SEL ஷ்பெஷல்.

ங்கர் இஷான் லாய் இந்த பெயரை கேட்டதும் ஆரம்பத்தில் இவர்கள் இருவர் சேர்ந்த கூட்டணி என நினைத்திருந்தேன். இந்திய சினிமா இசையமைப்பாளர்களில் இருவர் இணைந்த கூட்டணிகள் ஏராளம். ஆனால் பின்நாட்களில் இவர்கள் மூவர் இணைந்த கூட்டணி என தெரியவந்தது. சங்கர் மகாதேவன் (Shankar Mahadeven), இஷான் நூரானி (Eshan Noorani), லால் மென்டோன்சா (Lol Mendonza) செல்லமாக SEL.


சங்கர் மகாதேவனைப்பற்றி நமக்கு ஓரளவு தெரிந்ததே. மும்பையில் பிறந்தாலும் கேரளாவை சேர்ந்த தமிழரான இவர் சிறுவயதிலேயே இந்துஸ்தானி கிளாசிக்கல்ஸ் மற்றும் கர்நாடக சங்கீதத்தை முறையாக கற்று தேர்ச்சி பெற்றார். ஐந்து வயதில் வீணை வாசிக்கும் பழக்கமும் இவருக்கு ஏற்பட பிரபல மராத்தி இசையமைப்பாளரான சீனிவாஸ் கலேயின் சிஷ்யரானார். வளர்ந்ததும் வழக்கம்போல் இந்திய இளைஞர்களுக்கு இருக்கும் ஐ.டி மோகம் இவருக்கும் இருந்தது. அந்த மோகத்தில் சாப்ட்வேர் இஞ்சினியராக மாறி ஆரக்கிள் வெர்ஷன் 6 ஐ ஆராய்ந்து கொண்டிருந்தார். இருந்தாலும் மறுபக்கம் இசையின் தாகம் அவருக்கு இருந்தது. அதை தனிக்கும் விதமாக 1998-ல் பிரீத்லெஸ் என்ற பாப் ஆல்பத்தை வெளியிட்டார். அதில் மூச்சுவிடாமல் ஒரு பாடலை பாடி அசத்தியிருந்தார். எதிலும் புதுமையைத் தேடும் இசைப்புயலின் காதுகளில் இவரது குரல் சென்றடைய, சங்கமம் திரைப்படத்தில் வராக நதிக்கரையோரம் பாடலை பாட சங்கர் மகாதேவனுக்கு அவர் வாய்ப்பு கொடுத்தார். பட்டிதொட்டியெங்கும் ஒலித்த அந்த பாடல் சங்கர் மகாதேவனுக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்தது. அதற்கு பிறகு  முழுநேர பாடகராக அவர் அறியப்பட, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்பட பாடலுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இஷான் நூரானியும் மும்பையில் பிறந்தவர்தான். கிதார் வாசிப்பதில் இவர் கைதேர்ந்தவர். அமெரிக்காவின் ஹாலிவுட் ஸ்டுடியோவில் இரண்டு வருடங்கள் இசை பயின்றவர். ஃபெண்டர் கிதார் என சொல்லக்கூடிய ஒருவகை எலக்ட்ரானிக் கிதாரை கையாளத் தெரிந்தவர்களில் இந்தியாவில் இவர் முதன்மையானவர். 

லாய் மென்டோன்சாவிற்கு பூர்வீகம் பெங்களூர். பியானோ மற்றும் கி போர்டு இவருக்கு அத்துபடி. அதுவே வெற்றிப்படி.  ஆரம்ப காலகட்டத்தில் இவர் தூர்தர்ஷன் தொலைகாட்சியில் சில இசைக்கோர்வைகளை செய்துவந்தார். பிறகு A.R.ரஹ்மான் மற்றும் நதீம் சர்வானிடம் பணிபுரிந்து இசை நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். 

இவர்கள் மூவரும் இணைந்து 1999 ஆம் ஆண்டு முதன்முதலாக ஒரு மராத்தி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர்களாக ஒப்பந்தமானார்கள் ஆனால் அந்த திரைப்படம் கைவிடப்பட்டது. பிறகு ராக்ஃபோர்ட் என்ற மராத்தி திரைப்படத்தில் இவர்கள் அறிமுகமாயினர். கமலஹாசனின் ஆளவந்தான் திரைப்படம்தான் இந்த மூவர் கூட்டணிக்கு திருப்புமுனையாக அமைந்தது என சொல்லலாம். அதற்குப்பின் தில் சஹ்தா ஹை, அர்மன், கபி அல்விதா நா கெஹனா, சலாம்-இ-இஷ்க், ஹே போபி, ஜானி கதார், ராக் ஆன், லன்டன் டீரீம்ஸ், என்று ஹிந்தியில் வரிசையாக ஹிட் அடிக்க கல் ஹோ நா ஹோ என்ற திரைப்படம் இவர்களுக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது. அமீர்கானின் தாரே ஜமீன் பர் திரைப்படம் இவர்களது இசை வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக விளங்கியது. தமிழில் இவர்கள் அதிக திரைப்படத்திற்கு இசை அமைக்கவில்லை என்றாலும் ஹிந்தியிலும் மேலும் சில இந்திய மொழிகளிலும் தற்போது அவர்கள் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். வருடத்திற்கு இரண்டு திரைப்படங்கள் அதில் இரண்டு பாடல்கள் ஹிட் போதும்ப்பா ..ஸ்..ஸப்பா என்பதே இவர்களின் அலட்டிக்கொள்ளாத சக்சஸ் பார்முலாவாக இருக்கிறது. இந்த மூவர் கூட்டணியைப் பற்றி அடியேனுக்கு தெரிந்த சில தகவல்கள் இவை. அதனுடன் அவர்கள் இசையமைத்த திரைப்பட பாடல்கள் சிலவற்றை SEL ஸ்பெஷலாக இங்கு பகிர்கிறேன்.

பாடல்களைக் காண