துவாளு.




வெறும் 26 சதுர கி.மீ. பரப்பளவு மட்டுமே கொண்ட குட்டித் தீவுதான் துவாளு (Tuvalu). உலகிலேயே மிகச் சிறிய நாடுகளின் பட்டியலில் துவாளுவுக்கு நான்காவது இடம். குட்டி நாடுதான் என்றபோதிலும், துவாளுவுக்கு எதிரிகள் ஒன்றிரண்டு அல்ல. வல்லரசு நாடுகள், வளரும் நாடுகள் என அத்தனையும் இந்தத் தீவுக்கு எதிரிதான். இது ஒருபுறமிருக்க, துவாளு தீவைப் பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யமானவை. புருவங்களை உயரச் செய்பவை. ஆஸ்திரேலியாவை அடுத்த பசிபிக் பெருங்கடலுக்கு நடுவே அமைந்திருக்கிறது இந்தக் குட்டித் தீவு.


சிறு நிலப்பரப்பும், மனித வாடையும் உடைய எந்தப் பகுதியையும்
பிரிட்டிஷாரின் காலனியாதிக்க வெறி விட்டு வைக்கவில்லை என்பதற்கு துவாளு தீவும் ஓர் சாட்சி. ஆம், பிரிட்டிஷாரின் நேரடிக் கட்டுப்பாட்டில், மாநில சட்டப்பேரவையைப் போன்ற ஆட்சி முறையைக் கொண்டிருந்த துவாளு தீவு 1978-ஆம் ஆண்டு விடுதலை அடைந்தது. ஒரு தேசத்துக்குரிய கட்டமைப்புகளை உருவாக்கிக் கொண்ட துவாளு தீவுக்கு 2000-ஆவது ஆண்டில்தான் ஐ.நா. அங்கீகாரம் கிடைத்தது. தற்போது இந்தத் தீவின் மொத்த மக்கள்தொகையே பத்தாயிரத்துச் சொச்சம்தான் 10834(2012).

1568  -ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டு மாலுமி Alvaro Mendane என்பவர்தான் இந்த தீவை உலகறிய செய்தார். இங்கு வாழும் மக்கள் 3000 ஆண்டிற்கு முந்தய  தலைமுறையின் மிச்சங்கள். Harry Clifford(1900) என்பவர் எடுத்த இந்த போட்டோதான் இந்த மக்களை வெளி உலகத்திற்கு கொண்டு சென்றது. அதற்கு பின்புதான் அவர்களுக்கு ஆபத்தே! காத்திருந்தது.  

பாலிநேசியன் இனத்தைச் சேர்ந்த இவர்கள் துவாளுயன் மொழி பேசுபவர்கள்.துவாளு தீவுக்கென்று தேசியக் கொடியும், 12 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட குட்டி நாடாளுமன்றமும் உண்டு. இதில் பிரதமர், அவைத் தலைவர், அமைச்சரவையும் அடக்கம். ஆனால், அரசியல் கட்சியெல்லாம் கிடையாது. சமூக அந்தஸ்து கொண்ட நபர்களையே ஆட்சியாளர்களாக மக்கள் தேர்வு செய்கின்றனர். துவாளு உயர்நீதிமன்றம்தான் இங்கு உச்சபட்ச நீதி அமைப்பாகும். தனித்துவமான சட்டங்கள்,காவல்துறை,சிறைச்சாலைகள் எல்லாம் உண்டு. அதேவேளையில், கொலை, பாலியல் கொடுமை போன்ற பெரிய அளவிலான குற்றங்கள் எதுவும் நிகழ்வதில்லை என்று கூறப்படுகிறது. இங்கு ராணுவமே கிடையாது.


திரும்பும் திசையெங்கும் பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும் இயற்கை அழகுக்கு இங்கு குறைவில்லை. எல்லாம் சரிதான். நாடு சிறியதாயினும், சிறப்புற விளங்கும் ஓரிடத்தில் மக்கள் மகிழ்ச்சியாகத்தானே வாழ வேண்டும்? ஆனால், துவாளுவில் அதுதான் இல்லை. தங்கள் நாடு எதிர்நோக்கியிருக்கும் பேரழிவை நினைத்து அங்குள்ள மக்கள் தினம், தினம் அச்சத்தோடு வாழுகின்றனர். எந்தவொரு நாடும் படையெடுத்து வர முடியாத அளவுக்கு கடலால் சூழப்பட்டிருக்கும் துவாளு தீவுக்கு அப்படி என்னதான் பிரச்னை என்று கேட்கத் தோன்றும். பிரச்னையின் மூல காரணமே அந்தக் கடல்தான்.

புவியின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உலகெங்கிலும் கடல்மட்டம் அதிகரித்து வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. துவாளு தீவு இதனால் பேராபத்தை எதிர்நோக்கியிருக்கிறது. கடல் மட்டத்துக்கும், இந்தத் தீவுக்கும் தற்போது 4.6 மீட்டர் உயரம் மட்டுமே வித்தியாசம். இதேநிலை தொடருமானால், துவாளு தீவை கடல் முழுமையாக விழுங்கிவிடும் என்ற அச்சமான சூழல்தான் அந்நாட்டு மக்களின் நிம்மதியைக் கெடுத்து வருகிறது. மக்களையும், தன் நாட்டையும் பேராபத்தில் இருந்து காப்பதற்காக துவாளு பிரதமர் எனிலே ஸ்போகா (Enele spoaga), புவி வெப்பமயமாதலுக்கு மூல காரணமான கரியமில வாயு வெளியேற்றப்படுவதை உலக நாடுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார். பாரிஸில் வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள

ஐ.நா. பருவநிலை மாநாட்டையொட்டி, ஐரோப்பிய நாடுகளிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.வெறும் 10,000 பேர்தானே, அவர்களை அப்படியே விமானத்திலோ, கப்பலிலோ ஏற்றிக் கொண்டுவந்து, மற்ற நாடுகளில் குடியமர்த்தினால் என்ன என்று நினைக்கத் தோன்றலாம்.இதற்கும் பதில் தருகிறார் எனிலே. "துவாளு மக்களை இடமாற்றம் செய்வதால் மட்டும் உலக வெப்பமயமாதல் பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட்டுவிடாது' என்கிறார் அவர்.
துவாளுவுக்கு இன்று ஏற்பட்டுள்ள பிரச்னை நாளை நமக்கும் நேரலாம்; இதைத் தவிர்க்க நாம் என்ன செய்யப் போகிறோம்? கரும்புகைக்கும் இரு சக்கர வாகனப் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டு, முடிந்தவரையில் பேருந்து, தொடர்வண்டி உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த நாம் முன்வர வேண்டும். குறிப்பாக, 5 கி.மீ. தொலைவுக்கு குறைவான பயணங்களுக்கு மிதிவண்டியைப் பயன்படுத்தினால், உடலுக்கும் ஆரோக்கியம், பணமும் சேமிப்பாகும். கூடவே, குளிரூட்டிகளின் (ஏ.சி., பிரிட்ஜ் போன்றவை) பயன்பாட்டைக் குறைப்பது அல்லது கைவிடுவது சுற்றுச்சூழலுக்கு நல்லது.

துவாளு தீவையே காக்கும் அளவுக்கு புவி வெப்பமயமாதலைத் தடுக்க வேண்டுமென்றால், அது உலக நாடுகள் மனமிறங்கினால் மட்டுமே சாத்தியம். ஆனால், கரியமில வாயு வெளியேற்றத்தை உலக நாடுகள் நிச்சயம் குறைக்கப் போவதில்லை. துவாளு மக்களை வேறு நாடுகளுக்கு குடிபெயரச் செய்வதைத்தான் இறுதித் தீர்வாக சர்வதேச சமுதாயம் முன்வைக்கும். எனினும், தனக்கென்று ஒரு தேசம், மொழி, கொடி, அரசு, தனித்துவமான பண்பாடு, கலாசாரம் என சுயமரியாதையோடு வாழ்பவர்களை வேறு நாட்டில் கொண்டு போய் "அகதி' என அடையாளப்படுத்தினால், அதை அவர்களது மனம் விரும்பி ஏற்குமா என்ன? இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

"துவாளு, துவாளு என்று ஒருநாடு இருந்தது உங்களுக்கு தெரியுமா?" என  சிட்டிசன் அஜித் மாதிரி இந்த நாட்டிலிருந்து யாரவது ஒருத்தர் கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.  

டாகுமெண்டரி... 


Jonathan  Sundgvist - ன் புகைப்பட தொகுப்பு..