☰ உள்ளே....

பலியாத் ஜெயச்சந்திர குட்டன்...


காலையில் எதேச்சையாக கேட்ட பாடல் சில நேரங்களில் அந்த நாள் தூங்கும் வரை மனதிற்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும். இன்று அப்படித்தான் முத்து அண்ணாவின் டீக்கடையில் கேட்ட அந்த பாடல்  திரும்பத் திரும்ப மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது.

"யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு,
நீதானே கண்ணே நான் வாழும் மூச்சி.
வாழ்ந்தாக வேண்டும்
வா வா பெண்னே".


இரண்டு தலைமுறைகள் தாண்டி காதலின் சோகப் பாடல்களில் நீங்காத இடத்தில் இருக்கும் பாடல் இது. எத்தனை முறை கேட்டாலும் சலிக்கத மென்மையான சோகம் தழுவிக்கொள்ளும். பலருக்கு தங்களின் "ராசாத்திகளை"  நினைவு படுத்துவதால் இந்த பாடல் காதல் சோகப் பாடல்கள் வரிசையில் இன்றும் முதலிடம். ராஜாவின் இசையில், வைதேகி காத்திருந்தாள் படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய பாடல். ஜெயச்சந்திரனின் குரலில் அமைதி இருக்கும். பக்தி, காதல், சோகம் எந்த வகையானாலும் அந்த குரலின் அமைதி பாடலிலும் பிரதிபலிக்கும். SPB மற்றும் யேசுதாஸ் குரல்கள் கொடிகட்டி பறந்த  காலத்தில் ஜெயச்சந்திரனுக்கு தமிழில் பாடும் வாய்ப்பு சற்று குறைந்து இருந்தது என்பது உண்மை, ஆனாலும் சில தனித்தன்மையான பாடல் என்றால் இசையமைப்பாளர்களின் சாய்ஸ் ஜெயச்சந்திரன்.

1944-ல் எர்ணாகுளம், இராவிபுரத்தில் பிறந்தவர் பலியாத் ஜெயச்சந்திர குட்டன் (P.ஜெயச்சந்திரன்).மேடை நிகழ்ச்சி ஒன்றில் பாடிக்கொண்டிருந்த போது மலையாள தயாரிப்பாளர் A. வின்சென்ட் மற்றும் R. பிரபு சினிமாவிற்குள் இழுத்து வந்தனர். குஞ்சாலி மரக்கர் என்ற மலையாளப் படம்தான் இவர் பாடிய முதல் படம். ஆனால் களித்தோழன் என்ற படம் வெளிவந்து இவரை திரையுலகிற்கு அறிமுகப் படுத்தியது. 1972-ல் MSV இசையமைத்த பணிதீராத வீடு படத்தில் இடம்பெற்ற "நீலகிரியுடே" பாடல் கேரளாவின் முதல் விருதைப் பெற்றுத்தந்தது. அதற்குப் பிறகு தென்னிந்திய மொழிகள் பலவற்றில் ஜெயச்சந்திரனின் குரல் ஒலித்தது. இளையராஜாவின் ஆத்மார்த்தமான பாடல்களில் ஜெயச்சந்திரன் இருப்பார். குறிப்பாக வைதேகி காத்திருந்தாள் படத்தில் வரும் இந்த பாடல், மேலும் மற்றொரு பாடல் "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி " அவரை புகழின் உச்சிற்கு கொண்டு சென்றது. கடலோர கவிதைகள் படத்தில் இடம் பெற்ற "கொடியிலே மல்லிகைப் பூ" பாடல் காதல் ஸ்பெஷல், காதலின் ஸ்பெஷல்.

அடுத்த தலைமுறை இசையில் A.R ரஹ்மானுக்கு மேமாதம் படத்தில் "என்மேல் விழுந்த மழைத்துளியே " பாடினார். வைரமுத்து, பாரதிராஜா, ரஹ்மான் கூட்டணியில் கிழக்குச் சீமையிலே "கத்தாழங் காட்டுவழி " பாடல் தமிழக விருதையும் கலைமாமணியையும் பெற்றுத் தந்தது. கண்ணத்தில் முத்தமிட்டாள் படத்தில் அவர் பாடிய பாடல் "ஒரு தெய்வம் தந்த பூவே " பெண் குழந்தைகளைப் பெற்ற தகப்பனின் குரலாகவே ஒலித்தது.
2008 -ல் ரஹ்மான் ஹிந்தி திரையுலகில் ADA என்ற படத்தில் Way of life பாடலில் அறிமுகம் செய்து வைத்தார். நாராயணகுரு என்ற படத்தில் இவர் பாடிய "சிவசங்கர சர்வ சரண்ய" என்ற பாடலுக்கு தேசிய விருதும் கிடைத்தது. தற்போது என்னு நிண்டே மொய்தீன் படத்தில் ஷரதாம்பரம் பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் கேரளாவில் புகழ்பெற்ற இலக்கியவாதி கவிஞர் சங்கம்புழா கிருஷ்ணபிள்ளை எழுதியது. அதற்கு அழகாக உயிர் கொடுத்திருப்பார் ஜெயச்சந்திரன். தற்போது எழுபதை தாண்டிய போதும் தேர்ந்தெடுத்த சில பாடல்கள் மட்டுமே அவரை தேடிவருகிறது. அப்படி அவர் பாடும் பாடல் காற்றில் அமைதியாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இவரைப் பற்றி சுவாரசியமான தகவல். இவர் விலங்கியல் படித்தவர். முறைப்படி மிருதங்கம் வாசிக்க பழகிவர். மூண்று மளையாள திரைப்படத்தில் நடித்துள்ளார். மேடை நிகழ்ச்சி ஒன்றில் பாடியபோதுதான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது, அதே மேடையில் அன்று இவருடன் பாடி சிறந்த குரல் பரிசை வென்றவர் K. J யேசுதாஸ்.
முத்து அண்ணாவின் டீக்கடை வடை சிலநாட்கள் காலைப் பசிக்கு ஈயப்படும். இன்று வடையோடு எண்ணைப்போல் என்னை ஒட்டிக்கொண்ட அந்த பாடல், செவிக்கும் உணவானது.
ஜெயச்சந்திரனின் அமைதியான குரலில் எனக்கு பிடித்த சில பாடல்கள்...