பிரிதொருநாளில், மழைக்காலத்தில், கிராமத்து வீட்டில்.


தோ வந்துட்டேன் என
லெட்சுமியின் குரலுக்கு
தலையில் கித்தான்
போட்டுக்கொண்டு
கொட்டிலுக்கு ஓடுகிறார்
அப்பா,

சனியன் இங்கேயே
புலுக்க போட்டுடிச்சி என
அம்முவை திட்டிக் கொண்டே
அதற்கான
தழையைப் போடுகிறாள்
அம்மா,

எதோவொரு பாடலையும்
வறுத்த கடலையையும்
கொறித்துக்கொண்டே
அடைகாக்கும் சிட்டுவிற்கு
நொய்யரிசி வைக்கிறாள்
அக்கா,

எப்போதும்
சண்டையிட்டுக்கொள்ளும்
புஜ்ஜிக்கு
கக்கத்தை இறுக்கி
கதகதப்பை
தந்துகொண்டிருக்கிறது
மணி,

நனைந்து களைத்த
கருச்சிட்டானுக்கு
மறைக்கவும்
துடைக்கவும்
இலையை நீட்டுகிறது
பூவரசு,

எல்லோருக்கும்
பொழியும் மழை
எதையோ நினைவுபடுத்த
ஏதுமற்ற சடலமாய்
வானத்தையும்
விழும் துளிகளையும்
வெறித்துக் கொண்டிருக்கிறேன்
நான்.