எண்ணும் மனிதன்.


ரு கணக்கு புதிர். 

A B C என்ற மூவரும் சேர்ந்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிக்கின்றனர். அதே வேலையை A மட்டும் தனியாக செய்தால் 12 நாட்களிலும், B மட்டும் தனியாக செய்தால் 18 நாட்களிலும் முடிப்பார்கள் எனில் அந்த வேலையை C மட்டும் தனியாக செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பார்? 

அவருக்கு எத்தனை நாட்கள் ஆகும் என்பதைவிட இந்த புதிருக்கான விடையைத் தேட நமக்கு நிச்சயம் பல மணி நேரங்கள் அல்லது சில நாட்கள் கூட ஆகலாம். சிறு வயதில் பள்ளிப் பருவத்தில் எளிமையாக இருந்த ஒரு கணித புதிர்தான் இது. ஆனால் படிப்பிற்கு பிந்தைய நமது கணக்கீடு மற்றவைகளை நோக்கி திரும்பியதால் இந்த புதிர் சற்று சிரமமாக தோன்றுகிறது. நூற்றுக்கு நூறு, வீட்டுப்பாடம், டியூசன் என்ற நோக்கத்துடன் பயின்றதனால் என்னவோ மற்ற பாடங்களை காட்டிலும் கணிதம் நம் மனதில் நிற்பதே இல்லை. ஆனால் சூத்திரங்களால் பின்னப்பட்ட புதிர் முடிச்சுகளை அவிழ்க்கும் கணிதம் தனி சுகமே. புதிர்கள் நிறைந்த அத்தகைய கணிதத்தை ஒரு கதையாக சொன்னால் எப்படி இருக்கும் என்பதே இந்த புத்தகம் எண்ணும் மனிதன்

இந்த புத்தகத்தை எழுதியவர் பிரேசில் நாட்டை சேர்ந்த ஜூலியோ சீசர் டி மெலோ ஈ சௌசா (Julio Cesar de Mello Souza). மல்பா தஹான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் கட்டுரைகள் சிறுகதைகளை எழுதும் இவர் சிறந்த கணிதவியல் அறிஞரும் கூட. தான் நேசிக்கும் கணிதத்தை எளிய முறையில் கதையாக எழுதக்கூடிய அவரின் சிறந்த படைப்பான O Homem que Calculava (The Men Who Counted) என்ற புத்தகத்தின் தமிழாக்கம்தான் இந்த எண்ணும் மனிதன். இந்த புத்தத்தை மல்பா தஹான் ஒரு பயண அனுபவம் போல அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் சிறுவர்களின் கதைபோல கணித சூத்திரங்கள் மட்டுமல்லாமல் புகழ்பெற்ற கணித அறிஞர்களின் வரலாற்றையும் வாழ்க்கை ஞானத்தையும் இணைத்து அழகாக படைத்திருக்கிறார். அவருக்கு உதவியாக இந்த புத்தகத்தில் வரும் எண்ணும் மனிதன் என்ற கதாபாத்திரம் நாமெல்லாம் மறந்து போன கணிதத்தை நமக்கு வெகு அருகில் கொண்டு வருகிறான். 

சரி!. யார் இந்த எண்ணும் மனிதன்?

புத்தகத்தின் ஆசிரியரின் கற்பனை படி எண்ணும் மனிதனின் பெயர் பெரமிஸ் சமீர். பாரசீகத்தில் உள்ள கோய் என்ற சிறு கிராமத்தில் பிறந்த அவன் சிறுவனாக இருக்கும் போது ஊரில் உள்ள செல்வந்தர் ஒருவரிடம் ஆடு மேய்ப்பவனாக பணிபுரியத் தொடங்குகிறான். ஒவ்வொரு நாளும் ஆட்டை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று திரும்பும் அவன் முதலில் ஆடுகளை எண்ண பழுகுகிறான். சில மணித்துளிகளிலே ஒரு மந்தையிலிருக்கும் ஆடுகள் அனைத்தையும் எண்ணும் அளவிற்கு பயிற்சி பெற்ற அவன் வானத்தில் பறந்து செல்லும் பறவை கூட்டங்கள், பூச்சிகள், தேனீக்கள், மரங்கள், மரங்களில் உள்ள பழங்கள் என அசாத்திய மற்றவைகளையும் துள்ளியமாக எண்ணும் மதி நுட்பத்தை பெறுகிறான். அதனைக் கொண்டு அந்த செல்வந்தரின் பேரிச்சை தோட்டத்தில் மேற்பார்வையிடும் பணிக்கு உயர்த்தப்படுகிறான். கிட்டதட்ட பத்தாண்டுகள் அங்கு வேலை செய்யும் அவன் கிடைத்த ஒய்வில் பாக்தாத் நகரின் அழகியலைக் காண பயணம் செய்கிறான். இந்த புத்தகத்தின் தொடக்கத்தில் ஹனாக் தடே மையா என்பவர் புகழ் பெற்ற சமாரா நகருக்கு பயணம் செய்துவிட்டு பாக்தாத் திரும்பும் வழியில் பெரமிஸ் சமீர் என்ற அந்த எண்ணும் மனிதனை சந்திக்கிறார். அவனது எண்ணும் திறமையில் வியப்படைந்த அவர் அவனுடன் சேர்ந்து பாக்தாத்தை நோக்கி பயணிக்கிறார். 

ஹனாக் தடே மையாவின் அனுபவம் வழியாக இந்த புத்தகம் தொடங்க அவருடன் பயணிக்கும் எண்ணும் மனிதன் தனது அதீத கணித திறமையால் வழியில் சந்திக்கும் மனிதர்களின் கணித சிக்கல்களை தீர்க்கிறான், அவர்களுக்கு அறிவாந்த அறிவுகளை கூறுகிறான்.  அபாயகரமான எதிரிகளை வெல்கிறான். பாக்தாக் நகரத்தில் நுழையும் அவன் அங்கிருக்கும் கலிபா என்ற மத குருவின் அன்பை பெறுகிறான். பாக்தாத் மக்களின் நன் மதிப்பையும் பெறும் அவன் அரசவையிலும் நுழைகிறான். பேரும் புகழும் பரிசுகளும் பதவிகளும் அவனை வந்தடைகிறது. அந்த எண்ணும் மனிதன் தனது சாகசம் மூலம் கணித புதிர்கள் மட்டுமல்லாமல் எண்களின் சிறப்புகள், புகழ் பெற்ற கணித அறிஞர்களைப் பற்றிய குறிப்புகள், மத நம்பிக்கை, மதி நுட்பம், ஞானத் தேடல் அன்பு, கருணை என நம்மையும் ஒரு அற்புத பயணத்திற்கு அழைத்துச் செல்கிறான். 

கணிதப் புதிர்களை தவிர்த்து பார்த்தால் இந்த புத்தகம் புகழ் பெற்ற 1001 அரேபிய இரவுகள் கதை போன்று இருக்கிறது. ஹனாக் தடே மையா மற்றும் எண்ணும் மனிதன் இருவரின் பயணத்தில் பண்டைய பாக்தாத் தெருக்களை அது சுற்றிக் காட்டுகிறது. ஒரு பயணம், அதில் நிரம்பிய கதைகள், அதன் வழியாக கணிதத்தை இப்படியும் அனுக முடியுமா? என்ற ஆச்சரியம் இந்த புத்தகத்தை வாசிக்கும் போது எழுகிறது. அதுவே இந்த புத்தகத்தை மீண்டும் மீண்டும் கையில் எடுக்கத் தோன்றுகிறது. 
  • எண்ணும் மனிதன்
  • அகல் பதிப்பகம்
  • மல்பா தஹான்
  • தமிழில் கயல்விழி
(அற்புதமான இந்த புத்தகத்தை தமிழில் மொழிபெயர்ப்பது சவாலான விசயம் அதனை மொழிபெயர்த்த கயல்விழியைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இந்த புத்தகத்திலும் எந்த குறிப்பும் இல்லை. ஆனால் இந்த புத்தகத்தை கையில் எடுக்கும் போதெல்லாம் சலிக்காமல் அவரை பாராட்டத் தோன்றுகிறது.).