மார்ஷியல் ஆர்ட் திரைப்படங்கள் பகுதி - 3.




சீனாவின் தற்காப்பு கலைகள் மூவாயிரம் வருடங்கள் பழமையானது. எதிரிநாட்டின் படையெடுப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள இராணுவ நடவடிக்கையாக அது ஆரம்பத்தில் பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. பின்னர் இராணுவ நடவடிக்கைகளிலிருந்து விலகி உடல் மனம் ஆன்மீகத்தோடு அந்த கலைகள் பிணைக்கப்பட்டது. சீனாவில் இருக்கும் புகழ்பெற்ற ஷோலின், தாய்ஜி, வுடாங் போன்ற கோவில்களில் அந்த கலைகள் வளர்க்கப்பட்டு வந்தது. அடித்தல், உதைத்தல், தடுத்தல், தற்காத்தல், ஓடுதல், தாவுதல், ஆயுதங்களை கையாளுதல் போன்ற செயல்முறைகளைக் கொண்ட அந்த கலைகள் சீனாவில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தன. சீன அரசு அந்த கலைகள் அனைத்தையும் 1928 ஆம் ஆண்டு வூசு அல்லது வுஷியா என்ற பெயரில் பொதுவாகத் தொகுத்தனர். வூ என்றால் இராணுவம் அல்லது தற்காப்பு, சு என்றால் கலை. 1932 க்கு பிறகு பழமையான கோவில்களில் தொடங்கி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இந்த கலைகள் கலாச்சார புரட்சியையும் நவீனத்தையும் தாண்டி இன்றளவும் கற்பிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த கலைகள் வருடந்தோறும் அங்கு போட்டிகளாக நடத்தப்பட்டு வருகின்றன. அதில் பட்டம் வென்றவர்கள் பலர் மார்ஷியல் ஆர்ட் என சொல்லக்கூடிய  திரைப்படங்களில் புகழ் பெற்றவர்களாக இருக்கின்றனர். இந்த கலைகளே மார்ஷியல் ஆர்ட் திரைப்படங்களுக்கு அடிப்படையாக இருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் நமக்கு நன்கு தெரிந்த குங்ஃபூ என்ற தற்காப்பு கலையின் மறு ஆக்கமே இந்த வூசு. 

குங்ஃபூ என்றால் என்ன? அது எப்போது தொடங்கப்பட்டது? அதை முன்நிறுத்தியவர்கள் யார்? என்பதைப் பற்றி அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம். அதற்குமுன் சென்ற பதிவின் தொடர்ச்சியாக அடியேன் ரசித்த மார்ஷில் ஆர்ட் திரைப்படங்களை கொஞ்சம் அசைபோடலாம்.

Police Story


ஜாக்கி சானின் திரையுலக வாழ்க்கையில் குறிப்பிடத் தகுந்த திரைப்படங்கள் என்றால் அது போலீஸ் ஸ்டோரி திரைப்பட வரிசையை சொல்லலாம். ஜாக்கி தான் நடித்த ஒரு திரைப்படத்தில் மனம் ஒன்றாமல் 1985 ஆம் ஆண்டு இந்த போலிஸ் ஸ்டோரி திரைப்பட வரிசையின் முதல் பாகத்தை தொடங்கினார். தனக்கே உறிய சண்டைக் காட்சிகளுடன் இன்னும் சிறந்த ஆக்ஷன் காட்சிகள் கலந்து தானே இயக்கி நடித்திருந்தார். இன்றளவும் அந்த திரைப்படத்தின் காட்சிகள் சிலவற்றை பலர் சுட்டுத் தள்ளுவதே இதற்கு கிடைத்த வெற்றியாகும். முதல் பாகத்தை தொடர்ந்து ஜாக்கி அடுத்தடுத்து போலிஸ் ஸ்டோரி 2, சூப்பர் காஃப், ஃபர்ஸ்ட் ஸ்டைர்க், நியூ போலிஸ் ஸ்டோரி, போலிஸ் ஸ்டோரி 2013 என மொத்தம் ஆறு பாகங்களை இதுவரை எடுத்திருக்கிறார். இன்ஸ்பெக்டர் சான் (கெவின் சான்) என்ற நேர்மையான போலிஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் குழந்தைத்தனமாக ஜாக்கியை தவிர்த்து கொஞ்சம் சீரியஸான ஜாக்கியையும், தன் உயிரை பணயம் வைத்து அவர் நடித்த சண்டைக் காட்சிகளையும் இந்த திரை வரிசையில் காணலாம்.

Once Upon a Time in China.


ஜாக்கிசானைப் போல ஜெட்லியின் திரையுலக வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படங்களின் வரிசைதான் இந்த ஒன்ஸ் அபான் எ டைம் இன் சைனா. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சீனாவின் சிங் அரச பரம்பரையின் ஆட்சியில் இராணுவ வீரராக இருந்த லியூ யங்ஃபூ என்பவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் பிளாக் ஃபிளாக் என்ற படைப்பிரிவில் இருந்த லியூ யங்ஃபூ பிரிட்டீஷ் படையெடுப்பு மற்றும் ஜப்பான் ஆக்கிரமிப்பு காலங்களில் சீனா நாட்டிற்காக அரும்பணிகளை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. லியூவின் கதாபாத்திரத்தில் ஜெட்லி அதிரடி காட்ட 1991 -ல் வெளிவந்த இந்த திரைப்படத்தை தொடர்ந்து குறுகிய காலகட்டங்களில் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்தது ரசிக்க வைத்தது.

Tai Chi Master.


பேரரசர் ஷிசுவின் ஆட்சியில் தத்துவஞானியாக இருந்தவர் சாங் சாஙெங். ஒரு போர் வீரனாக வாழ்க்கையைத் தொடங்கிய அவர் தற்காப்பு கலைகளை பயின்று அத்துடன் தாவோயிசம் எனும் மதக் கோட்பாட்டை கலந்து தாய்சாய் எனும் புதிய தற்காப்பு கலையை உருவாக்கினர். நிஜ்ஜா என சொல்லக்கூடிய சண்டை முறை இவர் வடிவமைத்ததே ஆகும். சீனா மக்களால் ஜூன்போ என அன்புடன் அழைக்கப்படும் இவர் 309 வருடங்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறார். அந்த சாங் சாஙெங்கை காதாநாயகனாக கொண்டு 1993 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான் தாய்சாய் மாஸ்டர். அவரது வேடத்தை ஜெட்லி ஏற்க அவருடன் புகழ்பெற்ற நடிகை மிச்சல் யாங்க் மற்றும் சின் க்யூ ஹோ போன்றவர்கள் நடித்திருந்தனர்.

Fist of Legend.


1972 ஆம் ஆண்டு புரூஸ் லீயின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஃபிஸ்ட் ஆஃப் ஃபைரி . இந்த திரைப்படம் முதல் உலகப்போரில் சீனாவில் உள்ள ஷாங்காயில் ஜப்பான் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடிய ஹி யுவானியா என்பவரை போற்றும் விதமாக தயாரிக்கப்பட்டிருந்தது. புரூஸ் லீ ஹி யுவானியாவின் மாணவர் கதாபாத்திரத்தை ஏற்று அவரது மறைவிற்கு பழிவாங்குவது போல் திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. புரூஸ் லீயின் விரல்விட்டு எண்ணக்கூடிய திரைப்படங்களில் ஒன்றான இதனை 1994 -ல் ரீமேக் செய்து ஃபிஸ்ட் ஆஃப் லிஜன்ட் என வெளியிட்டனர். புரூஸ் லீயின் இடத்தில் ஜெட்லி நடிக்க ஆக்ஷன் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் விருந்தாக அமைந்தது.

Crouching Tiger Hidden Dragon.


213.5 மில்லியன் டாலர் வசூல், அறுபதற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு, ஒரு கோல்டன் குலோப் விருது, பத்து அகாதமி விருதுகள், நாற்பதற்கும் மேற்பட்ட பிற விருதுகள், ஆஸ்கார் பரிந்துரை என மார்ஷியல் ஆர்ட் திரைப்படங்களில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது குரோச்சிங் டைகர் ஹிட்டன் டிராகன் திரைப்படம்தான். சீனா எழுத்தாளர் வாங் டுலு என்பவரின் மார்ஷியல் ஆர்ட் நாவலின் நான்காவது கதையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் 2000 ஆம் ஆண்டு வெளிவந்தது. நவீன தொழில்நுட்பத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் சோவ் யூன், மிச்சல் யாங், சாங் லீய், சாங் சென் போன்றவர்கள் நடிக்க, நடிகை மிச்சல் யாங்கின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. மேலும் டான் டன் என்பவரின் பாரம்பரியமான சீனாவின் இசையும், பீட்டர் பாவ் என்பவரின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது.