மார்ஷியல் ஆர்ட் திரைப்படங்கள் பகுதி - 4.




மார்ஷியல் ஆர்ட் என்றதும் நமது நினைவுக்கு வரும் ஒரே பெயர் குங்ஃபூ. இந்த குங்ஃபூ என்ற சீன மொழிக்கு கற்றல், பயிற்சி, சாதனை என்று பொருள். கோங்ஃபூ (Gong fu), வூசு (Wushu), வூஷியா(Wushiya) என்ற பெயரிலும் இது அழைக்கப்படுகிறது. இந்த கலையின் மூல ஆதாரம் கி.மு இரண்டாம் நூற்றாண்டில் சீனாவை ஆண்ட ஹான் வம்ச காலகட்டத்தில் தோற்றியது. அக்காலகட்டத்தில் வாழ்ந்த மருத்துவரான ஹுவா டுவா (Hwa Tuo) என்பவர் உடலை பேணிக்காக்கும் விதமாக புலி, கரடி, குரங்கு, மான், கொக்கு என்ற ஐந்து விலங்குகளின் செயல்பாடுகளைக் கொண்டு ஒரு உடற்பயிற்சி முறையை உருவாக்கினார். இந்த உடற்பயிற்சி முறைதான் தற்காப்பு கலைகளோடு கலந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் லியாங் வம்ச காலத்தில் குங்ஃபூவாக பிரபலமடைந்தது. குங்ஃபூ கலை உருவானதற்கும் அது பிரபலமாக மாறியதற்கும் சீனாவில் உள்ள ஷோலின் என்ற மடாலயம் முக்கிய காரணமாக இருந்தது. கி.மு. 495 ஆம் ஆண்டு சீனாவின் வடக்கே ஹோமின் மாகாணத்தில் உள்ள சாங் மலையில் நிறுவப்பட்ட இந்த மடாலயத்தின் தலைமை துறவியாக இருந்த தாமோ என்பவர் சிதறிக் கிடந்த கலைகள் அனைத்தையும் முறைபடுத்தி குங்ஃபூ என்ற பெயரில் புதிய கலையை தோற்றுவித்தார். இந்த தாமோ என்பவர்தான் நமது ஏழாம் அறிவு போதிதர்மன். அவர் தோற்றுவித்த இந்த குங்ஃபூ கலை, யீ கன் குங் (Ye Gun Kung) என்ற உடலை மேம்படுத்துதல், சாய் சோய் குங் (Sai Choi Kung) என்ற மனதை கட்டுப்படுத்துதல், சிம் குங் (Sime Kung) என்ற புத்தரை புறிந்து கொள்ளுதல் என்ற மூன்று அடிப்படை நிலைகளை கொண்டது. இதனைப் பின்பற்றியே குஃங்பூ கலை சீனாவையும் தாண்டி இன்று உலகம் முழுவதும் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை மார்ஷியல் ஆர்ட் என்பதைப் பற்றியும் அதன் வகைகளைப் பற்றியும் அது தொடர்பான திரைப்படங்கள் சிலவற்றை பற்றியும் பார்த்து வந்தோம். சென்ற பதிவின் தொடர்சியாக இருக்கும் சில திரைப்படங்களை இறுதியாக பார்த்துவிட்டு இத்துடன் இந்த தொடரை முடித்துக் கொள்வோம். மேலும் உலக சினிமாவின் வரிசையில் வேறு சில திரைப்படங்களோடு மீண்டும் சந்திப்போம்.

Kill Bill.



சீனாவை மையமாகக் கொண்டு வெளிவரும் திரைப்படங்களே மார்ஷியல் ஆர்ட் திரைப்படங்களில் முன்னணியில் இருக்க அதனை விஞ்சும் அளவிற்கு க்வென்டின் டிரான்டினோ (Quentin Tarantino) என்பவர் 2003 - ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் இந்த கில் பில் திரைப்படத்தை எடுத்திருந்தார். பில் என்பனை பழிவாங்கும் பழைய கதைதான் என்றாலும் இதில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள்  ரசிகர்களை கொள்ளையடித்தது. கதாநாயகியான உமா துர்மனின் (Uma Thurman) நடிப்பும் வில்லனின் துணையாக வரும் லூசி லியூவின் (Lucy Liu) நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது. மொத்தம் இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்த திரைப்படம் காமிக்ஸ் மற்றும் வீடியோ கேம் என பின்நாட்களில் புகழ்பெற்றது.

Ong Bak - Muay Thai Warrior.



டோனி ஜாவின் அசத்தல் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான் ஓங் பேங். டோனி ஜா தாய்லாந்தில் உள்ள சூரின் என்ற பகுதியிலிருக்கும் கிராமத்தில் பிறந்தார். சிறுவயதில் புருஸ் லீ, ஜாக்கி ஜெட்லியின் திரைப்படங்களை பார்த்துவிட்டு அவர்களைப் போலவே தன் நண்பகளுக்கு நடித்துக் காட்டும் பழக்கத்தை அவர் கொண்டிருந்தார். இவர்கள் மூவரையும் மனதால் குருவாக நினைத்துக் கொண்டு ஏகலைவன் போல டோனி ஜா தனது பத்து வயதில் தாய்லாந்தின் பிரபலமான முயாய் தாய் (Muay Thai) என்ற தற்காப்பு கலையை கற்று தேர்ந்தார். தனது பதினைந்தாவது வயதில் அதில் நடத்தப்படும் போட்டிகளில் தோல்வியே இல்லாத வெற்றிகளையும் பெற்றார். டோனி ஜா தனது கல்லூரி காலங்களில் தாய்லாந்தின் சினிமா மற்றும் டிவி தொடர்களில் அவ்வபோது தலைகாட்ட பின்னர் பிரசியா பின்ங்கா (Prachya Pinkaew) இயக்கிய ஓங் பேக் திரைப்படத்தில் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார். இந்த திரைப்படத்தில் தனது மானசீக குருக்களைப் போலவே சண்டைக் காட்சிகளில் அவர் டூப் போடாமல் நடிக்க புருஸ் லீ, ஜாக்கி, ஜெட்லி வரிசையில் அடுத்த தலைமுறை மார்ஷியல் ஆர்ட் திரைப்படங்களின் சூப்பர் கதாநாயகன் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்தார்.

Kung Fu Hustle.



ஜாக்கிசானைப் போல நகைச்சுவை கலந்த மார்ஷியல் ஆர்ட் திரைப்படங்களில் கலக்குபவர் ஸ்டிபன் சௌ (Stephen Chow). இவர் ஒரு நடிகர் மட்டுமல்லாமல் தற்காப்பு கலை நிபுணர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். இவரது முந்தைய திரைப்படமான ஷோலின் சாக்கர் (Shaolin Soccer) மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்க அதனைத் தொடர்ந்து சீனாவின் மார்ஷியல் ஆர்ட் கதைகளை அடிப்படையாகக் கொண்ட சிறுவர்களுக்கான காமிக்ஸ் கதைகளைத் தழுவி குங்ஃபூ ஹட்டில் என்ற இந்த திரைப்படத்தை அவர் எடுத்திருந்தார். இந்த திரைப்படம் 1930 -களில் சாங்காய் நகரத்தில் தொடங்குகிறது. அந்நகரில் வசிக்கும் மக்களுக்காக மார்ஷியல் ஆர்ட் கதைகளில் வரும் கற்பனை கதாபாத்திர குழுவான டெட்லி ஆக்ஸ் குழுவை எதிர்த்து கதாநாயகன் போராடுவதாக கதை அமைக்கப்பட்டிருந்தது. வியக்க வைக்கும் சண்டைக் காட்சிகள் மட்டுமல்லாமல் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை மற்றும் கண்ணைக் கவரும் அசத்தல் கிராபிக்ஸ் கலந்து இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

Ip Man



புரூஸ் லீயின் குரு,  விங் சுன் என்ற தற்காப்பு கலையின் நிபுணர் மற்றும் கிராண்ட் மாஸ்டர் என அழைக்கப்படும் இப் மேன் (Yip Man) என்பவரது வாழ்க்கையைத் தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.
இப் மேன் சீனாவில் உள்ள ஃபோஷான் நகரில் பிறந்தார். தனது ஏழு வயதில் சன் வான் ஷுன் (Chun Wah shun) என்பவரிடம் வின் சுன் என்ற கலையை கற்கத் தொடங்கினர். பிறகு இளமைப் பருவத்தில் காவல் அதிகாரியாக பணிபுரிந்த அவர் தான் கற்ற கலையை இலவசமாக அனைவருக்கும் கற்றுக் கொடுத்தார். இந்த திரைப்படம் விங் சுன் என்ற தற்காப்பு கலையை சீனா முழுவதும் பிரபலபடுத்திய இப் மேனின் முழு வாழ்க்கையை சொல்லாமல் 1937 -ல் தொடங்கிய சீன - ஜப்பான் போரில் ஃபோஷான் நகரத்தில் அவரது வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை மட்டும் விவரிக்கிறது. 1972 ஆண்டு இவர் புற்றுநோயால் இறந்த நிலையில் அவரது மகன் இப் சான் (Yep Chan) என்பவரின் உதவியோடு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இப் மேனாக டோனி யென் (Donnie Yen) நடிக்க அவருடன் சைமன் யம், லின் ஹங், கோர்டன் லாம், பேன் சியு வோங், ஜிங் யூ, சென் ஜு ஹுய் போன்றவர்களும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

Raid Redemption


சீனாவிற்கு சவால் விடக்கூடிய அளவிற்கு இந்தோனேசியா திரையுலகம் தயாரித்த திரைப்படம் இந்த ரெய்ட் ரிடெம்ப்சன்.  இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவல்துறை குழு ஒன்று போதைப் பொருள் சோதனைக்காக செல்ல அவர்கள் ஒவ்வொருவரும் மர்மமான முறையில் இறக்கின்றனர். கடைசியில் மிஞ்சும் கதாநாயகன் தன் அதிரடி சாகசத்தால் உண்மையை கண்டறிவதே இந்த திரைப்படத்தின் கதை. இந்த திரைப்படம் திக் திக் சஸ்பென்ஸ் வகையறா என்றாலும் அதிரடி சண்டைக் காட்சிகளாலும் ஒளிப்பதிவினாலும் மிரட்டச் செய்கிறது. க்ரேத் ஹு எவன்ஸ் (Gareth Haw Evans) என்பவரின் இயக்கத்தில் 2011 - ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் உலக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பலரது இரத்த அழுத்தத்தை உயரச் செய்தது குறிப்பிடத்தக்கது.