Condom Lead - ஏமாற்றம்.


The marriage bed becomes a kind of No Man's Land......

யிரத்தெட்டு அல்லது அதற்குமேல் இன்னும் ஒரு எட்டு என எத்தனை பிரச்சனைகள் நம்மைச்சுற்றி இருந்தாலும் அத்தனையையும் அவிழ்த்துப் போட்டுவிட்டு மன்மதனே சரணம் என சாயும் இரவுப் பொழுது நமக்கு இருக்கிறது. அதனால்தான் மக்கள் தொகையில் சீனாவை விஞ்ச தயாராகிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உலகின் சில நாடுகளில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை அவ்வாறு அமைந்து விடுவதில்லை. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் பாலஸ்தீன மக்கள். அவர்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை இஸ்ரேல். இந்த இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் அப்படி என்னதான் பிரச்சனை? என அறிந்துகொள்ள தேவதூதர்கள் எல்லாம் மண்ணில் அவதரித்து அற்புதங்களை எல்லாம் நிகழ்த்திக் காட்டிய வருடங்களைத் தாண்டி பின்நோக்கி பயணிக்க வேண்டும் அதனால் இந்த குறும்படத்திற்கு வருவோம்.


பாலஸ்தீனம் என சொல்லக்கூடிய பகுதியானான காஸாவின் மீது 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் நாள் காலை 11.30 மணிக்கு இஸ்ரேல் முன்னறிவிப்பின்றி தாங்குதலை தொடங்கியது. கிட்டதட்ட 22 நாட்கள் நிகழ்ந்த இந்த தொடர் தாக்குதலில் உண்ண உணவு, வசிப்பிடம், நீர், மின்சாரம், மருந்துவம் என அடிப்படை தேவைகள் எதுவும் இன்றி பாலஸ்தீன மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். பல்லாயிரம் அப்பாவி மக்கள் கொள்ளப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் மனித தன்மையை மீறிய செயல் என அனைவராலும் கண்டிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் காஸ்ட் லீட் (Cast Lead) என பெயர் வைத்திருந்தனர். இது நிகழ்ந்த அந்த 22 நாட்களைத்தான் இந்த குறும்படம் கதைக்களமாக கொண்டுள்ளது.

இந்த குறும்படத்தின் கதைப்படி இருள் நிறைந்த அந்நாட்களில் நடுத்தர வயது குடும்பஸ்தன் ஒருவன் தனது பாலியல் வேட்கையை தன் மனைவியிடம் தீர்த்துக்கொள்ள முயல்கிறான். ஆனால் நிகழும் கலவரங்களுக்கிடையே ஒவ்வொருநாள் இரவும் அது நிறைவேறாமல் போகிறது. அதன் விரக்தியில் ஒவ்வொரு நாளும் உடலுறவிற்காக வைத்திருந்த காண்டம்களில் காற்றை நிரப்பி பறக்க விடுகிறான். அது தொடர இறுதியில் காஸ்ட் லீட் என பெயரிடப்பட்ட அந்த கருப்பு நாட்கள் அனைத்தும் அவனுக்கு காண்டம் லீடாக மாறிப்போகிறது.

தனிமனிதன் ஒருவனின் பாலியல் வேட்கையின் மூலம் காலத்தின் கத்தி விளிம்பில் நிற்கும் பாலஸ்தீன மக்களின் நிலையையும், அவர்களின் ஏமாற்றத்தையும், போர் பிரிவினைவாதம் இவற்றின் கொடூரங்களையும் இந்த குறும்படம் உணர்த்துகிறது. மேலும் The marriage bed becomes a kind of No Man's Land என்பதை உண்மையாக்குகிறது.



📎
  • Condom Lead
  • Directed by - Arab Nasser Tarazan
  • Written by - Khalil Almozain
  • Photography - Rashid Abdelhamid
  • Country - Palestine
  • Year - 2013.