Chai - ஒரு கோப்பை தேனீர்.



கிராமங்களில்தான் நாட்டின் எதிர்காலம் இருக்கிறது என சுதந்திரத்திற்கு முன்பு மாகாத்மா காந்தி மக்களை கிராமங்களை நோக்கிச் செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால் அவற்றை மறந்து சுதந்திரத்திற்கு பிறகு ஐந்தாண்டு திட்டங்கள், பசுமைப் புரட்சி, மேட் இன் இந்தியா, கிளீன் இந்தியா, ஒன் இந்தியா, ஆப்கே இந்தியா, ஜாப்கே இந்தியா, ஜாங்கிரி இந்தியா, ஜிலேபி இந்தியா, பாவ்பஜ்ஜி இந்தியா என பல திட்டங்களால் இன்று கிராமங்களில் இருப்பவர்கள் நகரத்தை நோக்கிச் செல்லும் அவலநிலையே தொடர்கிறது. தன் சொந்த மண்ணில் பிழைப்பிற்கு நாதியில்லாமல் நகரங்களை நோக்கி தினம்தினம் படையெடுப்பவர்களே இதற்கு சாட்சியாக இருக்கின்றனர். இது ஒருபுறமிருக்க அவ்வாறு நகரங்களை நோக்கி பிழைக்கச் சென்றவர்கள் தொழில்புரட்சி, நகரமயமாதல், உலகமயமாதல், ஹைடெக் புரட்சி என இவற்றில் சிக்கி சிதைந்துபோவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.


நாலு எழுத்தும் அதற்குமேல் இரண்டு எழுத்தும் படித்திருந்தால் நகர வாழ்க்கை வாழ்வதற்கு சொர்க்கமாக மாறிவிடுகிறது. ஆனால் இவை இல்லாத அடித்தட்டு விழிம்புநிலை மக்களின் வாழ்க்கை நரக வாழ்க்கையாக அமைந்துவிடுகிறது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் அபரிவிதமானது என்பது மறுப்பதற்கில்லை ஆனால் அவை கவலைக்கும் உரியது. இந்த குறும்படம் கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கிச் சென்ற மக்களின் நிலையையும், நகரமயமாதலினால் ஏற்படும் சிக்கல்களையும், இந்தியாவின் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட மாற்றத்தையும், நான்கு வெவ்வேறு நகரங்கள் மற்றும் நான்கு கதாபாத்திரங்களின் கதைகள் மூலம் நமக்கு உணர்த்துகிறது. சொல்லப்போனால் வளர்ந்த அல்லது வளரும் இந்தியாவின் நகர்புறங்களின் மறுபக்கத்தை, ஒரு கோப்பை தேனீர் பருகும் நேரத்தில் நாம் கவனிக்க மறந்த நம்மை கடந்துபோகும் சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்வியலோடு  இந்த குறும்படம் அழகாக காட்டுகிறது.


📎

  • CHAI
  • Written & Directed By - Gitanjali Rao
  • Cinematography - Saumyananda Sahi
  • Music & Sound - Christopher Burchell
  • Country - India
  • Language -Hindi
  • Year -2013.