உருளைக் கிழங்கு சிப்ஸ்.


உலகில் வாழும் மக்கள் அதிகமாக கொறிக்கும் நொறுக்குத் தீனி என்றால் அது உருளைக் கிழங்கு சிப்ஸாகத்தான் இருக்கும். வெறும் நொறுக்குத் தீனியாக மட்டுமில்லாமல் உணவோடு சேர்த்து தொட்டுக்கொள்ளவும் உணவிற்கு முன்பு பசியைத் தூண்டவும் எடுத்துக் கொள்ளப்படும் இது வருடத்திற்கு 20 மில்லியன் டாலர் அளவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. உருளைக் கிழங்கின் வரலாறும் அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகளின் வரலாறும் கி.மு 8000-5000 வருடத்திற்கு முற்பட்டது என்றாலும் இந்த உருளைக் கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி என்று 19 ஆம் நூற்றாண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டு பிரபலமாகத் தொடங்கியது. அதன் செய்முறை கண்டுபிடிப்பிற்கு பின்பும், பிரபலமாக மாறியதற்கு பின்பும் சுவாரசியமான கதைகள் இருக்கிறது. அந்த சுவாரசிய கதைகளை கொஞ்சம் கொறிக்கலாம் வாருங்கள்.


தென் அமேரிக்காவின் பெரு நாடுதான் உருளைக் கிழங்கின் தாயகமாக கருதப்படுகிறது. நாகரீகத்தோடு கடல் கடந்து பயணித்த உருளைக் கிழங்கு கி.பி 1536 -ல் ஐரோப்பா முழுவதும் அறிமுகமானது. அதனைத் தொடர்ந்து ஐரோப்பா மக்கள் உருளைக் கிழங்கை தங்கள் சமையலில் வெகுவாக பயன்படுத்த தி அகாம்பிளிஸ்ட் குக் என்ற பழமையான புத்தகத்தில் அதற்கான குறிப்புகள் உள்ளது. மேலும் 1822 ஆம் ஆண்டு வில்லியம் கிட்சினர் என்பவர் எழுதிய என்ற புகழ்பெற்ற சமையல் புத்தகத்தில் உருளைக் கிழங்கை சீவலாக பொறிக்கும் சிறு குறிப்பும் இருக்கிறது. அந்த குறிப்புதான் பிரெஞ்ச் ஃபிரை என சொல்லக் கூடிய பிங்கர் சிப்ஸிற்கு அடிப்படையாக அமைந்தது.


அந்த காலகட்டத்தில் நியூயார்க்கின் சரடோகா ஸ்பிரிங்ஸ் நகரத்தில் உள்ள மூன் லேக் ரிசார்ட்என்ற உணவுவிடுதி ஒன்று இந்த பிரெஞ்ச் பொறியலை விதவிதமாக செய்து வாடிக்கையாளர்களை அசத்தி வந்தது.  அந்த உணவு விடுதிக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிக்க ஆப்பிரிக்க அமேரிக்கரான ஜார்ஜ் கிரம் என்ற சமையல்காரரும் ஒரு காரணமாக இருந்தார். ஒருநாள் அதாவது 1853 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் நாள் அந்த விடுதிக்கு வந்த வாடிக்கையாளரான கார்னலியஸ் என்ற ஆசாமி தான் வழக்கமாக சாப்பிடும் பிரெஞ்ச் பொறியலை ஆர்டர் செய்துவிட்டு காத்திருத்தார். சமையல்காரர் ஜார்ஜ் கிரம் தனக்கே உறிய பக்குவத்துடன் பிரெஞ்ச் பொறியல் செய்து அவர் முன்னால் வைக்க, அதனை சாப்பிட்ட  வாடிக்கையாளருக்கு திருப்தி இல்லாமல் போனது. உருளைக் கிழங்கின் அளவு தடிமனாக இருப்பதாகவும், மசாலாவில் உப்பு குறைவாக இருப்பதாகவும் அவர் புகார் கூற, சமையல்காரர் ஜார்ஜ் கிரம் உருளைக் கிழங்கை முன்பை விட மெல்லியதாக சீவி பிரெஞ்ச் பொறியலை கவனத்துடன் இரண்டாம் முறையாக அவருக்கு பறிமாறினார். ஆனால் இந்த முறையும் வாடிக்கையாளர் அதில் குறை கூற, இதுவரை தன் சமையலுக்காக பாராட்டுகளை மட்டுமே பெற்று வந்த ஜார்ஜ் கிராமிற்கு அவமானமாக இருந்தது. தன்னை அவமானப்படுத்திய அந்த வாடிக்கையாளரை பழிவாங்க நினைத்த ஜார்ஜ் கிரம் முற்கரண்டியில் எடுக்க முடியாத அளவிற்கு உருளைக் கிழங்கை சீவி எண்ணெயில் பொறித்து அதில் உப்பையும் மிளகுப் பொடியையும் கொஞ்சம் தூக்கலாகத் தூவி 'மவனே நீ காலி' என்ற நோக்கில் அந்த வாடியாக்கையாளருக்கு கடைசியாக பறிமாறினார். ஏதாவது விபரீதம் நடக்கும் என ஜார்ஜ் கிராம் எதிர்பார்க்கையில் அதை கையால் எடுத்து சாப்பிட்ட வாடிக்கையாளர் ஆஹா! அற்புதம்! பேஸ்! பலே, இதுபோல் இதுவரை சாப்பிட்டதே இல்லை என்ற பாராட்டுகளால் அவரை புகழ்ந்து தள்ளினார். அந்த புகழ்ச்சியில்தான் உருளைக் கிழக்கு சிப்ஸ் பிறந்தது.


வாடிக்கையாளருக்கும் சமையல்காரருக்கு இடையில் நிகழ்ந்த வேடிக்கையான போட்டியில் உருவான உருளைக் கிழங்கு சிப்ஸிற்கு மூன் லேக் ரிசார்ட் உணவுவிடுதியின் மேலாளராக இருந்த ஹிராம் தாமஸ் என்பவர் சரடோகா சிப்ஸ் என பெயர் வைத்து அடுத்த நாளிலே இன்றைய ஸ்பெஷல் என விளம்பரப் படுத்தினார். அந்த உணவுவிடுதி மட்டுமல்லாமல் பின்நாட்களில் அமேரிக்கா முழுவதிலும் உள்ள உணவு விடுதிகளில் சரடோகா உருளைக் கிழங்கு சிப்ஸ் அமோகமாக விற்பனையானது. தான் கண்டுபிடித்த புதுவித உணவிற்கு காப்புரிமை எதுவும் வாங்காத சமையல்காரரான ஜார்ஜ் கிரம் தன் தங்கை கேட் விக்ஸுடன் இணைந்து கரம் ஹவுஸ் என்ற உணவு விடுதியினை சொந்தமாகத் தொடங்கி அவர் பங்கிற்கு வாடிக்கையாளர்களை கவர்ந்து வந்தார்.

செய்வதற்கு மிகவும் எளிமையான உருளைக் கிழங்கு சிப்ஸினை பதப்படுத்துவதில் ஆரம்ப காலகட்டத்தில் சிக்கல்கள் இருந்தது. அதனால் அது உணவுவிடுதிகளில் மட்டுமே துரித உணவாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. 1910 ஆண்டு ரெஜிஸ் என்ற நிறுவனம் உருளைக் கிழங்கு சிப்ஸினை முதன் முதலில் டின்களில் அடைத்து விற்பனை செய்ய அது மேலும் பிரபலமாகத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 1920-ல் என்ற பெண்மணி மெழுகினாலான காகிதங்களில் சிறு அளவில் அடைத்து விற்பனை செய்ய கேளிக்கை நேரங்களில் எல்லோர் கைகளிலும் கொறிக்கும் உணவாகவும் நாகரீகமாகவும் அது மாறியது. 1930 ஆம் ஆண்டு சிப்ஸ் தாயாரிக்க உருளைக் கிழங்கினை வெட்டும் தானியங்கி இயந்திரமும், வெள்ளி அயோடைடினால் செய்யப்பட்ட பாலி எத்திலின் பைகளும் கண்டுபிடிக்கப்பட இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலங்களில் இந்த உருளைக் கிழங்கு சிப்ஸ் அமேரிக்காவையும் தாண்டி உலகமெங்கும் பிரபலமானது.


சிப்ஸ் என்றதும் நமக்கெல்லாம் லேஸ் என்ற பெயர்தான் நினைவுக்கு வரும். அவர்கள்தான் சிப்ஸோடு சேர்த்து வறுத்த காற்றையும் விற்றுவருகின்றனர். இந்த லேஸ் என்ற பெயருக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. 1932 -ல் அமேரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மகானங்களில் தனது போர்டு மாடல் ஏ காரில் ஊர் ஊராகச் சென்று பாலாடைக் கட்டிகள், ரொட்டித் துண்டுகள் மற்றும் உருளைக் கிழங்கு சிப்ஸினை விற்கும் ஹெர்மன் லே என்பவர் பிரபலமாக இருந்தார். அவரைவிட அவரது பெயரைக் கொண்ட லேஸ் சிப்ஸ் ஏக பிரபலமாக இருந்து. அதன் மூலம் புகழ் பெற்ற அவர் 1961-ல் ஸ்பிரிடோ லேஸ் என்ற மிகப்பெறிய சிப்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். பின்நாட்களில் அது ஆஸ்திரேலியாவின் ஸ்மித் என்ற நிறுவனத்துடன் இணைந்து உலக அளவில் உருளைக் கிழங்கு சிப்ஸினை விற்று வந்தது. இன்று ஸ்மித் நிறுவனம் பெப்ஸிகோ நிறுனத்துடன் இணைந்தாலும் ஹெர்மன் லேவின் நினைவாக லேஸ் என்ற பெயர் மட்டும் மாற்றப்படாமல் இன்றுவரை தொடர்கிறது.

உருளைக் கிழங்கு சிப்ஸ்களில் அதிப்படியான சோடியம் இருப்பதாலும் உடல் பருமனுக்கு வழிவகுப்பதாகவும் அதனை தவிர்ப்பது நல்லது என மருத்துவர்களால் பறிந்துறைக்கப் படுகிறது. இருந்தும் அளவுக்கு மீற அனைத்தும் நஞ்சு என்பதை கருத்தில் கொண்டு வேடிக்கையான வரலாற்றுடன் உருளைக் கிழங்கு சிப்ஸினை கொறிப்போம்.