ஹாப்பி ஜலதோஷம்.

ழைக் காலம் மற்றும் குளிர் காலம் மட்டுமில்லாமல் இப்போது எல்லா காலங்களிலும் நமக்கு ஜலதோஷம் பிடித்துவிடுகிறது. தலை லேசா பாரமா இருக்கு... காய்ச்சல் வர மாதிரி இருக்கு... உடம்புபூரா ஒரே வலி... மூக்கு ஒழுகுது... தொண்டை கரகரக்க, அச்ச்ச்...சூ என மருந்துக்கடைக்கு முன் நின்றால், பச்சத்தண்ணி குடிக்காதீங்க... தலைக்கு குளிக்காதீங்க... உப்புபோட்டு வாய நல்லா கொப்பளிங்க... செரிக்கிறதா சாப்பிடுங்க... ரெஸ்ட் எடுங்க...ஹாப்பி ஜலதோஷம் என்ற அட்வைஸுடன் முப்பது ரூபாய்க்கு குறையாமல் மருந்து மாத்திரைகள் கிடைக்கும். அப்படி கிடைத்ததை விழுங்கினால் கொஞ்ச நாளுக்கு ஆறுதலும் கிடைக்கும். ஆனால் மீண்டும் ஒருநாள் தலை லேசா பாரமா இருக்கு... காய்ச்சல் வர மாதிரி இருக்கு... உடம்புபூரா .....என மருந்துக்கடைக்கு முன் நிற்க வேண்டிய நிலை வருகிறது.


வருடத்தில் சராசரியாக பத்து அல்லது பண்ணிரண்டு முறை ஒருவருக்கு ஜலதோஷம் பிடிக்கிறது என மருத்துவ அறிக்கை குறிப்பிடுகிறது. அதன்படி பெரும் சேதம் இல்லாவிட்டாலும் பாடாய் படுத்தும் இந்த சாதாரண ஜலதோஷம் நமக்கு ஏன் எதற்கு எப்படி வருகிறது? அதற்கு காரணம் என்ன? அதனை ஏன் முழுமையாக தடுக்கவோ குணப்படுத்தவோ முடிவதில்லை?

பார்க்கலாம் வாருங்கள்.

பழங்காலம் தொட்டு இன்று நம்மிடம் இருக்கும் நாட்டு வைத்திய குறிப்புகளிலும், கி.மு1550 ஆம் ஆண்டு எழுதப்பட்ட எபர்ஸ் பாபிரஸ் என்ற எகிப்தின் பழமையான மருத்துவ குறிப்பிலும் ஜலதோஷம் இடம் பெற்றிருந்தாலும் கி.பி 1950 ஆண்டிற்கு பின்புதான் இதற்கு காரணம் ரினோ வைரஸ் என கண்டுபிடிக்கப்பட்டது. ரினோ என்றால் கிரேக்க மொழியில் மூக்கு என பொருள்பட அதனைத் தொடர்ந்து பெரும் பொருட்செலவில் அந்த மூக்கு வைரஸின் நீளம், அகலம், உயரம், சிவப்பா, பச்சையா, கருப்பா, காவியா மற்றும் அது ஆரியமா, திராவிடமா, அதற்கும் மேலிடமா, எந்த இனத்தை சார்ந்தது? என்ற ஆராய்ச்சிகள் எல்லாம் தொடங்கியது. ஆராய்ச்சியின் முடிவில் ரினோ வைரஸ் பற்றிய ஆச்சரியங்களே மிஞ்சியது.


இந்த ரினோ வைரஸ் பொதுவாக காற்றிலே காணப்படுகிறது. 130 டிகிரி சூட்டையும் புவியீர்ப்பு அழுத்தத்தைப் போல 10000 மடங்கு அழுத்தத்தையும் தாங்கக் கூடிய மேலுறையை கொண்ட இது எளிதாக ஒருவரை தாக்கும் வல்லமை கொண்டது. சில குறிப்பிட்ட உடல் கோளாறு உள்ளவர்கள், காதுகளில் உள்ள யூஸ்டோசியன் குழல்கள் (Eustachian Tube) அடைபட்டவர்கள், சைனஸ் கோளாறு மற்றும் தூங்கும்போது வாயை திறந்து வைத்துக்கொண்டே தூங்குபவர்கள் இவர்களை மிக எளிதாக தாக்கும் தன்மை கொண்டது. அப்படி தாங்கியவர்களுடன் எல்லா விதத்திலும் நெருங்கி பழகுபவர்களிடம் தொற்றிக் கொள்ளும் தன்மையும் இதற்கு இருக்கிறது. மேலும் இந்த ரினோ வைரஸில் இரண்டு நூறுக்கு மேற்பட்ட வகைகள் இருக்கிறது. ஒவ்வொரு வகை வைரஸும் ஒவ்வொரு தன்மையை பெற்றிருக்க அவற்றை தனித்தனியே வகைபிரித்து ஒவ்வொன்றையும் அழிக்க பொதுவான தடுப்பு மருந்தும் வந்தபின் காக்கும் எதிர்ப்பு மருந்தும் இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது.

அப்படி என்றால் ஜலதோஷத்திற்கு நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகள்?

ஆண்டிபயாடிக் என சொல்லக்கூடிய எந்த கிருமிக்கொல்லிகளும் இந்த ஜலதோஷத்தை தீர்ப்பதில்லை. மேலும் நாம் எடுத்துக்கொள்ளும் ஆஸ்பிரின் பாராசிடமால் போன்ற மாத்திரைகள் ஜலதோஷத்தினால் ஏற்படும் தலை உடல் வலிகளை தணிக்குமே தவிர அதை முழுமையாக குணப்படுத்துவதில்லை. எல்லாவகை மருத்துவத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள ஜலதோஷத்திற்கான மருந்து மாத்திரைகள் அனைத்துமே வெறும் மனபிரமைக்காக கொடுக்கப்படுவதே ஆகும். ஒரு கட்டிங் ரம் அடித்துவிட்டு ஆப்பாயிலில் பெப்பர் தூவி சாப்பிட்டால் ஜலதோஷம் குணமாகும் என்ற போதை தர்மர்களின் மகா கண்டுபிடிப்புகள் கூட அதே மனபிராந்தி வகையைச் சேர்ந்ததாகும்.

இருந்தும் இந்த ஜலதோஷம் நம்மிடத்தில் மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் தொடராமல் சிலநாட்களில் விரைவில் எவ்வாறு குணமாகிறது?

நம்மிடம் எளிதில் தொற்றிக்கொள்ளும் ரினோ வைரஸ் முதலில் நமது மேல் சுவாச மண்டலங்களில் புகுந்து அங்கு வெள்ளை அணுக்களுடன் சண்டைபோடத் தொடங்குகிறது. ஆரம்பத்திலிருந்து ரினோ வைரஸ் ஜெயிக்க 96 மணிநேரங்கள் கழித்து அது தன் சண்டையை நிறுத்திக் கொள்கிறது. மேலும் தான் புதிதாக செல்களை உருவாக்குவதையும் நிறுத்திக்கொண்டு சண்டையில் இறந்த வைரஸ்களையும் மிச்சம் பிழைத்திருக்கும் வைரஸ்களையும் திரவமாக (சளியாக) அது வெளியேற்றுகிறது. தீடீரென இந்த ரினோ வைரஸ் வெள்ளை அணுக்களுடனான சண்டையில் பின்வாங்கி தன் தாக்குதலை நிறுத்திக் கொண்டு நம் உடலை விட்டு ஏன் வெளியேறுகிறது? என்பது இன்றுவரை புரியாத புதிராக இருக்கிறது.

எல்லாம் சரி, கடைசியாக இந்த ஜலதோஷம் வராமல் இருக்க என்ன செய்வது? வந்தால் என்னதான் செவ்வது?

தனிமனிதனின் சுத்தம் சுகாதாரம் இவற்றால் மட்டுமே ஜலதோஷம் வராமல் தடுக்க இயலும். மேலும் சைனஸ், யூஸ்டோசியன் குழல்கள்  பிரச்சனைகளை சரிசெய்வது அவசியம். அதனையும் தவிர்த்து ஜலதோஷம் பிடித்தால் முன்பே குறிப்பிட்டதுபோல் எல்லா மருத்துவ முறைகளிலும் பரிந்துறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொண்டால் அது 4 நாட்களில் குணமாகிவிடும். அதனைத் தவிர்த்து இந்த பதிவை படித்துவிட்டு அதி புத்திசாலித் தனத்துடன் மருந்து எதுவும் எடுத்துக்கொள்ளத் தவறினால் 96 மணிநேரத்தில் அது குணமாகிவிடும்.