182 * நாட் அவுட்.


ந்து வயதுவரை தத்தக்கா பித்தக்கா, ஐந்திற்கு பிறகு ஏதுமற்ற பால்ய பருவம், இருபதை தொட வசந்தகால இளமைப்பருவம், அதனைத் தொடர்ந்து காதல் திருமணம் குழந்தைகுட்டிகள் உறவுகள் குடும்பம் என முப்பதை தாண்ட வாழ்க்கை சலிப்புத் தட்டுவிடுகிறது. வேண்டா விருப்பமாக மிச்ச சொச்ச காலங்களை கடந்தாலும் வயது அறுபதை அடைந்தவுடன் பூமிக்கு பாரமாகிவிடுகிறோம் அல்லது பாரமாக்கப்பட்டு விடுகிறோம். நமது தலைமுறையின் சராசரி வயது அறுபதாக சுருங்கிவிட்டது. ஆனால் நமக்கு முந்தைய தலைமுறையில் பலர் என்பது வயது வரை ஏகபோகமாக வாழ்ந்திருக்கிறார்கள் வாழ்கிறார்கள். அவர்களில் சிலர் எமனை மறந்து செஞ்சுரி கடந்தவர்களும் இருக்கிறார்கள். அதைவிட நூற்றம்பதையும் கடந்து 182 வயது ஒருவர் வாழ்ந்து வருகிறார். நமக்கு முந்தைய நான்காம் தலைமுறையை சேர்ந்த அவர்தான் இன்று உலகில் வாழும் மிக வயதான மனிதர் ஆவார்.

1835 ஆம் ஆண்டு ஜனவரி ஆறாம்நாள் கர்நாடகாவில் பிறந்த அவர் வெள்ளையனே வெளியேறு என்ற கோஷமெல்லாம் ஒலிக்காதபோது 1902-ல் வாரணாசிக்கு அதாவது காசிக்கு புலம்பெயர்ந்தார். கிட்டத்தட்ட 55 வருடங்கள் அங்கு செருப்பு தைக்கும் வேலை செய்து 1957 ஆம் ஆண்டு அந்த வேலைக்கு கங்கையில் முழுக்கு போட்டுவிட்டு தற்போது காசி விஸ்வநாதா என அமைதியாக இருக்கிறார். தனது மணைவி மக்கள் பேராதி பேரப்பிள்ளைகள் எல்லாம் உலகைவிட்டு சென்றுவிட உறவுகள் அற்ற நிலையில் தான் பிறந்த தேதி முதல் காசியை அடைந்த தினம் வரை அனைத்தின் நினைவுகளோடு அவர் இன்றும் வாழ்ந்து வருகிறார். 'கவலைப்படாதீர்கள் இன்னும் ஐம்பது வருடம் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள்' என இவரை கடைசியாக பரிசோதித்த (1971) மருத்துவரின் கருநாக்கு வார்த்தைகள் கூட அவரது நினைவில் இருக்கிறது. அவரைப்பற்றி நன்கறிந்த சிலர் பத்திரிக்கைகளுக்கு சொல்லிவிட மோப்பம் பிடித்த அவர்களின் புண்ணியத்தில் வெளியுலகிற்கு அறிமுகமாகி உலகின் வயதான மனிதர் என்ற கின்னஸ் சாதனைக்கும் அவர் பரிந்துரைக்கப்பட்டார். கைரேகையும் கண்பார்வையும் வைத்து பெயருக்கு ஆதார் என தற்போதுதான் இந்தியா டிஜிட்டலாக ஏதோ! மாற, இரண்டு நூற்றாண்டிற்கு முன்பு பிறந்த அவரிடம் போதிய ஆதாரமும் அடையாளமும் இல்லை என நிராகரிக்கப் பட்டிருக்கிறார். இருந்தும் தன்னுடைய நினைவுகள்தான் ஆதாரம், தனது பெயரான மகசாஸ்த முராஷி என்பதே தன் அடையாளம், Death forget about me என படு இயல்பாக நடைபாதையில் வாழ்ந்துவரும் இவர்தான் இன்றைய உலகில் வாழும் வயதான நபர்கள் பட்டியலில் 182* நாட் அவுட் என முன்னணியில் இருக்கிறார்.