The Midnight Watch - Novel.


1912 -ஆம் ஆண்டு ஏப்ரல் 5 -ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் துறைமுகத்திலிருந்து எஸ்.எஸ்.கலிபோர்னியன் என்ற சரக்கு கப்பல் அமேரிக்காவின் பாஸ்டன் துறைமுகத்தை நோக்கி அட்லாண்டிக் பெருங்கடலில் பயணிக்கத் தொடங்கியது. புயலுக்கு முன்னே அமைதி என்பது போல் பெருங்கடல் அமைதியாக இருக்க வெப்பநிலை மட்டும் உறைநிலைக்கு வெகு அருகில் குறைந்து கொண்டே வந்தது. அந்த குளிரோடு சில நாட்கள் பயணித்த அந்த கப்பலுக்கு எப்ரல் 14 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஒரு அவசர செய்தி வந்தது. கப்பலின் வயர்லெஸ் ஆபரேட்டராக இருந்த சிரில் எவன்ஸ் என்பவருக்கு கிடைத்த அந்த செய்தியில் வட அட்லாண்டிக் பகுதியில் வெப்பநிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் ஐஸ்பெர்க் (Iceberg) என சொல்லக் கூடிய பனிப்பாறைகளின் ஆபத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. நியூ ஃபவுண்ட்லேண்ட் தீவில் உள்ள கேப் ரேஸ் என்ற பகுதியிலிருந்து அனுப்பப்பட்ட அந்த வயர்லெஸ் செய்தி அன்றைய நாளில் வட அட்லாண்டிக் கடலில் பயணித்த அனைத்து கப்பல்களுக்கும் எச்சரிக்கையாக விடப்பட்டது.

இதற்கிடையில் பயணித்த வழியில் இரவு 7.30 மணிக்கு மூன்று பெரிய பனிப் பாறைகளையும் இரவு 9.40 மணிக்கு எண்ணற்ற பனிப் பாறைகளையும் கண்டதாக கலிபோர்னியன் கப்பலின் கேப்டன் ஸ்டான்லி பிலிப் லார்ட் என்பவர் கிடைத்த அந்த அவசர செய்திக்கு பதில் அனுப்பும்படி வயர்லெஸ் ஆபரேட்டரிடம் தெரிவித்தார். மேலும் ஆபத்தை உணர்ந்து பயணத்தை காலையில் தொடங்கலாம் என கலிபோர்னியன் கப்பலை நிறுத்தும்படி தனது பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கப்பலின் இரவு விருந்து கலைகட்ட அதனை முடித்துக் கொண்ட கேப்டன் லார்ட் கப்பலின் குரோவ் என சொல்லக் கூடிய கண்காணிப்பு பகுதிக்குச் சென்று பொறியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். இரவு கண்காணிப்பு பணிக்கு சுழற்சி முறையில் மாற்றலான இரண்டாம் நிலை அதிகாரியான ஹெர்பெர்ட் ஸ்டோன் என்பவரிடம் தனது பேச்சை தொடர்ந்த கேப்டன் லார்ட்.....இன்றைய இரவு பெரிதான உற்சாகமான இரவாக இருக்கப் போவதில்லை....இந்த மயான அமைதியை தவிர்த்து....... என வேடிக்கையாக சொல்லிவிட்டு வாழ்த்துக்கள் மற்றும் இரவு வணக்கம் என அனைவரிடம் விடைபெற்று தனது படுக்கைக்குச் சென்றார்.

உறையும் இரவு, தெளிந்த வானம், மின்னும் நட்சத்திரங்கள், அசையாமல் நிற்கும் கப்பல் என கேப்டன் கூறியது போல் மயான அமைதியை உணர்ந்த அதிகாரி ஹெர்பெர்ட் ஸ்டோனிற்கு இரவு 12.10 மணிக்கு சில மைல்களுக்கு அப்பால் தெரிந்த ஒரு கப்பலின் முகப்பு வெளிச்சம் புது உற்சாகத்தை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து சில மணிநேரங்களில் வானில் வெண்ணிற ஒளி ஒன்று தோன்றி மறைந்தது.  அடிக்கடி வானில் தோன்றும் நட்சத்திர கூட்டங்களின் வெடிப்பு என நினைத்த அவருக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட வெண்ணிற ஒளி ஏதோ தவறு நிகழ்வதாக உணர்த்தியது. உடனே தான் கண்ட நிகழ்வை அவர் கேப்டன் லார்டிடம் தெரிவிக்க கப்பல் பணியாளர்கள் அவசரமாகக் கூடி அருகில் ஏதேனும் கப்பல் தென்படுகிறதா என தேடத் தொடங்கினர். கண்காணிப்பு கோபுரத்திலிருக்கும் மோர்ஸ் (Signal Lamp it's called Aldis Lamp) விளக்கினை எரியவிட்டு அடுத்த கப்பலுக்கு தங்களது இருப்பை தகவலாக தெரியப்படுத்தினர். மறு தகவல் எதுவும் கிடைக்காத நிலையில் வானில் தோன்றிய அந்த வெண்ணிற ஒளியை கண்காணிக்கவும் செய்தனர்.
தொடர்ந்து சிலமுறை பட்டாசுகளின் வான வேடிக்கையைப் போல வானில் ஏற்பட்ட வெண்ணிற ஒளியையும் அதனைத் தொடர்ந்து கடல் மட்டத்தில் அணைந்து கொண்டே வரும் பெரும் ஒளியையும் கலிபோர்னியன் கப்பலில் இருந்தவர்கள் கவணித்தனர். சிறிது நேரத்திற்கு பின் நள்ளிரவு 2.40 மணியை நெருங்கும் தருணத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் மீண்டும் மயான அமைதி திரும்பிய நிலையில்... சரி! விடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம்... என கேப்டன் உட்பட அனைவரும் படுக்கைக்கு சென்றனர். ஆனால் கண்காணிப்பு கோபுரத்திலிருந்த அதிகாரி ஹெர்பெர்ட் ஸ்டோன் மட்டும் வானத்தை வெறித்தபடி நின்று கொண்டிருந்தார், அவரது உள் மனது ஏதோ தவறு நிகழ்வதாக மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தது.

அடுத்தநாள் அதிகாலை 4.30 மணிக்கு கண்விழித்த கலிபோர்னியன் கப்பலின் கேப்டன் நேற்றிரவு என்ன நிகழ்ந்தது என்பதையும், அருகில் ஏதேனும் கப்பல் தென்பட்டதா என்பதையும் விசாரிக்கத் தொடங்கினார். நேற்றிரவு பனிப் பாறையில் மோதி மிகப்பெரிய பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியது என்ற தகவல் அவருக்கு கிடைக்க அவசரகதியில் கப்பலை இயக்க உத்தரவிட்டார். 1912 - ஆம் ஆண்டு ஏப்ரல் 15 -ஆம் நாள் காலை 8.30 மணிக்கு சம்பவம் நடந்த இடத்திற்கு கலிபோர்னியன் கப்பல் விரைந்தது. அதற்கு முன்னறே அந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களையும் தப்பி பிழைத்தவர்களையும் வேறு சில கப்பல்கள் மீட்டுச் சென்ற நிலையில் கடைசியில் நள்ளிரவில் மூழ்கிய அந்த பயணிகள் கப்பலின் உடைந்த பாகங்கள் மட்டுமே கலிபோர்னியன் கப்பலுக்கு கிடைத்தது. இத்தனைக்கும் உலகின் மிகப்பெரிய மூழ்கடிக்க முடியாத நீராவி கப்பல் என பெயர் பெற்ற ஆர்.எம்.எஸ் டைட்டானிக் கப்பல் மூழ்கும் தருணத்தில் கலிபோர்னியன் கப்பல் மட்டுமே மிக அருகில் இருந்தது குறிப்பிடத் தக்கது.

ஒரு நூற்றாண்டைத் தாண்டி இன்றளவும் டைட்டானிக் கப்பல் விபத்தே கடலில் ஏற்பட்ட மிகக் கொடுமையான விபத்தாக கருதப்படுகிறது. அந்த விபத்து நிகழ்ந்த தருணத்தில் வெகு அருகில் இருந்த கலிபோர்னியன் கப்பல் மட்டும் நினைத்திருந்தால் விபத்தில் உயிரிழந்த 1490 - 1635 பயணிகளில் பலரை மீட்டிருக்கக் கூடும். இருந்தும் கலிபோர்னியன் கப்பலால் டைட்டானிக் விபத்தை உணர இயலாமல் போனது ஏன்? விபத்து நிகழ்வது தெரிந்தும் டைட்டானிக் கப்பல் தங்களுக்கு அருகிலிருந்த கலிபோர்னியன் கப்பலை தொடர்பு கொள்ளாதது ஏன்? அந்த காலகட்டத்தில் ஒயர்லெஸ் போன்ற தகவல் தொழிநுட்பத்தில் இருந்த குறைபாடுகள் என்ன? டைட்டானிக் மூழ்கும் தருணத்தில் எச்சரிக்கை சமிக்கையாக வானில் ஏவப்பட்ட பட்டாசு ராக்கெட்டுகளை கலிபோர்னியன் கப்பலில் இருந்தவர்களால் ஆபத்து என புரிந்து கொள்ள முடியாமல் போனது எதனால்? அதேபோல் கலிபோர்னியன் கப்பலிருந்து மோர்ஸ் விளக்குகளால் சமிக்கை செய்தும் டைட்டானிக் கப்பல் எதற்காக அவர்களுக்கு பதில் தகவல் எதுவும் அனுப்பவில்லை? கப்பல் விபத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் லைஃப் போட் என சொல்லக்கூடிய படகில் கடும் குளிரில் மிதந்து கொண்டிருந்த தருணத்தில் தொலைவிலிருந்த கப்பல்கள் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட அருகிலிருந்த கலிபோர்னியன் கப்பல் அசையாமல் நின்றதேன். தொடர்பு ஏற்படுத்துவதில் சிக்கல்கள், தொடர்சியான சம்பவங்கள், பதட்டமான சூழ்நிலை, கண்காணிப்பு குறைபாடு, அதிகாரிகளின் அலட்சிய போக்கு இதில் எது இதற்கு காரணம்? மற்றும் SS Californian was a ship of British Leyland Line Steam Ship that is best know for it inaction during the sinking of RMS Titanic என கலிபோர்னியன் கப்பலின் வரலாறு கலங்கமாக மாற காரணம் என்ன? அத்தனை கேள்விகளுக்கும் இந்த நாவல் விடையளிக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால் டைட்டானிக் என்ற மாபெரும் கப்பல் வட அட்லாண்டிக் கடலில் பனிப் பாறையில் மோதி வித்துக்குள்ளாகி முழுவதும் மூழ்கியதாக கருதப்படும் 1912 -ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் நள்ளிரவு 12.40 - 2.20 மணியளவில் அந்த கப்பலுக்கு 19.5 மைல் ( 31.4 km) அருகிலிருந்த வேறொரு கப்பலான கலிபோர்னியன் கப்பலில் நடந்நது என்ன? என்பதுதான் இந்த நாவலின் கதை.டைட்டானிக் கப்பல் விபத்து நிகழ்ந்த சிலநாட்களில் அமேரிக்க செனட் கமிஷன், பிரிட்டன் MAIB (Marine Accident Investigation Branch) போன்ற அமைப்புகள் விசாரணையைத் தொடங்கினர். விபத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் உட்பட கலிபோர்னியன் கப்பலின் கேப்டன் மற்றும் அன்று அதில் பயணித்த 55 பணியாளர்களும் அந்த விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். கிட்டதட்ட 1992 -ஆம் ஆண்டுவரை நிகழ்ந்த விசாரணையின் முடிவில் அந்த நள்ளிரவில் நிகழ்ந்தது அனைத்தும் முன்னுக்குப் பின் முரணாக புரியாத புதிராகவே இருந்தன. அந்த புதிர்களை எல்லாம் தொகுத்து ஒரு புனைவுக் கதையாக சஸ்பென்ஸுடன் இந்த நாவல் விவரிக்கிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எழுத்தாளர் டேவிட் டையர் எழுதிய இந்த நாவலில் கதாபாத்திரங்கள் அனைத்தும் உண்மை சம்பவத்திலிருந்த அதே பெயரில் படைக்கப் பட்டிருக்கிறது. புனைவுக் கதைதான் என்றாலும் விறுவிறுப்பாக செல்லும் எளிமையான எழுத்து நடை ஒரு உண்மையை துப்பறிய சம்பவ இடத்திற்கு சென்று அது நிகழ்ந்த மணித்துளிகளுடன் பின்தொடர்வது போல் அமைந்திருக்கிறது. நிஜத்தில் நிகழ்ந்த ஒரு கோர விபத்து, அது தெரிந்தும் அதனை தடுக்க இயலாத அலட்சியப் போக்கு, விடை தெரியாத சில மர்மங்கள், முரணான பல சாட்சியங்கள் இவற்றோடு ஒரு சிறிய மனித தவறு எப்படி வரலாற்று பக்கங்களில் கருப்பு கறையாக பதிந்து விடுகிறது என்பதை தெரிந்துகொள்ள இந்த நாவலை வாசிக்கத் தவறாதீர்கள்.

The Midnight Watch

A Novel of the Titanic and the Californian.
By - David Dyer
Penguin Publishers.