☰ உள்ளே....

மருதாணி .

மருதாணி இட்டுக்கொள்ள வேண்டும் போல் இருந்தது அம்மாவிடம் ஆசையைக் கூறினேன். என்னாடா? தீடீரென உனக்கு ஆசை அதுவும் இந்த வயசுல என்றாள். (அப்படி என்ன பெரிதாக வயதாகிவிட்டது 16+8+5+2+ ஹி.ஹீ அவ்வளவுதானே). சிறுவயதில் தீபாவளி பொங்கல் அல்லது ஏதாவது திருமண சுபகாரியம் என்றால் அம்மா மருதாணி இட்டுவிடுவாள். ஒரு பெரிய வட்டம் அதனைச் சுற்றி பல சிறிய வட்டம் பார்ப்பதற்கு சுரியனைச் சுற்றி ஒன்பது கோள்கள் என்ற இயற்பியல் படத்தை போல இருக்கும் அதுதான் அவளுக்கு இன்றுவரை தெரிந்த ஒரே டிசைன். பிரச்சனை என்னவென்றால் மருதாணி இட்டுக்கொண்ட அடுத்த நிமிடமே முதுகு அரிக்கத் தொடங்கும். நானும் தம்பியும் மாற்றி மாற்றி சொரிந்து விட்டுக் கொள்வோம். அந்த சொரிதலுக்கு கணக்கு வழக்கு ஊழல் சண்டை எல்லாம் உண்டு. அப்படியே அரித்து சொறிந்து தூங்கி முகமெல்லாம் இழுப்பிக் கொண்டு காலையில் கண் விழித்து காய்ந்திருக்கும் மருதாணி பத்தைக் கழுவி முடித்து முகர்கையில் அவ்வளவு சந்தோசம் பிறக்கும். யார்? கை நன்றாக சிவந்திருக்கிறது என்று எங்களுக்குள் அடுத்த சண்டையும் போட்டியும் தொடங்கும். பல வருடங்கள் ஓடிவிட்டது மருதாணி இட்டுக்கொண்ட பால்ய நாட்களும் அதன் வாசனையும் நினைவுக்கு வந்தது. எங்கள் வீட்டில் மருதாணி மரம்போல் வளர்ந்து கிடக்கிறது இதுவரை எனக்கு தோன்றியதில்லை ஆனால் இப்போது ஏதோ மருதாணி இட்டுக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. அதனை அம்மாவிடம் கூறியதும் 'நம்ம வீட்ல இருக்கிறது ஆம்பள மருதாணி அது உனக்கு சிவக்காது அத்தை வீட்டில் சொல்லிவிடுகிறேன்' என்றாள்.

மருதோன்றி இழை அதுதான் மருவி மருதாணி இலையானது. அழவணம், ஐவணம் என்று தமிழில் அழகாகச் சொல்லுவார்கள். ஆங்கிலத்தில் Henna. Al - Hinna என்ற அரபுச் சொல்லான இதற்கு "Awakening the inner light " என்று பொருள். மருதாணியின் தாயகம் வடக்கு ஆப்பிரிக்கா ஆகும். கி.மு 10200 முதல் கி.மு 4000 காலகட்டத்தில் வாழ்ந்த புதிய கற்கால மக்களே மருதாணியை உலகத்திற்கு அறிமுகப்படுத்தினர். அவர்களின் பார்வையில் கடவுளின் தெவ்வீக சக்தியின் இலையாக மருதாணி பார்க்கப்பட்டு வந்தது. பிறகு மொசபடோமியா, பாபிலோன், சுமேரியா என மருதாணி மனித நாகரீகத்தோடு கடந்து வந்திருக்கிறது. எகிப்தில் உள்ள மம்மிகளின் நகங்களில் மருதாணி இட்டிருந்த சாயம் இருப்பதாக சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர் அதாவது சுமார் 7000 வருடத்திற்கு முன்பே மருதாணி எகிப்தின் சுபகாரிய விழாக்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இந்தியாவில் 700 வருடங்களுக்கு முன்பிலிருந்து பயன்படுத்தி வருகிறார்கள். முகலாயர்கள் இந்தியாவுக்கு வந்தபிறகுதான் மூலிகையாக இருந்த மருதாணி அழகு பொருளாக மாறி சாமானியர்களின் கைக்கும் சென்று சேர்ந்தது. அவர்கள் காலத்தில் மெகந்தி இடுபவர்கள் என அந்தப்புரத்தில் ஒரு குழுவே இருந்திருக்கிறது.உங்கள் வெள்ளை முடியை மாற்ற மிகச்சிறந்தது மருதாணியும் கதமும் ஆகும். நூல் - நஸஈ - பாகம் 6 - அத்தியாயம் 48- எண்-5010.


நீங்கள் பெண்ணாக இருந்தால் உங்கள் விரல்களை முருதாணி இட்டுக்கொண்டு வித்தியாசப்படுத்தி காட்டுங்கள்.

நூல் - அபூதாவூத் - அத்தியாயம் 34- எண்-4154.

முகமது நபிகள் மருதாணியைப் பற்றி குரானில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். 

தமிழ் நாட்டில் சங்க காலத்தில் மருதாணியைப் பற்றி குறிப்புகள் எதாவது கிடைக்குமா? எனத் தேடினேன். பதிணொன்கீழ்கணக்கு நூலில் சிறு குறிப்பு ஒன்று கிடைத்தது.


கருவிளை, கண்மலர் போற் பூத்தன கார்க்கேற்

றெரிவனப் புற்றன தோன்றி- வரிவளை
முன்கை யிறப்பத் துறந்தார் வரல் கூறும்
இன்சொல் பலவு முறைத்து.

கார்காலம் வந்துவிட்டது கருவிளை மலர்போல் பெண்ணின் கருவிழி விழித்து பூத்துக்கிடக்கிறது. எறிகின்ற காட்டைப்போல செக்கச் சிவந்திருக்கிறது மருதாணி பூக்கள். ஆனாலும் வளையலை நழுவ விட்டது தலைவியின் கைகள். பிரிந்து சென்ற தலைவனின் வரவை எண்ணி சொல்ல முடியாத நிலையில் எதையும் சொல்லாமல் சிக்கித் தவித்தாள் காதலி. 

சித்த வைத்தியத்தியத்தில் இதனை "அட்ட கர்ம மூலிகை" என்கிறார்கள். பெருமாளின் கால்களில் தோன்றிய இலை என்றும் சனி பகவானின் மூலிகை என்றும் கூறுவார்கள். மருதாணியில் நாப்தோ குயீனோன், லாசோன், ஃபிளேவ்லாய்டுகள், ஸ்டீரால்கள், மற்றும் டேனின்கள் இருக்கின்றன. இவைகள் குறிப்பிட்ட அளவிற்கு உடலில் சேருவதால் நமக்கு நன்மைகளையே தோற்றுவிக்கின்றன. மன அழுத்தத்தை குறைக்கக் கூடிய தலைசிறந்த மூலிகை இந்த மருதாணி. அதனை கைகளில் இட்டுக்கொள்வதாலும், அல்லது இலைகளை மூட்டையாக கட்டி தலைக்கு வைத்து படுப்பதாலும் மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கலாம். பெண்களுக்கு மாதவிடாய் சுலபமாக இருக்கவும், இரத்தப் போக்கை குறைக்கவும் மருதாணி பெரிதும் உதவுகிறது. மேலும் வெள்ளைப்படுதலுக்கு மிகவும் சிறந்தது. கல்லீரல், பித்தப்பை போன்ற உள் உறுப்புகளின் செயல்பாடுகளை சீரமைக்கிறது. கரும்படை, வண்ணான் படை, அம்மைவடு, தேமல்,  போன்ற தோல் சம்மந்தப்பட்ட நோய்களுக்கும் மருதாணி அருமருந்து. மருதாணி இடுவதால் சேற்றுப்புண், நகக்கண் இடுக்கில் வரும் புண்கள், கால் ஆணி வராமல் தடுக்கலாம். தலைமுடிக்கு சிறந்தவொரு மூலிகை இந்த மருதாணிதான்.

மருதாணி இயற்கை வைத்தியத்தின் கொடை. இதை அன்றாட வாழ்வோடு பழக்கப்படுத்த நம் முன்னோர்கள் திருவிழா, மற்றும் சுபகாரியங்களில் மருதாணியை சேத்துக் கொள்ளும் பழக்கத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு அவர்களது மாதாந்திர தொல்லைகளை கட்டுப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் மருதாணி இடவேண்டும் என்பதை சடங்காகவே நடத்தி இருக்கின்றனர். பெண்களின் ஏழு ஸ்ரிங்காரத்தில் மருதாணியிட்டு கைகளை அழுகு படுத்துவதும் உள்ளது. வட மாநிலங்களில் திருமணத்திற்கு முன்பு மெகந்தி இடும் சடங்கு இன்றும் உள்ளது. மருதாணி சிவப்பதை வைத்து புதுந்த வீட்டில் மணப்பெண் பெறப்போகும் சந்தோசங்களை அவர்கள் கணக்கிடுகின்றனர்.

தற்போது மருதாணி இழையை மசிய அரைத்து இட்டுக்கொள்ளும் பழக்கமெல்லாம் தொலைந்தே விட்டது. எவன் பறித்து அரைத்து அதை பூசி, என நினைத்து கடைகளில் கிடைக்கும் கோன் வகை செயற்கை மருதாணிகளை வாங்கிக் கொள்கின்றனர். இயற்கையான மருதாணியை ஒருபோதும் ஒருநாளும் பதப்படுத்த முடியாது செயற்கையாக கிடைக்கும் கோன் மருதாணியில் dye- p- phenylenediamine (DPD) எனும் வேதிப்பொருள் அடங்கியுள்ளது. லுக்கிமியா எனும் புற்றுநோய் 75% பெண்களை தாக்குகிறது என மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த லுக்குமியாவின் காரணியான DPD அதிகளவு இந்த செயற்கை மருதாணி கோனில் உள்ளது. மேலும் பல தோல் வியாதிகளையும் இது தோற்றுவிக்கிறது. சிறுவயதில் பெண்மையடையும் சிறுமிகளை ஆய்வு செய்ததில் செயற்கை கோனும் இந்த நிகழ்விற்கு ஒரு காரணம் எனவும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். எதற்காக மருதாணியிடுகிறோமோ அதற்கு எதிர் விளைவை ஏற்படுத்துகிறது இந்த கோன் எனப்படும் செயற்கை மருதாணி. அதாவது சொந்த கையில் நாமே சூணியம் வைத்துக்கொள்கிறோம் (அழகிய டிசைனில்). குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த செயற்கை மருதாணி இடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. மழைக்காலம் அய்யோ! மருதாணி வைத்தால் சளி பிடிக்கும் என்பவர்கள் இலையை அரைக்கும்போது அதனுடன்  கொஞ்சம் நொச்சி இலையை சேர்த்துக் கொள்ளலாம். அல்லது அரைத்தபின் அதில் யூகலிப்டஸ் தைலம் அல்லது கோடாறி தைலம் (Axe oil) சில துளிகள் சேர்த்தால் சளி பிடிக்கும் சமாச்சாரம் இருக்காது.

இரவு தாமதமாக வீடு திரும்பினேன் கொஞ்சம் பொறுக்கிவிட்டு. அதற்குமுன் அத்தை வந்திருந்தாள் மருதாணியும் கூடவே வந்திருந்தது. உடைமாற்றி சாப்பிட்டு முடித்து கட்டையை சாய்க்கும் நேரத்தில் சிறுவயதில் என் கைபிடித்து அ ஆ இ ஈ சொல்லிக் கொடுத்தவள் மருதாணி இட்டுவிட்டாள். மனசுக்கு பிடிச்சவள நினைச்சிக்கோ அப்பதான் மருதாணி நல்லா சிவக்கும் என்றாள். நான் ஆட்டோ சயனினை (Auto Cyanin) நினைத்துக் கொண்டேன். மருதாணி சிவக்க இந்த ஆட்டோ சயனின் (Auto Cyanin) எனும் வேதிப்பொருள்தான் காரணம் அம்மாவும் அப்பாவும் தம்பியும் ஏற்கனவே பிரபஞ்சத்தின் மற்ற சூரிய குடும்பங்களை கையில் தாங்கியிருந்தனர்.அன்று இரவு ஏதோ பால்ய காலத்திற்கு திரும்பிவிட்ட சந்தோசம் எங்கள் வீடு முழுவதும் மருதாணியுடன் சேர்ந்து மனத்துக் கிடந்தது.