கொலையின் நினைவுகள்.



னிதனின் மனம் மிகவும் புதிரானது. பரிணாம வளர்ச்சியில் உருமாறியதால் என்னவோ அவ்வபோது அது மிருக குணத்திற்கு தாவும் தன்மையை கொண்டது. என்னதான் நாகரீகம் வளர்ந்தாலும் ஆழ்மனதில் குடிகொண்ட அந்த ஆதிகால மிருக குணம் வெளிப்படும் போதுதான் குற்ற சம்பவங்கள் நிகழ்கிறது. விதியையும் சட்டத்தையும் மீறும் மனிதனின் அத்தகைய குற்றங்கள் நீதியால் தண்டிக்கப்பட்டாலும் விடைதெரியாத மர்மங்களால் முடிவு என்ன? எனத் தெரியாது வரலாற்று பக்கங்களில் கருப்பு கறைகளாக நிரந்தரமாக தங்கிவிடும் சம்பவங்களும் இருக்கத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட ஒரு குற்ற சம்பவம்தான் 1986 - 1991 காலகட்டத்தில் தென்கொரியாவில் நிகழ்ந்த ஹ்வஸியாங் தொடர் கொலை சம்பவம் (Hwaseong serial murders).



தென்கொரியாவில் கியோங்க்கி மாகாணத்தில் உள்ள கிராமப்புர நகரமான ஹ்வஸியாங்கில் 1986 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் 71 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மர்மமான முறையில் வயல்வெளியில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்க அதனைத் தொடந்து சில மாதங்களில் அந்த கிராமப்புற நகரில் மேலும் சில கொலை சம்பவங்கள் நிகழ்ந்தது. காவல்துறை வழக்கமான விசாரணை நடவடிக்கைகளைத் தொடங்கினாலும் அடுத்தடுத்து அந்த இடத்தில் நிகழ்ந்த பல தொடர் கொலைகள் அனைவரையும் திகிலடையச் செய்தது. 1986 முதல் 1991 காலகட்டம் வரை தொடர்ந்து பத்து கொலைகள் என மர்மமான முறையில் இறந்த அனைவரும் வெவ்வேறு வயதுடைய பெண்களாக இருக்க, அவர்கள் அனைவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் உள்ளாடைகள் மற்றும் காலுறைகளைக் கொண்டு ஓரே மாதிரியாக கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தென்கொரிய அரசும் வேறுசில நாட்டின் துப்பறியும் நிறுவனங்களும் இணைந்து 3000 உயர் அதிகாரிகள், இரண்டு லட்சம் காவல் பணியாளர்கள், 21280 மேற்பட்ட சத்தேக நபர்கள், 40116 கைரேகைகள், 570 டி என் ஏ மாதிரிகள், 180 தலைமுடி ஆதாரங்கள் என இந்த தொடர் கொலையை ஆராய கொலையாளி யார்? என்ற புதிருக்கான விடையும், கொலைக்கு காரணமான அந்த மனிதனின் மனநிலை என்ன? என்பதுவும் இன்றுவரை கண்டுபிடிக்க இயலாமல் இருக்கிறது. தென்கொரியா நாட்டின் நீதிப் பக்கங்களில் கருப்பு கறையாக பதிந்துவிட்ட இந்த குற்ற சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு 2003 -ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான் மெமரிஸ் ஆஃப் மர்டர் (Memories of Murder).



மழை பொழியும் இரவு நேரத்தில் சிவப்பு நிற உடையணிந்த இளம் பெண்கள் கொலை செய்யப்பட அதனை துப்பறிய உள்ளூர் அதிகாரியான பார்க் டூ மேன் என்பவர் வருகிறார். ஆரம்பத்தில் அவருக்கு இது எளிதான கொலை வழக்குபோல் தோன்றினாலும் போகப்போக அதிலிருக்கும் சிக்கல்களை அவர் உணர்கிறார். சில நாட்களுக்குபின் மேலும் ஒரு கொலை சம்பவம் நடக்க பார்க் டூ மேனுக்கு துணையாக சியோலிருந்த மற்றொரு துப்பறியும் அதிகாரி சியோ-டூ-யூன் என்பவர் வருகிறார். இவர்கள் இருவரும் அவரவர்கள் பாணியில் கொலைக்கான காரணத்தையும் கொலையாளி யார் என்பதையும் புலனாய்வு செய்ய மர்ம முடிச்சுகளை விடுவிக்க இயலாமல் திணறுகின்றனர். கொலை நடைபெரும் இரவுகளில் ரேடியோ நிலையத்தில் வருத்தமான கடிதம் எனும் பாடல் ஒலிபரப்பப் பட அதனைக் கொண்டு கொலையாளியை நெருங்க முடியுமா? என்ற கோணத்தில் செல்கிறார்கள். அதனைப்போலவே வேறு சில சாட்சியங்களையும், தடையங்களையும், யூகங்களையும், சந்தேக நபர்களையும் வைத்துக் கொண்டு இந்த கொலையை ஆராய சில நாட்களுக்குப் பின்பு அங்கு மேலும் மேலும் சில கொலைகள் நடந்தேறுகிறது, கொலைக்கான சாட்சியங்களும் தவறுகிறது. இறுதியில் உண்மைச் சம்பவத்தைப் போலவே புலன் விசாரணையில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.



இந்த திரைப்படத்தின் பலம் அதன் நிதானம். வழக்கமான துப்பறியும் திரைப்படங்கள் ஒரு நேர்கோட்டில் பயணித்து கடையில் முடிவை நோக்கி நகரும் தன்மை கொண்டிருக்கும். ஆனால் இந்த திரைப்படத்தில் அந்த சுவாரசியங்கள் எதுவும் இல்லை.  ஆனாலும் கொலைக்கான மர்மம் விளகிவிடாதா! என்ற எதிர்பார்ப்போடு நகரும் திரைக்கதை இந்த திரைப்படத்தை வேறொரு பரிணாமத்திற்கு கொண்டு செல்கிறது. குறிப்பாக வெகு இயல்பாக முடியும் அந்த கடைசி கட்ட காட்சியே இந்த திரைப்படத்தை சிறந்த திரைப்படம் என அந்தஸ்திற்கு உயர்த்துகிறது. ஆதி மிருககுணம் கொண்ட மனிதனின் மனநிலை, ஒரு நிஜ கொலை சம்பவம், அதனை அடிப்படையாக கொண்ட மாறுபட்ட துப்பறியும் கதை,  அநாவசியமற்ற திகில் காட்சிகள், நேர்த்தியான ஒளிப்பதிவு, மர்மம் விலகும் எதிர்பார்ப்பு, சிந்திக்க வைக்கும் முடிவு என ஒரு புதுமையான திரைப்படத்தை காண நினைத்தால் இந்த மெமரிஸ் ஆஃப் மர்டர் திரைப்படத்தை தவறவிடாதீர்கள்.



Trailer

Salinui Chueok
(Memories of Murder)
Directed by - Bong Joon-ho
Written by - Bong Joon-ho, Shim Sung-bo
Based on- Memories of Murder,  Kim Kwang-rim
Music - Taro Iwashiro
Cinematography - Kim Hyung-koo
Year - 2003
Country - South Korea
Language - Korean.