காஃபீனிசம்.


வாங்களேன்...ஒரு கப் காஃபி சாப்பிடலாம் - என யாராவது கூப்பிட்டால் ஒரு கப் காஃபிதானே என ஓகே சொல்லாமல் கொஞ்சம் யோசித்து முடிவெடுங்கள். ஏனென்றால் நீங்கள் காஃபீனிசத்திற்கு அடிமையாகி விடக்கூடும். பாசிசம் சோசலிசம் கம்மியூனிசம் போல அது என்ன காஃபீனிசம் (Coffeinism)?..... ஜாலியாக பார்க்கலாம் வாருங்கள். 


காஃபீன் (Caffeine) என்ற வேதிப்பொருளுக்கு நம் உடல் அடிமையாகும் தன்மையே காஃபீனிசம் என அழைக்கப்படுகிறது. நமது அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட காஃபியில்தான் இந்த காஃபீன் என்ற நச்சுப் பொருள் அதிகமாக இருக்கிறது. ஒரு கோப்பை காஃபியில் 300 - 400 மில்லிகிராம் காஃபீன் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அதன்படி ஒரு நாளில் மூன்று அல்லது நான்கு குவளை காஃபியினை உறிஞ்சினால் இந்த காஃபீனிசம் உங்களை ஆட்டிப் படைக்கும். ஒரு சோதனைக்கு ஒரு நாளில் நீங்கள் பருக நினைக்கும் காஃபியினை கொஞ்சம் நிறுத்திப் பாருங்கள் அந்த சமயத்தில் உங்களுக்கு உடல் சோர்வு, கொட்டாவி, தூக்க மயக்கம், தலைவலி, மற்றும் உணச்சிவசப்பட்டு எல்லைமீறி எரிந்து விழுந்து கோபப்படும் தன்மை, வயிற்று கோளாறு இவையெல்லாம் ஏற்பட்டால் கங்கிராஜிலேஷன் நீங்கள் காஃபீனிசத்திற்கு அடிமை.

1,3,7- டிரை மெத்தில் பியூரைன் 2,6- டையோன் என்ற வேதியியல் நாமகரணம்  கொண்ட காஃபீன் நமது உடலில் CNS (Central Nervous System) என்ற மைய நரம்பு மண்டலத்தில் புகுந்த அடுத்த ஐந்து நிமிடத்தில் உடலெங்கும் பரவும் தன்மை கொண்டது. அதனால்தான் காஃபி குடித்தால் முன் பின் அறியாத ஒரு உற்சாகம் தோன்றுகிறது. அந்த உற்சாகத்தோடு ஏகப்பட்ட தீமைகளும் ஏற்படுகிறது. Early Death என சொல்லக்கூடிய முன்கூட்டிய மரணத்திற்கு இந்த காஃபீன் சிவப்பு கம்பளம் விரிக்கிறது. இரத்த அழுத்த அளவை அதிகரிக்கச் செய்வதோடு இளம் வயதில் இதய நோய்க்கும் இது வழிவகுக்கிறது. இந்த காஃபீன் பெண்களின் மார்பக திசு நீர்கட்டிகள் அதிகரிக்கவும், கருவுறும் தன்மையை குறைக்கவும் செய்கிறது. கருவுற்ற தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சில உடல் குறைபாடுகளையும் ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆராய்ச்சியில் மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களுக்கு ஏற்படும் VMS என்ற ஒருவித இரவில் சூடான வியர்வை வெளியேறும் தன்மையை இந்த காஃபின் ஊக்குவிப்பதாக கண்டுபிடித்திருக்கின்றனர்.  ஆண் பெண் இருபாலருக்கும் இன்சோம்னியா (Insomnia) என்ற தூக்கமின்மை கோளாறு, தலைவலி, மந்தத்தன்மை, அலர்ஜி, கேட்டல் குறைபாடு, அதிகமாக தாகம் எடுத்தல், அதிகமாக சிறுநீர் வெளியேறுதல், வயிற்று உபாதைகள், செரிமான உறுப்பின் அமிலத்தன்மையை அதிகரித்தல், நடுக்கம், பயம் கலந்த உணர்வு போன்ற அடிப்படையான பக்கவிளைவுகளை இந்த காஃபீன் ஏற்படுத்திருக்கிறது. அதிகப்படியான காஃபீன் மரணத்தையும் ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது.

இது ஒருபுறமிருக்க காஃபீன் என்ற இந்த நச்சுப்பொருளால் நன்மைகளும் இருக்கிறது. காஃபீன் உடலின் தசைகளுக்கு உற்சாகத்தை கொடுப்பதோடு வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. ஆஸ்பிரின் பாராசிட்டமால் போன்ற வலி நிவாரணிகளை விட காஃபீன் சிறந்தது. மேலும் இது இன்சுலின் சுரப்பை அதிகரித்து டைப் 2 வகை சர்க்கரை நோய் வராமல் காக்கிறது. அல்சைமர் என்ற மறதி நோய்க்கும் காஃபீன் சிறந்த மருந்தாக இருக்கிறது. சில மனநல குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கவும், தற்கொலை எண்ணத்தை தவிர்க்கவும், டி என் ஏ மூலக்கூறுகளை வலுப்படுத்தவும், புகையிலை பழக்கத்தை கைவிடவும், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயை (Colorectal Cancer) தடுக்கவும் காஃபீன் உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் முகத்தை பொலிவடைய செய்யவும், மேனி எழிலை மின்னச் செய்யவும் காஃபீன் அழகு ஊக்கியாக செயல்படுகிறது.

நன்மை தீமை இரண்டும் சரிவர கலந்த இந்த காஃபீனை நாம் எடுத்துக்கொள்வது சரியா? அதாவது காபி குடிப்பது நல்லதா கெட்டதா என்றால்? அளவுக்கு மீறாத காஃபீனும் அமிர்தமே என அதற்கென ஒரு அளவுமுறையையும் வைத்திருக்கிறார்கள். அதன்படி 4-6 வயதுடையவர்கள் 45 மிகி அளவும், 7-9 வயதுடையவர்கள் 62.5 மிகி அளவும், 10- 12 வயதுடையவர்கள் 85 மிகி அளவும் அதற்கு மேற்பட்ட வயதினர் அதிகபட்சம் 100-150 மிகி அளவும் இந்த காஃபீனை எடுத்துக் கொள்ளலாம். ஆதலால் ஒரு நாளில் குறைந்த பட்சம் அரை குவளை காஃபி பருகுவதே சாலச் சிறந்தது.

இதுவரை காஃபீனிசம் என்றால் என்ன? அதன் நன்மை தீமைகள் என்ன? காஃபி குடிக்கலாமா வேண்டாமா? அதன் அளவு? என்பதைப் பற்றி பொறுமையாக படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். சரி! வாங்களேன்...ஒரு கப் காஃபி சாப்பிடலாம்......