போரும் லைலாவும்.



This game is based on actual events.
For best experience Play this game in a dark room with head phone.


புத்தகம் சினிமா பாடல்கள் என அடியேனின் தேடுதல்களின் பட்டியலில் மொபைல் கேம்களுக்கும் இடம் உண்டு. அவ்வாறு தேடி கண்டுபிடித்தவைகளை கடைசிவரை முழுமூச்சாக விளையாடித் தீர்த்த பொழுதுபோக்கு அனுபவமும் உண்டு. அத்தகைய தேடுதலில் மேற்கண்ட முன்னறிவிப்புடன் Liyla The Shadow of War என்ற இந்த மொபைல் கேமினை டவுன்லோடு செய்தேன். Bad Land, Shadow Fight, Dead Ninja, Type Rider, Gravity Cave, Naught2, Miseria, போன்ற இருள் நிறைந்த மொபைல் கேம் வகையைச் சார்ந்த இது பாலஸ்தீனத்தில் உள்ள காஸா என்ற கலவர பகுதியினை விளையாட்டு தளமாக கொண்டிருக்கிறது. நடுத்தர வயது நிறைந்த தகப்பன் ஒருவன் தன் பெண்குழந்தை லைலா மற்றும் மனைவியுடன் போர்நிறைந்த சூழலில் பாலஸ்தீனத்தில் உள்ள அந்த காஸா பகுதியிலிருந்து எதிரிகளின் தாக்குதலுக்கு தப்பித்து வேறிடத்திற்கு செல்லவதைப் போல் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

விளையாடுவதற்கு மிக எளிமையான இந்த மொபைல் கேமில் மொத்தம் மூன்று சுற்றுகள் மட்டுமே இருக்கின்றது. வெகு விரைவாக குறைந்த நேரத்தில் தீர்ந்துவிடும் அந்த சுற்றுகளின் இறுதியில் அதாவது கேமின் முடிவில்  இதயம் சற்று கனக்கச்செய்கிறது. அது கண்ணீரையும் வரவழைக்கிறது. பிறகுதான் இது ஒரு விளையாட்டு அல்ல உலகிற்கு சொல்லும் அல்லது சொல்லவந்த செய்தி அல்லது உலகிற்கு எதிரான ஒரு வழக்கு அல்லது ஒரு உதவி என புரியவருகிறது.

போர் என்றால் என்ன? ஒரு நாட்டில் ஏற்படும் போரினால் சாதாரண மனிதனின் வாழ்வாதாரம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? என்பதனையும், உலகின் தீராத ஒன்றான இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனையையும் இந்த மொபைல் கேம் ஒரு சிறு விளையாட்டின் வழியாக நமக்கு ஆழமாக உணர்த்துகிறது. இது வெறும் விளையாட்டல்ல பாலஸ்தீனம் எனும் பகுதியில் வாழ்ந்து வரும் மக்களின் அன்றாட நிகழ்வு. இதில் வரும் கதாபாத்திரங்கள் கற்பனை அல்ல அவர்கள் அனைவரும் நிஜத்தில் வாழ்ந்தவர்கள் அல்லது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இதில் வரும் காட்சிகளும் இது வடிவமைக்கப்பட்ட விதமும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டதே.

விளையாட்டாக இப்படியும் தன் உணர்வுகளை பிரதிபலிக்கலாம் என இந்த மொபைல் கேமினை உருவாக்கிய ரஷித் அபுயீத் என்பவரை நிச்சயம் பாராட்டத் தகும். நான் இரண்டு குழந்தைகளின் தந்தை அது மட்டுமல்லாது பாலஸ்தீனத்தில் வசிப்பவன். அடுத்த நிமிடம் எனக்கு சொந்தமில்லை , இதுவரை எனக்கு எதுவும் நிகழ்ந்ததில்லை, அனால் அது எனக்கு நடந்தால்? என கோபம், அச்சம் ,பச்சோதாபம் என கலந்து அவர் இந்த மொபைல் கேமினை உருவாக்கி இருக்கிறார். கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் IOS தளங்களில் இலவசமாக கிடைக்கும் இந்த மொபைல் கேமினை டவுன்லோடு செய்து அதே முன்னறிவுப்புடன் ஒருமுறை நீங்களும் விளையாட்டாக முயற்சித்து மனதார உணர்ந்து பாருங்களேன்.

This game is based on actual events.
For best experience Play this game in a dark room with head phone.

Trailer




Download Link: