☰ உள்ளே....

அந்த டிரான்சிஸ்டரும் பழைய ஹிந்திப் பாடல்களும்..


சிறுவயதில் பக்கத்து வீட்டில் வசித்துவந்த சாந்தா அத்தை பழைய டிரான்சிஸ்டர் ரேடியோ ஒன்று வைத்திருந்தாள். இராணுவத்தில் வேலைசெய்த தன் கணவனின் நினைவாக அவளிடம் இருந்தது அது ஒன்று மட்டுமே. இராணுவத்திலிருந்து சொந்த ஊருக்கு வந்த சினிமா கதாநாயகன் போல் எப்போதும் அது பச்சை உடையில் இருக்கும். சரோஜ் நாராயணசுவாமியின் குரலில் விடிந்த பகல்பொழுது கடைசியாக தூர்தர்ஷனின் செய்திக்குப்பின் மெல்ல இருளும் அப்போது ஆரம்பிக்கும் அந்த டிரான்சிஸ்டரின் கச்சேரி. பகல் முழுவதும் முற்றத்தில் காய்ந்த பேட்டரிகளை எடுத்துப்போட்டு, ஒரு குலுக்கு குலுக்கி, தலையில் செல்லமாகத் தட்டி, அதன் ஒற்றைக் கொம்பை தூக்கிவிட்டு, காதை மெல்லத் திருகி பாடவிடுவாள் சாந்தா அத்தை. முகமது ரஃபி, கிஷோர் குமார், லாதா மங்கேஷ்கருடன் ஹிந்தி பாடகர்கள் மெல்ல காற்றில் தவழ்ந்து வருவார்கள். சப்தம் குறைவாக இருந்தால் R.D பர்மன், மதன் மோகன் போன்ற இசையமைப்பாளர்கள் தாளம் போட்டு தாலாட்டுவார்கள். அதைக் கேட்டுக்கொண்டே உறங்கும் எங்களது இரவு.


பழைய ஹிந்திப் பாடல்களை கேட்கும் பழக்கத்திற்கு என் காதைப் பிடித்து இழுந்துச் சென்றவள் சாந்தா அத்தைதான். அதற்குப்பின் தூர்தர்ஷனில், சில ஹீரோக்கள் ஹீரோயின்களை கட்டிப்பிடித்து மலையில் உருண்டு, புரண்டு டூயட் பாட சில பாடல்களை ரசித்திருக்கிறேன். திருப்பூரில் உள்ள ஆனந்து அண்ணாவின் டீக்கடையில் மதியப் பொழுதுகளில் பக்கோடாவுடன் சில பாடல்களைச் சுவைத்ததுண்டு. இளங்கோ அண்ணா கார்டிரைவராக வந்தால் அந்த பயணம் முழுவதும் பழைய ஹிந்திப் பாடல்கள் துணைக்கு வரும். தற்போது பழைய ஹிந்திப் பாடல்களை கேட்க ஒரே கதி Sony Pix சேனல்தான். இரவு 9.30 முதல் 11.30 வரை தினமும் கிளாசிகள் ஹிந்திப் பாடல்களை ஒளிபரப்புகின்றனர். எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஏதாவது ஒரு புத்தகத்தை கையில் பிடித்தபடி பாடல்களை கேட்டுக்கொண்டு படுக்கையில் சாய்ந்து விடுவேன். அந்த தருணங்களில் சாந்தா அத்தையும், அந்த டிரான்சிஸ்டரும், பால்யகால நினைவுகளும் வண்ணம் மாறாமல் வந்துபோகும். 

ஒரு பாடலின் சுவை, அதை கேட்டு ரசித்த மற்றும் கேட்க ரசிக்கும் தருணங்களில்தான் ஒளிந்திருக்கிறது என நினைக்கிறேன். டிரான்சிஸ்டரில் கேட்ட பாடல்களில் சிலவற்றை இங்கு அசைபோடுகிறேன்.