அது பப்பு அண்ணாவாக இருக்கக்கூடும்.



பரட்டை தலை  
அழுக்கு சட்டை
கவாஸ்கர் தொப்பி
கழுத்தில் தொங்கும் 
பித்தளை விசிலுடன் இருக்கும்
அவருக்கு நாங்கள் வைத்த பெயர்
பப்பு அண்ணா....
ஊரெது பெயரெது
மொழியெது வலியெது 
தெரியாத அந்த ஜீவன் பேசும் 
ஒரே வார்த்தை "தா"...
தொப்பியை கலற்றி
ஸ்டைலாக திருப்பி 
"தா" என கேட்டால்
உடனே தந்துவிட வேண்டும்
ஒரு ரூபாய் நாணயத்தை...
ஜானி பப்பி டைகர் 
மணி ரோசியைப் போல 
வாலாட்டி சுற்றிக் கொண்டிருக்கும்
ஜந்துவாகவே அவரை
அனைவரும் பாவிக்க
குழந்தையில்லாத
மாயா அத்தை மட்டுமே
பரிவு காட்டி 
மனிதம் அளந்துவந்தாள் 
அந்த ஈனப் பிறவிக்கு...
விசிலூதியபடி
குச்சியை தட்டிக்கொண்டு
கிழக்கு மேற்காக
நடைபோடும்
பப்பு அண்ணாவின் காவலில்
நிம்மதியாக உறங்கியது
பலநாள் இரவு...
பள்ளிக்கூட குழந்தைகள்
கிரிக்கெட்
ஒரு ரூபாய் நாணயம் 
அதில் வாங்கிய பீடிக்கட்டு
மாயா அத்தை
மற்றும் எங்கள் தெரு
இதுதான் பப்பு அண்ணாவின் 
பறந்து விரிந்த உலகம்...
எல்லோருக்குமான 
காலமும் வாழ்க்கையும்
பம்பரமாய் சுற்றிச் சுழல
மாரடைப்பால் 
மாயா அத்தை மரித்துப்போக
குழந்தைகளும்
ஜானியும் ரோசியும்
கிரிக்கெட்டும்
பப்பு அண்ணாவும்
இல்லாத எங்கள் தெரு
இப்போதெல்லாம்
வெறிச்சோடியே கிடக்கிறது.
பரட்டை தலை
அழுக்கு சட்டை
கழுத்தில் தொங்கும் 
பித்தளை விசிலோடு
கவாஸ்கர் தொப்பியை நீட்டி
"தா" என உங்களிடம் 
யாராவது எங்காவது 
எப்போதாவது கேட்டால் 
உடனே ஒரு ரூபாயை 
தயவுசெய்து தந்துவிடுங்கள்
ஏனென்றால்!
அது பப்பு அண்ணாவாக 
இருக்கக்கூடும்.