வாழ்வியல்




ஓடு அல்லது பற வாழ்க்கை நமக்கு கட்டளையிடும் சொல். அதை துரத்தி குடும்பம், வேலை, பணம் என வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். தொட்டிச் செடியில் இன்று புதிதாக பிறந்த மலரையும், கோவில் கோபுரங்களில் பெட்டையுடன் ஒளியும் புறாக்களையும், தென்னை மரங்களுக்கிடையே மறையும் சூரியனையும், அன்றாட அற்ப நிகழ்வுகளாய் கடந்துவிடுகிறோம். சிறுவயதில் ரசித்த ஆறும், மலையும், வயல்களும் அதன் வழியில் அப்படியே இருக்க ஒருநிமிடம் நின்று அதனை ரசிக்கத் தவறுகிறோம். அன்புசெலுத்தும் சாதாரண மனிதர்களை கௌரவம் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு அலட்சியப்படுத்துகிறோம். ஒருகாலட்டத்தில் சராசரியான இந்த வாழ்க்கையை வெறுத்து அமைதியையும், மகிழ்ச்சியையும் எங்கோ தேடத் தொடங்குகிறோம். அனைத்தும் நம் அருகிலே இருந்தது இருக்கிறது என அறியாமல் மீண்டும் வேறொரு பாதையில் பயணிக்க ஆரம்பிக்கிறோம்.

சரி..சாதாரண பூக்களும், மழையும், சூரியனும் அற்ப மனிதர்களும் அன்றாட நிகழ்வுகளும் அமைதியான வாழ்க்கைக்கு எப்படி உதவக்கூடும்? இதை அழகாக விளக்கும் ஈரான் நாட்டு திரைப்படம்தான் The Song of Sparrows.



கரீம் ஈரானில் தெஹ்ரானுக்கு அருகில் உள்ள நெருப்புக் கோழி வளர்க்கும் பண்ணையில் வேலை செய்துவருகிறார். மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டமில்லாமல் வசித்துவரும் அவர் தன் குடும்பத்தை மனதார நேசிக்கிறார். கேட்கும்திறன் குறைபாடு உள்ள அவளது மகளின் காதில் பொருத்தப்படும் கருவியை சரிசெய்ய அவருக்கு பணம் தேவைப்படுகிறது. அவரது மகன் மற்றும் அவனது நண்பர்கள் இணைந்து தெருவில் உள்ள இடத்தில் தண்ணீர் தேவைக்காகவும், அழகிய மீன்களை வளர்க்கவும் சிறிய மணற்கேணியை தோண்டிக் கொண்டிருக்கின்றனர். கரீம் வழக்கமான அப்பாவைபோல் அவன் செயலை பொறுப்பில்லாதவன் என கண்டித்து விரட்டுகிறார். இதற்கிடையில் வேலைசெய்யும் பண்ணையிலிருந்து நெருப்புக் கோழி ஒன்று தப்பிவிடுகிறது அதை கவனிக்கத் தவறிய கரீம் தன் வேலையை இழக்கிறார்.

ஒருநாள் மகளின் காதுகேட்கும் கருவியை சரிசெய்ய தெஹ்ரான் நகரத்திற்கு செல்லும் அவர் பைக் டாக்ஸியைப் பற்றி தெரிந்து கொள்கிறார். கனிசமான பணம் கிடைக்கும் அந்த வேலையை தொடர முடிவு செய்கிறார். தன்னிடமிருக்கும் பணத்தை கொண்டு வைத்திருக்கும் மோட்டார் சைக்கிளை சரிசெய்து பைக் டாக்ஸியாக தினமும் உழைக்கிறார். தன் மகளுக்காகவும் வீட்டை சரிசெய்வதற்காகவும் பணத்தை சேமிக்கத் தொடங்குகிறார். பணம் ஈட்டுவதையே குறிக்கோளாக தொடரும் அவரது நடவடிக்கை வீடு உறவினர்கள் மற்றும் சுற்றத்தாரிடம் கண்டிப்புடன் மாறுகிறது. ஆனாலும் அவர் தன் நேர்மையை விடாது கடைபிடிக்கிறார்.

ஒருநாள் வீட்டுவேலை செய்துகொண்டிருக்கும் கரீம் தவறி கீழே விழுகிறார் கால் முறிந்த நிலையில் படுத்த படுக்கையாகிறார். வீட்டு பொருப்பையேற்க அவரது மகன் கூலி வேலைக்கு செல்கிறான். மகள் படிக்கும் நேரம்போக பூ விற்கவும், மனைவி வீட்டுவேலைக்கும் செல்ல தன் கையறு நிலமையை உணர்ந்து வருந்துகிறார். ஓரளவிற்கு குணமடைந்துவரும் கரீம் ஒருநாள் தன்மகன் வேலைசெய்யும் தோட்டக்காரருடன் நகரத்திற்கு செல்கிறார். அவரது மகன் மற்றும் நண்பர்கள் இணைந்து தாங்கள் புதிதாக கட்டியமைத்த மணற்கேணியில் நீந்தவிட வண்ணமீன்களை வாங்கிவருகின்றனர். வரும்வழியில் அவர்கள் கொண்டுவந்த தொட்டியில் விரிசல் ஏற்பட அனைத்து மீன்களையும் பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் நீர்த்தொட்டியில் விடுகின்றனர். இதனை பார்க்கும் கரீம் விட்டுக்கொடுத்தலையும், தன் கனவு நொருங்கிப்போகும் தருணதில் சிறுவர்களின் சமயோகித புத்தியையும் அவர்களின் மனநிலமையையும் வாழ்க்கை பாடமாக பெறுகிறார்.

நாட்கள் நகருகிறது கரீமின் உடல்நிலையும் தேறிவருகிறது. சிடுசிடுப்புடன் கண்டிப்பாக இருந்த அவரது போக்கில் சிறிது மாற்றமும் தன்னம்பிக்கையும் உருவாகிறது. அவர் தன் மகன் உருவாக்கிய மணற்கேணியை ரசிக்கிறார் முதன்முறையாக சிட்டுக்குருவியின் இன்னிசையை கேட்டு மகிழ்கிறார். உறவினர்கள் மற்றும் சுற்றத்தாரிடம் இனிமையாக பழகத் தொடங்குகிறார். ஒருநாள் அவரது மகள் அழகான இயற்கை ஓவியம் ஒன்று வரைகிறாள் அதனை ரசிக்கும் கரீம் இந்த இடம் எங்கே இருக்கிறது? என கேட்கிறார். அந்த இடம் தான் அன்றாடம் வேலைக்குச் செல்லும் பண்ணைக்கு அருகில்தான் இருக்கிறது என்பதையும், இதுவரை தாம் கவனிக்கத் தவறியதையும் நினைத்தும் வெட்கப்படுகிறார். தன் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு பண்ணையை நோக்கி புறப்படுகிறார். முன்பொருநாள் தப்பிச்சென்ற நெருப்புக் கோழி அந்த பண்ணைக்கு மீண்டும் திரும்புகிறது அதன் கண்களோடு பேசும் கரீம் எதையோ உணருகிறார். தன் மகள் வரைந்த ஓவியத்திலிருக்கும் இடத்திற்கு வருகிறார் தன்னை மறந்து வெறுமையாக ரசிக்கத் தொடங்குகிறார் திரை மெல்ல இருள்கிறது.


இந்த வாழ்க்கைதான் எத்தனை அழகானது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு மனிதர்களும் எதையோ நமக்கு கற்பித்துக்கொண்டே இருக்கின்றன. இந்த உன்னத தத்துவத்தை சாதாரண ஒரு நடுத்தர குடும்பத் தலைவனின் வாழ்க்கையின் வழியே காட்டிய இந்த திரைப்படத்தை இயக்கியவர் புகழ்பெற்ற ஈரான் இயக்குனர் மஜீத் மதீதி (Majid Majidi). அவரது பெரும்பாலான திரைப்படங்களில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் ரீஷா நஜீ (Reza Naji) என்ற நடிகர் இருப்பார். இந்த திரைப்படம் கதையின் நாயகனான அவரைச் சுற்றியே நகர்கிறது. தனக்கு கொடுத்த வாய்பை சரியாக பற்றிக்கொண்டு இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான தங்கக்கரடி விருதையும் அவர் தட்டிச்சென்றார்.

திரைப்படத்தின் அறிமுக காட்சியில் பண்ணையிலிருந்து ஒரு நெருப்புக் கோழி தப்பித்துச்செல்லும். ஊர்முழுவதும் சுற்றித்திரிந்துவிட்டு அது கடைசி காட்சியில் வெறுத்து பண்ணைக்கே திரும்பும். நமது வாழ்க்கையும் அந்த நெருப்புக்கோழி போலத்தான் எங்கோ? எப்படியே?  எதையோ? தேடித்திரிந்து கடைசியில் தொடங்கிய இடத்தில் வாழ்க்கையை முடிக்கிறோம். வாழ்வியலை உணர்த்தும் இந்த உன்னத திரைப்படத்தை தவறாமல் தரிசியுங்கள்.



📎
  • The Song of Sparrows
  • Directed by - Majid Majidi
  • Written by - Majid Majidi & Mehran Kashani.
  • Music by - Hossein Alizadeh
  • Country - Iran
  • Year - 2008
  • Language - Persian and Azeri