சொற்களோடு சேர்ந்து நானும்.



சன்னலோர இரயில் பயண
கம்பிகளுக்கிடையில்
மொத்தமும் நனையாத
தூரல் மழைச் சாரலில்
பிடித்த பாடலை
முணுமுணுக்கும் தருணங்களில்
உழைத்து களைத்து
ஓய்ந்து சாயும் பொழுதுகளில்
கடற்கரை மணல் சூட்டில்
காலார நடக்கையில்
பூக்கடையை கடந்து போகும்
வாசமிக்க நிமிடத்தில்
திருமண செய்தி சொல்லும்
பத்திரிக்கை புரட்டுகையில்
பச்சை விளக்கெரியும்
ஆன்லைன் பக்கங்களில்
நிலவோடு சேர்த்து
வின்மினிகளை எண்ணுகையில்
இருளை கவிழ்த்து
இமை மூடும் கணங்களில்
நிற்க உன் நினைவுகள். 


நட்சத்திர மின்மினியை
அசையாமல் பறக்கவிட்டு
கண்சிமிட்டி விரிந்திருக்கிறது வானம்
முந்தைய நாள் பௌர்ணமியில்
ஒரு ஓரத்தை தொலைத்துவிட்டு
காய்கிறது நிலா
தாலாட்டும் தென்றலின்
தாளத்திற்குத் தக்கவாறு
தலையசைத்துக் கொண்டிருக்கிறது
தென்னங்கீற்று
தூரத்தில் கேட்ட
இரண்டுமணி சப்தத்தில்
கண்விழித்து மலர்ந்து
வாசனையை வீசுகிறது
பக்கத்துவீட்டு பவளமல்லி
ஜூலியோ ரோசியோ
கிடைத்த சந்தோஷத்தில்
குரைப்பதை நிறுத்திவிட்டு
கூடலும் கூடல் நிமிர்த்தத்திலும்
கலந்திருக்கிறது ஜானி
கொழுத்த பகல் பொழுதை
பெருந்தீனியாக விழுங்கி
ஏப்பம் விட்டு 
ஆழ்ந்த நிசப்தத்தில்
உறங்குகிறது நடுநிசி நகரம்
இதுதான் தக்க தருணமென
மொட்டைமாடிக்கு வாயேன்
கொஞ்ச நேரம் உலாத்துவோம்.


வாய்மூடி கண் திறந்து
பேசிக் கழித்த இரவுகள்
விரல் இதழ் உடல் தொட்டு
உரசி மகிழ்ந்த இரவுகள்
வெறும் முத்தம் மட்டும்
போதுமென்ற கட்டளையின்
வேலிதாண்டா இரவுகள்
நீயோ! நானோ! நாமோ! தோற்ற
கட்டில் யுத்தத்தில்
களைத்துபோன இரவுகள்
தோள் சாய்ந்து மடி வீழ்ந்து 
கரம் பற்றி கண்ணீரில் நனைந்து
பழங்கதைகளை 
கொட்டித் தீர்த்த இரவுகள் என
எனது இரவுகளை 
இன்னும் அழகாக்க
காத்திருந்தோ காக்க வைத்தோ
ஒவ்வொருநாளும் 
தவறாமல் வந்துவிடுகிறாய்
விடிந்ததும் 
சொல்லிக்கொள்ளாமல் சென்றுவிடும்
ஒரு குறையைத் தவிர. 


மிஸ் பிளவர்ஸ் 
வரைய சொன்னாங்க என
காகிதத்தையும் 
கலர் பென்சிலையும் நீட்டுகிறாள் 
குட்டி தேவதை
முதலில் செம்பருத்தி வரைகிறேன்
தேன்சிட்டொன்று வட்டமடிக்கிறது
சூரியகாந்தி வரையும்போது
தலையைத் திருப்பிக்கொள்கிறது
செவ்வந்தி இருக்குமிடம்
எப்படித் தெரியும்
வண்ணத்துப்பூச்சிகள் வந்துவிட்டன
தாமரை வரைந்தபின்
இருவண்டுகள்
இதழ்களுக்குள் நுழைகின்றன
அரளியின் மஞ்சள் வண்ணத்திற்கு
வானவில்லை காட்டுகிறது தும்பி
இப்படி 
ஒவ்வொன்றாய் வரைந்து முடிக்க
தேங்..யூ சித்தப்பா என
இதழ் பதித்து செல்கிறாள்
எங்கள் விட்டு பூ
கடைசியில் 
யாருமற்ற தனிமையில்
ரோஜா ஒன்றை 
வரையத் தொடங்குகிறேன்
தென்றலாய் உன் நினைவுகள்
மெல்ல வந்து அமர்கிறது. 


ஸ்டிக்கர் பொட்டு
தோடு
வளையல்
கொலுசு
போன தீபாவளி புடவை
இந்த பொங்கல் சுடிதார்
பிறந்தநாள் பூக்கள்
முத்த மழையில் நனைந்த
புகைப்படம்
ஒன்றிரண்டு கவிதைகள்
மறக்க முடியாத நினைவுகள்
அத்தனையையும் 
அறை முழுவதும் பரப்பி வைத்து
வெறும் வேடிக்கை மட்டும்
பார்த்துக் கொண்டிருக்கிறது
காதல்.


அதிகாலை
மஞ்சள் வெயில்
மழைத்துளி
மலர்கள் 
பூங்காற்று
வாசல் கோலம்
கைக்குழந்தை
வயதான தம்பதிகள்
ஜவுளிக்கடை பொம்மை
பக்கத்து அறையில் ஒலிக்கும் பாடல்
சமையலறை வாசம்
நடிகர் அஜித்
மாலை 
கடற்கரை
மொட்டைமாடி
நிலா
இரவு
படுக்கை
கனவு
மீண்டும் அதிகாலை
மீண்டும் நீ.


சொற்கள் ஒவ்வொன்றாய்
பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்
எதை சேர்ப்பது
எதை விடுப்பது
என் வார்த்தை
என் செயல்
ஏன்! என் அன்பு கூட
உன்னை காயப்படுத்தியிருக்கக்கூடும்
எல்லாவற்றிற்குமான
மன்னிப்புச் சொற்களை
கவிதையில் கிறுக்க
சொற்கள் ஒவ்வொன்றாய்
பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்
பொறுக்கிய சொற்களோ
கவிதையில் பிடிபடாமல்
காகிதத்தில்
உருண்டோடுகிறது
அதை பின் தொடர்ந்து
நானும் ஓடுகிறேன்
ஓடிய சொற்கள்
அங்குமிங்கும் அலைந்து திரிந்து
உன் கால் விரல் மோதி
திகைத்து நிற்கிறது
கொஞ்சம் குனிந்து பார்
சொற்களோடு சேர்ந்து
நானும்.