன் இராவணனைப் பற்றி எழுதியிருந்தார். கேரளாவில் பிறந்த இவர் தற்போது பெங்களூரில் அழகிய குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

மொழிபெயர்ப்பாளர்.

நாகலட்சுமி சண்முகம் சிறந்த பேச்சாளர், தமிழ் நாடகத்துறையின் முன்னோடி மேதைகளான டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவரான திரு. முத்துசாமி அவர்களின் பேத்திதான் இந்த நாகலட்சுமி. உலக எழுத்தாளர்கள் பலரது சிறந்த படைப்புகளை தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளார். இந்த புத்தகத்திலும் அவரது ஆளுமை தெரிகிறது.Ajaya - Roll of the Dice
கௌரவன்
Manjul Publishing House
₹ 395.00.