வைடக்ஸ் நிகுண்டோ - எதிரிக்கு எதிரி.

ன்றைய சூழலில் நமக்கிருக்கும் மிகப்பெரிய எதிரி என்றால் அது கொசுக்களாகத்தான் இருக்கும். ஓரளவிற்கு விழிப்புணர்வு அடைந்து கதவை இறுக்கி சாத்திய நிலையில் மழை தேங்கி அந்த எதிரியின் பயத்தை கொஞ்சம் அதிகரிக்கச் செய்திருக்கிறது. எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை போல இந்த நேரத்தில் வைடக்ஸ் நிகுண்டோ என்ற தாவரத்தைப் பற்றி தெரிந்துகொள்வதும் அதனுடன் நட்பு வைத்துக் கொள்வதும் அவசியம் எனப்படுகிறது.


வேர்பீனிஸியா குடும்பத்தைச் சேர்ந்த வைடக்ஸ் நிகுண்டோ என்ற இந்த தாவரத்தின் இலையிலிருந்து பெறப்படும் எளிதில் ஆவியாகும் ஒருவித எண்ணெய்க்கு கொசுவர்த்தி சுருள், லிக்யூட், மேட், கிரீம் என எதற்கும் அடங்காத கொசுக்களை ஓட ஓட விரட்டும் ஆற்றல் இருக்கிறது. இதன் காய்ந்த இலைகளை தீயில் வாட்டினாலே கொசுக்கள் நம்மை நெருங்காது. மேலும் இந்த தாவரம் இருக்கும் ஏரியாவில் மலேரியா டெங்கு சிக்கன்குனியா போன்றவற்றை பரப்பும் கொடூர கொலைகார வரி கொசுக்களும், ஜஸ்ட் டின்னர் மட்டும் சாப்பிட வந்தேன் என வலிக்காமல் கடித்துவிட்டு செல்லும் சாதாரண சமத்து கொசுக்களும் குடியிருப்தில்லை. இதன் இலையிலிருந்து வெளிப்படும் ஒருவித மனம் கொசுக்கள் மட்டுமல்லாமல் சில பூச்சியினங்களையும் நெருங்கவிடாமல் செய்கின்றன. பூச்சிகளிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் தப்பிப்பதற்காக இயற்கை இந்த தாவரத்திற்கு அந்த ஸ்பெஷல் ஆபஃரை அளித்திருக்கிறது. 


இந்திர சூரியம், இந்திரயாணி, நித்தில், சிந்துவாரம், லாகுண்டே, நிர்க்குண்டி சும்பாலு ஆங்கிலத்தில் Five leaf chaste tree என பல பெயர்களில் இந்தியா இலங்கை வங்கதேசம் பிலிப்பைன்ஸ் போன்ற வெப்பமண்டல பிதேசங்களில் வாழும் இந்த தாவரத்தில் இரண்டு பேரினங்களும் 250 சிற்றினங்களும் இருக்கின்றன. அவை அனைத்துமே இந்த தன்மையை கொண்டிருக்கின்றன. மேலும் சித்த மருத்துவத்திலும் இந்த தாவரத்தின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது. இந்த தாவரத்தின் நுணியிலை முதல் அடிவேர் வரை அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டிருக்கின்றன. ஜலதோஷம் மற்றும் சைனஸ் தொல்லைகளுக்கும் மூட்டுவலிக்கும் கணைய வீக்கத்திற்கும் இதன் தைலம் நிவாரணியாக இருக்கிறது. குடல்புண்கள் மற்றும் காயங்களை ஆற்றவும் தலைவலி பசியின்மை சரும நோய்களுக்கும்  பெண்களின் மாதவிடாய் மற்றும் கர்பகால பிரச்சனைகள், ஹார்மோன் குறைபாடுகள், பி.சி.ஒ.டி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டிகளுக்கும் அருமருந்தாக இருக்கிறது. போலியோ கேன்சர் போன்ற நோய்களுக்கு தடுப்பு மருந்துகள் தயாரிக்கவும் இது பயன்படுகிறது. தற்போதைய பிரபலமான டெங்குவிற்கான மருந்தை கண்டுபிடிக்க மூளையை கசக்கிக் கொண்டிருக்கும் ஆராய்ச்சியாளர்கள் இந்த தாவரத்தின் இலையையும் கசக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தாவரத்தை பற்றி தெரிந்தோ தெரியாமலோ நம் முன்னோர்கள் குச்சியாக நட்டுவைத்து வீட்டிற்கு வேலி அமைத்து வந்திருக்கின்றனர். உணவுதாணியங்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் இதனை பயன்படுத்தி வந்திருக்ன்றனர். அதுமட்டுமல்லாமல் குட்டையான மரமாகவும் செடிபோலவும் வளரும் அதன் பூக்களைப் பற்றி புகழ்ந்து தள்ளி

மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி,
போதுவிரி பன்மர னுள்ளும் சிறந்த
காதல் நன்மரம் நீமற் றிசினே;
கடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்த
தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி;
காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின்
ஊர்ப்புறம் கொடாஅ நெடுந்தகை
பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே.

- போன்ற இலக்கியப் பாடல்களையும் இயற்றியிருக்கிறார்கள்.

கொசுக்கள் மற்றும் பூச்சிகளின் தொல்லைகள் இல்லாத சில பொறாமைப்படும் நாடுகளில் கூட இந்த தாவரத்தை அழகிற்காக வளர்த்து வரும் வேலையில்  உன்னதமானவைகளை தொலைத்த நாம் ஒருகாலத்தில் காட்டுச் செடியைப்போல நம்மைச் சுற்றியிருந்த இவற்றை தொலைத்து விட்டோம்.
சிறுவயதில் பள்ளிப் பருவத்தில் ஆசிரியர்களிடம் பிரம்படி வாங்கிய அனுபவம் இருந்தால் அந்த குச்சியும் வைடக்ஸ் நிகுண்டோ என்ற நொச்சியும் நம் நினைவுக்கு வரும்.

தற்போது அரசாங்கமும் சில தொண்டு நிறுவனங்களும் கொசுக்களை ஒழிக்க நொச்சி செடியை வளர்க்கும் திட்டத்தை கையில் எடுத்திருக்க, எங்காவது எப்போதாவது எதிரிக்கு எதிரி நண்பனான இதனை கண்டால் நட்பு வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் வீட்டிற்கு நிரந்தரமாக அழைத்து வாருங்கள்.