யானை வாழ்க்கை.


 

கோவில்கள், நகர வீதிகள் அல்லது வேறு சில விழாக்களில் தென்படும் ஒரு யானையை கண்டால் நாமெல்லாம் என்ன செய்வோம்? ஒரு ஐந்து ரூபாய் நாணயம், அரை மூடி தேங்காய், இரண்டு மூன்று ஓய்ந்த வாழைப்பழம் அதற்கு பின்பு ஆசீர்வாதம் என இந்த உலகில் நிலத்தில் வாழும் மிகப் பெரிய விலங்கை பிச்சைக்கு அடிபணிய வைத்த பெருமிதத்தோடு கடந்து விடுவோம். ஆனால் அது ஒரு விலங்கு, அதற்கென ஒரு வாழ்க்கை இருக்கிறது, அது வாழும் இடம் இதுவல்ல என அதன் மீது பரிதாபப்படவும் அதனை மீட்கவும் யாருக்கும் தோன்றுவதே இல்லை. ஒருவேளை அப்படி ஒருவனுக்கு தோன்றினால் என்ன நிகழும் என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை.



பாங்காக்கில் வசிக்கும் கட்டிடக்கலை நிபுணரான தானா -விற்கு வாழ்க்கை நெருக்கடி நிலையில் சோகமாக கழிகிறது. தனது அலுவலகத்தில் சக ஊழியர்களால் நிராகரிக்கப்படும் அவர் வீட்டில் தன் மனைவியாலும் பாலியல் திருப்த்தியற்ற நிலையில் வெறுத்து ஒதுக்கப்படுகிறார். மேலும் அவரது தொழிலின் அடையாளமாக இருந்த அவர் கட்டி முடித்த புகழ்பெற்ற கட்டிடம் ஒன்று இடிக்கப்பட வாழ்க்கையின் நம்பிக்கையற்ற விரக்திக்கு தள்ளப்படுகிறார். ஆனால் இவை அனைத்தும் எதேச்சையாக தெருவில் பிச்சை எடுக்கும் ஒரு யானையை கண்டதும் திசை மாறுகிறது.

பாங்காக் நகரத்தின் தெருவில் தானா தான் கண்ட யானையை தனது சிறுவயதில் தன்னுடன் கிராமத்தில் பழகிய பாப்பாய் என்ற யானைதான் அது என அடையாளம் கண்டுகொள்கிறார். தன்னிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு அதனை மீட்டு வீட்டிற்கு அழைத்து வருகிறார். வீட்டில் அசாத்தியமற்ற சூழ்நிலை நிலவ, அது ஒரு விலங்கு, அதற்கென ஒரு வாழ்க்கை இருக்கிறது, அது வாழும் இடம் இதுவல்ல என உணர்ந்து அதனை தன் கிராமத்திற்கு கொண்டு சென்று தனது மாமாவின் பொறுப்பில் ஒப்படைக்க முடிவு செய்கிறார். அடுத்தநாள் தனது இயல்பு வாழ்க்கையை துறந்து அந்த யானையுடன் தனது கிராமத்தை நோக்கிய 300 மைல் தூர பயணத்தை  தொடங்குகிறார். தானா அந்த யானையை கிராமத்திற்கு கொண்டு சேர்த்தாரா? வழியில் அவருக்கு கிடைத்த அனுபவங்கள் எத்தகையது? அந்த பயணத்தில் அவர் பெற்ற வாழ்க்கை பாடம் என்ன? என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக் கதை.



தனிமை, ஏக்கம், விரக்தி நிறைந்த ஒரு நடுத்தர வயது ஆண் தானாவாகா நடித்த தானே வாரக்லுகுருஹ் (Thaneth Warakulnukroh) மொத்த கதையையும் தன் முகபாவனையில் தாங்குகிறார். ஒரு சிறிய மீட்டலில் அந்த யானையுடனான தனது பால்ய நினைவுகளை அசைபோட்டபடியே கவலைகளை மறந்து அதனுடன் பயணிக்கிறார். பயண வழியில் அவர் சந்திக்கும் மனிதர்களின் வழியாக நகரம் மற்றும் கிராமப்புற வாழ்க்கையின் அந்நியப் படுதலையும், வெளிப்புற முதாலாளித்துவம், உள்நாட்டு போராட்டம், பாலியல் வேட்கை, பிறப்பு இறப்பின் நிதர்சனம், கருணை, அன்பு, என சூழ்நிலை வாழ்வின் அனைத்தையும் உணர்கிறார். அவருடன் பயணிக்கும் பாப்பாய் என்ற யானையும் தனது பழைய கால வாழ்க்கை கிடைத்த தொனியில் பயணிக்கிறது. தானாவுடன் இணைந்து இயற்கையை ரசிப்பது, திருடுவது, சாப்பிடுவது, பியர் குடிப்பது, குளிப்பது, என அவருக்கு சற்று சளைக்காமல் அட்டகாசம் செய்கிறது.

இந்த திரைப்படம் யானையும் யானைக்காக நாயகனும் சாகசம் செய்யும் வழக்கமான திரைப்படம் கிடையாது. இந்த திரைப்படம் ஒரு யானையைப் போல் மென்மையாக அசைகிறது. அதற்கு ஒளிப்பதிவும் இசையும் கூடுதல் பலம் சேர்க்கிறது. நமது வாழ்க்கையும் இந்த யானைப் போலத்தான் உயிர்வாழ பிச்சைக்காக யாசிக்கிறது. ஏதோ ஒருவகை சங்கிலியால் பிணைக்கப் பட்டிருக்கிறது. யாரோ ஒருவரின் கையிலிருக்கும் அங்குசத்திற்கு அது அடிபணிகிறது. மதம் என்ற ஒன்று பிடிக்காத வரை எது நிகழ்ந்தாலும் அது அமைதியாகவே இருக்கிறது. இந்த திரைப்படம் வாழ்க்கையின் அந்த அர்த்தத்தையும் எதார்த்தத்தையும் ஒவ்வொரு காட்சியிலும் மறைமுகமாக பிரதிபலிக்கிறது. ஒரு உன்னதமான திரைப்படத்தை ரசிக்க பிரியப்பட்டால் இந்த திரைப்படத்தை தவறவிடாதீர்கள்.




Pop Aye
Written & Directed by - Kirsten Tan
Music - Matthew James Kelly
Cinematography - Chananun Chotrungpro
Edited by - Lee Chatametikool
Country - Singapore
Language - Thai
Year - 2017.