Crossing Salween - ஒரு அகதியின் நிலை.

னாதைகளை விட அகதிகளின் வாழ்வு கொடுமையானது. நன்கு வளர்ந்த மரம் ஒன்றை வேரோடு பிடுங்கி வேறிடத்தில் நட்டுவைக்கும் செயலுக்கு அது ஒப்பானது. இனம், மதம், மொழி, நாடு என்ற பாகுபாட்டில் தான் வசித்த ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு புலம்பெயர்ந்தவர்களே அகதிகள் என அழைக்கப்படுகின்றனர்அவ்வாறு அவர்கள் புலம்பெயர சுதந்திரம் சர்வாதிகாரம், அரசியலமைப்பு, உள்நாட்டு கலவரம், போர் என இருக்குமிடத்தின் வாழ்வாதார பிரச்சனைகள் காரணமாக அமைகின்றது. இன்று உலகம் முழுவதும் சுமார் 65.3 மில்லியன் மக்கள் தங்கள் இருப்பிடத்தை தொலைத்துவிட்டு அகதிகளாக வாழ்கின்றனர் என UNHCR ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. மேலும் தினம்தினம் சராசரியாக 2453 மக்கள் அகதிகளாக புலம்பெயர தங்கள் வாழ்க்கையை பணயம் வைக்கின்றனர் என அந்த ஆய்வரிக்கை குறிப்பிடுகிறது. அதன்படி நாம் நன்கறிந்த இலங்கையில் தொடங்கி ஆப்கானிஸ்தான், ஈரான், சூடான், சிரியா, தீபெத் போன்ற நாடுகளில் வசித்த மக்களே பெரும்பான்மையான அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அதில் மியான்மர் என்ற பர்மா நாட்டைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.


1948-ல் பிரிட்டிஸ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்த பர்மா நாட்டில் 1962 -ஆம் ஆண்டு இராணுவ ஆட்சி தொடங்கியது. அன்றுமுதல் இன்றுவரை அங்கு உள்நாட்டு கலவரங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. அதில் 2010 ஆம் ஆண்டு நாட்டின் பொதுத் தேர்தலையொட்டி நிகழ்ந்த உள்நாட்டு கலவரத்தில் பர்மாவின் கிழக்கு எல்லைப் பகுதியில் வசித்த மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மக்கள் அகதிகளாக அண்டை நாடான தாய்லாந்தை நோக்கி புலம்பெயரத் தொடங்கினர். அவ்வாறு பர்மாவிலிருந்து தாய்லாந்திற்கு செல்ல அவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்தனர். அவர்களின் உயிர் பயத்திற்கு தாய்லாந்து எல்லையை பிரிக்கும் சால்வீன் ஆறு ஒரு காரணமாக இருந்தது. அப்போது அந்த ஆறு பலரையும் காவு வாங்கியது. இந்த குறும்படம் அந்த உள்நாட்டு கலவரத்தை பின்னணியாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

குறும்படத்தின் கதைப்படி பர்மாவின் கொய் ரெஹ் என்ற கிராமத்தில் வசிக்கும் கோ ரே என்ற ஒன்பது வயது சிறுமி இராணுவ அத்துமீறலால் தன் உறவுகளையும் சொந்த கிராமத்தையும் இழக்கிறாள். உயிர் பிழைக்க நினைக்கும் அவள் ஆபத்தான சால்வீன் ஆற்றை கடந்து தாய்லாந்து செல்லத் துணிகிறாள். அச்சுருத்தும் மழைக்காடுகள் நிறைந்த சால்வீன் ஆற்றின் கரையை கடக்க அவளுக்கு டானட் என்ற வேட்டைக்காரன் ஒருவன் உதவுகிறான். அவனோடு பயணிக்கும் வழியில் தான் கடந்த கால நிகழ்வுகளையும் சால்வீன் ஆற்றைப் பற்றிய கட்டுக்கதைகளையும் அசைபோடும் அவள் இறுதியில் அந்த ஆற்றைக் கடந்து தாய்லாந்தின் எல்லைக்குள் நுழைகிறாள். அவள் கடந்து வந்த பாதை எத்தகையது? அதில் அவளுக்கு கிடைத்த அனுபவங்கள் எப்படி பட்டது? பலரையும் காவு வாங்கிய சால்வீன் ஆற்றின் கரையைக் கடக்க அவளுக்கு உதவிய சக்தி எது? என்பதனை ஒரு அகதியின் நிலையில் புலம் பெயர்தலை இந்த குறும்படம் வலியோடு உணர்த்துகிறது.


📎

  • Crossing Salween
  • Directed by - Brian O Malley
  • Music - Steve Lynch
  • Story - Gray Moore
  • Photography - Richard Kendrick
  • Country - Ireland
  • Language - Korean
  • Year - 2011.