நீமோவைத் தேடி.




தேடுதல் சுகமானது, அனுபவங்களை அள்ளித்தருவது, அதுவே வாழ்க்கையை நகர்த்துகிறது. பணம், பொருள், இன்பம் இவற்றிற்கான தேடுதல் ஒருபுறமிருந்தாலும் அன்பிற்கான தேடுதலே உயர்ந்தது. அதிலும் தொலைந்துபோன உறவுகளை தேடுவது என்பது வலியோடு சேர்ந்த சுகமான சுமையாகிறது. அப்படி தொலைந்துபோன தன் மகனைத்தேடி புறப்படும் தந்தை மீனின் கதைதான் "Finding Nemo".

பசிபிக் பெருங்கடலில் வாழும் மார்லின் என்ற மீன் தனது மனைவியை இழந்த பின்னர், தனது ஒரே மகனான நீமோவை மிகவும் அன்புடன் பாதுகாப்பாக வளர்க்கிறது. சற்று கண்டிப்புடன் இருக்கும் தந்தை மீனின் சொற்களைப் பொருட்படுத்தாத நீமோ ஒருநாள் தான் வாழும் பகுதியில் இருந்து பல தூரம் கடந்து செல்லும் பொழுது மனிதர்களால் பிடிக்கப்படுகிறது. இதைக் கண்ட மார்லின் தந்து மகனை மீட்க அந்த படகினை துரத்திச் செல்கிறது.
பிடிபட்ட நீமோ சிட்னி துறைமுகம் அருகே ஒரு பல் வைத்தியரின் மீன் தொட்டியில் அடைக்கப்படுகின்றது. அங்கு வாழும் பிற மீன்களுடன் நட்பு கொள்கிறது. இதற்கிடையே, நீமோவைத் தேடிச் செல்லும் மார்லினுக்கு, செல்லும் வழியில் பலரும் உதவி செய்கின்றனர். டோரி என்னும் மீனுடன் சிநேகிதம் கொள்ளும் மார்லின் தனது மகனைத் தேடி சிட்னி வரை செல்கின்றது. தனது தந்தை தன்னை மீட்க சிட்னிவரை வருவதை அறிந்துகொள்ளும் நீமோவும், மீன் தொட்டியிலிருக்கும் மற்ற மீன்களும் தப்பிக்க முயற்சி செய்கின்றனர். நீமோவால் தப்பிக்க முடிந்ததா, தந்தையும் மகனும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே அழகான மீதிக் கதை.

மார்லீன் மற்றும் நீமோவின் சாகசம் ஒருபுறம் இருந்தாலும் அனைத்தையும் மறந்துவிடக்கூடிய Short time memory loss (நம்ம கஜினி போல) கொண்ட டோரி என்ற மீன் செய்யும் லூட்டி அனைவரையும் வயிறுவலிக்கச் செய்கிறது. Ellen DeGeneres என்பவர் டோரிக்கு அழகாக குரல்கொடுத்து ரசிக்க வைக்கிறார். சைவத்திற்கு மாறிய சுராக்கள், ஆமை, நீலத்திமிங்கிலம் பெலிகன் பறவை என மார்லீன் சந்திக்கும் சிறுசிறு கதாபாத்திரங்களும் நம்மை மகிழ்விக்கின்றன. ஆழ்கடல் என்பது அழகு அதில் வாழும் உயிரினங்களை வைத்துக்கொண்டு தேடுதலையும் அதன் அனுபவங்களையும் கற்பனை கதையாக அழகாக காட்டியிருக்கிறார் இயக்குனர். 2003 ஆம் ஆண்டு Pixer animation studio தயாரித்து Walt Disney வெளியிட்ட இந்த அனிமேசன் திரைப்படம் வசூல் சாதனையையும் பல விருதுகளையும் தட்டிச்சென்றது. தவறாமல் பாருங்கள். 

Directed by - Andrew Stanton
Story - Andrew Stanton
Screan play - Andrew Stanton. Bob Peterson. David Reynolds.
Music - Thomas Newton.