ஒக்கல் வாழ்க்கை தட்கும்.




ற்ற நாடுகளை காட்டிலும் இந்தியநாடு பண்பாட்டில் சிறந்து விளங்க காரணம் இங்கு நிலவும் இல்வாழ்க்கையே. தாய் தந்தை கணவன் மனைவி குழந்தைகள் சகோதர சகோதரிகள் என உறவுகளோடும் சுற்றத்தோடும் பின்னிப் பிணைந்த அந்த வாழ்க்கையே மற்றவர்களைக் காட்டிலும் இந்தியர்களை உயர்ந்தவர்களாக வைத்திருக்கிறது. இது ஒருபுறமிருக்க இந்த இல்லற வாழ்க்கையை நிகழ்த்தும் ஒருவனுக்கோ 'ச்சே என்னடா? இந்த வாழ்க்கை' என்ற சலிப்பும், 'எங்காவது தொலைந்தால் தேவலாம்' என்ற விரக்தியும் என்றாவது ஒருநாள் தோன்றவும் செய்கிறது.



தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

இறந்து போன மூதாதையர்கள், விருந்தாளிகள், கடவுள், சுற்றத்தார்கள், மற்றும் தான் என்ற இந்த ஐந்து பேரையும் பேணிக் காப்பது ஒரு இல்லறத்தானின் கடமை என்கிறது வள்ளுவம். இதில் தடங்கள் நேர்கையில்தான் இந்த சலிப்பும் விரக்தியும் தோன்றுகிறது. ஆனாலும் சிலந்தி வலைபோன்ற அந்த வாழ்க்கை வேறெங்கும் நகரவிடாமல்  அதற்குள்ளாகவே சுழலச் செய்கிறது. இன்றைய நவீன காலத்தில் மனிதன் குடும்ப வாழ்க்கையில் அந்நியப் பட்டாலும் எல்லா காலத்திற்கும் இந்த கசப்புணர்வு ஏற்புடையதாகவே இருக்கிறது. அதைத்தான் இல்வாழ்க்கை பல துன்பங்கள் நிறைந்தது என ஒரேருழவர் ஒக்கல் வாழ்க்கை தட்கும் என்ற இந்த புறநானூற்று பாடலில் அழகான இரு உவமையுடன் விளக்குகிறார்.

அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடும்மன்
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே
!

பொருள் ;

தோலை உரித்துத் திருப்பிப் போட்டதைப் போல வெண்மையான நெடிய நிலத்தில் ஒரு வேடனிடமிருந்து தப்பியோடும் மானைப்போல் எங்கேயாவது தப்பியோடி பிழைத்துக் கொள்ளலாம் என நினைத்தால், சுற்றத்தாருடன் கூடிய இல்வாழ்க்கை காலைத் தடுத்து நிறுத்துகிறது.

ஒக்கல் என்றால் இவ்விடத்தில் சுற்றத்தார் என பொருள் கொள்ளலாம். ஒக்கல் என்பதற்கு ஏற்றுதல் அல்லது ஏந்துதல் என்ற பொருளும் உண்டு. தோலை உரித்துத் திருப்பிப் போட்டதைப் போல வெண்மையான சதுப்புநிலம் மற்றும் வேடன் துரத்தும் புல்வாய் (புல்லை மேயும் மான்) இரண்டும் இந்த பாடலில் அழகாக உவமைகள். இந்த பாடலை ஒரு புதுக் கவிதையாக மாற்றினால் அதன் பொருள் எளிதில் விளங்கக் கூடும்.

யாதுமற்ற
சதுப்புநிலத்தில்
வேடன் துரத்தும்
மானைப் போல
ஓடிப் பிழைத்துவிட
முடியுமோ?
காலைத் தடுக்கும்
வாழ்க்கை.