நரகாசுரன்.

ந்தியர்களின் பண்டிகை கொண்டாட்டங்களில் முதன்மையானது தீபாவளி பண்டிகை ஆகும். தீ+ஆவளி = தீபாவளி. தீபங்களை வரிசையாக அடுக்குவது என்பது இதன் பொருள். அடுக்கிய அந்நாள் தீப ஒளித்திருநாள். பொதுவான நாட்காட்டியில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 15 வரையிலான தேதியிலும், தமிழ் நாட்காட்டியில் ஐப்பசி மாத திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை அல்லது அதற்கு அடுத்த நாளிலும் ஒவ்வொரு வருடமும் தீபாவளி வருகிறது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருளை நீக்கி ஒளியைக் கொடுக்கும் பண்டிகை இது. 

வடக்கே குஜராத்திகளும் மார்வாரிகளும் இந்த தீபாவளியை இலட்சுமியின் நாளாக பார்க்கின்றனர். அன்றைய நாளில்தான் அவர்கள் புதுக் கணக்கை தொடங்குகின்றனர் (போனஸ் கொடுக்கும் வாங்கும் பழக்கம் அங்கிருந்து வந்திருக்கலாம்). வங்காளிகள் தீபாவளியை காளிதேவியின் நாளாகவும், சிலர் தசராவாகவும், நரகா சதுர்தசியாகவும் கொண்டாடுகின்றனர். இராமாயணத்தின்படி இராமன் காட்டிற்குச் சென்று கலவரங்களை முடித்து அயோத்திக்கு திரும்பிய நாளாகவும், ஸ்கந்த புராணத்தின் படி சிவபெருமான் சக்தியை உள் வாங்கிக் கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்த நாளாகவும் தீபாவளி பார்க்கப்படுகிறது. சமண மதத்தில் மகாவீரர் நிர்வாண நிலையை அடைந்த நாளாகவும், சீக்கிய மதத்தில் பொற்கோவில் எழுப்பப்பட்ட நாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இருந்தும் நரகாசுரன் என்ற அரக்கன் ஒருவன் இறந்த நாளே பெரும்பாண்மையாக தீபாவளியாக கருதப்படுகிறது. சரி!.. யார் இந்த நரகாசுரன்?...வேண்டா விருப்பாக அந்த பெஸ்ட் பெஸ்ட் விளம்பரத்தை பார்த்து அதே கடையில் துணிமணிகள் வாங்கி, பலகாரம் செய்து, எண்ணெய் தேய்த்து குளித்து, பல சரக்குகளோடு பட்டாசுகளை வெடித்து, புது ரீலீஸ் திரைப்படத்திற்கு சென்றதை ஏதோ விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கியதைபோல பெருமையடித்து, வாங்கிய போனஸும் கடனும் ஸ்.. உஸ்.. புஸ்.. என தீரும் வரை கோலாகலமாக ஒருவனின் இறப்பை கொண்டாடும் அளவிற்கு பாவி மனுசன் மன்னிக்கவும் பாவி அரக்கன் என்ன பாவம் செய்தான்?... அவனது கதைதான் என்ன?... தீபாவளியின் அந்த குதுகலத்தோடு பார்க்கலாம் வாருங்கள்.



புராணக்கதைகளை இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆகம விதிப்படி முன்பொரு காலத்தில் இரண்யாட்சதன் என்ற அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் யார் என்றால்? புகழ்பெற்ற அரக்கன் மிஸ்டர் இரண்யனின் தம்பி ஆவான். அவன் என்ன நினைத்தானோ ஒருநாள் இந்த பரந்து விரிந்த உலகை பாய் போல சுருட்டி கடலுக்கு அடியில் ஒளித்து வைத்தான். அதனை மும்மூர்த்திகளில் ஒருவரான மகாவிஷ்ணு தனது 3G அவதாரமான வராக அவதாரத்தை எடுத்து பூமியை குடைந்து கடலுக்கடியில் இருந்து தன் மூக்கினால் தூக்கி மீட்டுக்கொண்டு வந்தார். உலகம் உருண்டை என கல்லடி வாங்கிய கலிலியோ புண்ணியத்தில் நமக்கு நன்றாகத் தெரியும், அதனை பாய் போல சுருட்ட முடியுமா? கடலும் இந்த உலகில்தானே இருக்கிறது? என்ற கேள்வி மனதில் எழலாம். சூப்பர் ஹுரோக்களின் கதைக்கு லாஜிக் பார்க்கக் கூடாது என்பதன்படி மகா விஷ்ணு பூமாதேவியை குடைந்து உலகை மீட்கும் தருணத்தில் அவரது ஸ்பரிஸ்சத்தினால் பூமாதேவி கருவுற்றாள். இந்த பூமாதேவி விஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமியின் அவதாரம் என்பதால் சந்தேகங்கமும் குழப்பமும் இல்லாமல் பத்துமாதத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள். மகா விஷ்ணுவின் அவதாரமான கூர்ம அவதாரத்திற்கும், மகாலட்சுமியின் அவதாரமான பூமாதேவிக்கும் பிறந்த அந்த குழந்தையே நரகாசுரன். 

நரகாசுரனின் இயற்பெயர் பவுமன் என்பதாகும். யாரோ ஒருவர் அவன் செய்த சேட்டைகளால் மனம் நொந்து படுபாவி நீ நரகத்திற்கு போவாய் அசுரனே நரகாசுரனே என சபிக்க அதுவே அவனுக்கு நிரந்தரமாகிப் போனது. அவன் எப்படி வளர்ந்தான்? எந்த கான்வென்டில் படித்தான்? ஹிந்தி அவனுக்கு பாடமாக இருந்ததா? என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. அந்த நரகாசுரன் ஹார்லிக்ஸ், பூஸ்ட், காம்ப்ளான், போன்விட்டா குடிக்காமல் நெடுநெடு என வளர்ந்து டீன் ஏஜ் பருவம் அடைந்ததும் சாகாவரம் வேண்டி பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்தான். பிரம்மாவும் அவனது தவத்தை மெச்சி பெற்ற தாயைத் தவிர உன்னை யாராலும் கொல்ல முடியாது என்ற ஒரு எலுமினேஷனுக்கு உட்பட்டு சாகாவரத்தை அவனுக்கு அளித்தார். அந்த மதர் சென்டிமென்ட் வரத்தை வைத்துக் கொண்டு நரகாசுரன் 2X7 உலகங்களையும் ஆட்டிப் படைத்தான்.

பல யுகங்கள் கடந்து மகா விஷ்ணு பலரை அழிக்க பல அவதாரங்கள் எடுத்து அப்டேட் வெர்ஷனான கிருஷ்ணன் அவதாரத்திற்கு வந்திருந்தார். நரகாசுரனும் தான் பெற்ற வரத்தால் சாகாமல் பல வருடங்கள் வாழ்ந்திருந்தான். இந்தமுறை அவன் தேவாதி தேவர்களை அச்சுருத்த வருணனின் கொடையையும், அதீதியின் குண்டலங்களையும் (ஜிமிக்கி கம்மல்) திருடிக் கொண்டு சென்றான். மேலும் உலகில் இருந்த சுமார் 16100 அழகிகளை கடத்திக்கொண்டும் சென்றான் (அந்த 16100 பேரும் கோபியர்கள் என்றும், அதனால்தான் கிருஷ்ணனுக்கு கோபம் தலைக்கேறியது என்றும் கருத்து உண்டு. அந்த 16100 பேரை கடத்திக்கொண்டு சென்று அவன் என்ன செய்திருப்பான் என்ற சந்தேகமும் உண்டு). ஆகையால் தேவர்கள் அவனது கொட்டத்தை அடக்க கிருஷ்ணனிடம் சென்று முறையிட்டனர். கிருஷ்ணனும் நரகாசுரனை அழிக்க தன் மனைவியான சத்யபாமாவை தேரோட்டியாக அழைத்துக் கொண்டு போர்க்களத்திற்கு சென்றார். சத்யபாமா வீட்டை பெருக்குவது, கோலம் போடுவது, கோலா புட்டு செய்வது என்றில்லாமல் போர்க் கலைகளையும் கொஞ்சம் அறிந்திருந்தாள். மேலும் அவள் பூமாதேவியைப் போலவே மகாலட்சுமியின் அவதாரம். மகா விஷ்ணுவிற்கு அவ தாரம். அதுமட்டுமில்லாமல் நரகாசுரனுக்கு அவள் தாய். அதனால் கிருஷ்ணன் தன் மனதில் அந்த E= mc2 கணக்கை வைத்துக் கொண்டு அவளையும் போர்களத்திற்கு அழைத்துச் சென்றார். போர் தொடங்கி இருதரப்பிலும் இழப்புகள் ஏற்பட நரகாசுரன் எய்த அம்பு ஒன்று கிருஷ்ணனின் மீது பாய்ந்தது. உடனே கிருஷ்ணன் மயங்கி விழுவதுபோல் நடிக்க தேரோட்டியான பாமா பதற்றமடைந்து நரகாசுரனை கோபத்துடன் கொன்றாள். தன் தாயைத் தவிர யாராலும் மரணம் ஏற்படாது வரம் வாங்கியிருந்த நரகாசுரன் தன் தாயின் அவதாரத்தினால் வீழ்ந்தான். நரகாசுரன் வீழ்ந்ததை கேள்விப்பட்ட தேவர்களும் பலரும் வீட்டில் தீபமேற்றி கொண்டாடத் தொடங்கினர் (ஸ்வீட் எடு கொண்டாடு பழக்கமும் அப்போதுதான் தொடங்கியது). நரகாசுரனை கொண்ற சத்யபாமாவிற்கு உண்மை விளங்க இதுபோல் ஒரு மகன் யாருக்கும் பிறக்கக் கூடாது என அவள் எண்ணெய் தேய்த்து கங்கையில் மூழ்கி தன் பாவத்தை போக்கினாள். மேலும் மகனாக இருந்தாலும் ஒரு அரக்கன் வீழ்ந்ததை கொண்டாடும்படி கிருஷ்ணனிடம் அவள் வேண்டினாள். ஆக பாமாவின் வேண்டுதல்படி நரகாசுரன் இறந்த நாளையே நாம் தீபாவளியாக கொண்டாடி வருகின்றோம். தன் சாகும் தருணத்தில் மனம் திருந்தி தன் இறப்பை அனைவரும் கொண்டாட வேண்டும் என தனது தாயிடம் நரகாசுரனே கடைசி ஆசையாக கேட்டதாகவும் கதை உண்டு.


நரகாசுரன் பிராக்நோதிஸ்புரம் என்னும் ஊரை தலைநகராகக் கொண்டு காமாபுரம் என அழைக்கப்பட்ட தற்போது அஸ்சாம் மாநிலத்தின் பகுதிகளை ஆண்டுவந்தான். அங்குள்ள காமாக்யா எனும் கோவிலில் இருக்கும் காமாக்கியா தேவியை அவன் மணமுடிக்க பல தில்லாலங்கடி வேலைகள் செய்த கதைகள் இன்றும் அங்கு நிலவி வருகின்றன. நரகாசுரனுக்கு பகதத்தன் என்ற மகன் இருந்ததாகவும் கௌரவர்களுக்காக குருஷேத்திர போரில் ஈடுபட்டு பன்னிரண்டாம் நாள் அவன் இறந்ததாகவும் மகாபாரதத்தில் குறிப்பு உள்ளது. மேலும் நரகாசுரன் ஒரு தமிழன் என்றும், அவனைப் போலவே இரண்யன், இராவணன், கும்பகர்ணன், சிசுபாலன், கம்சன் போன்றவர்களும் தமிழர்களே என்றும், ஆரியர்களான வடநாட்டவர்கள் இவர்களை அரக்கர்களாக சித்தரித்து புழுகு மூட்டை புராணக்கதைகள் எழுதி உள்ளதாகவும், ஆகையால் தீபாவளி பண்டிகையை திராவிடர்களாகிய தமிழர்கள் கொண்டாடுவது தவறு என்றும் சில கருப்புச் சட்டை அரசியல் கதைகளும் இருக்கிறது.

நரகாசுரன் என்பவன் பிறந்தானா? வாழ்ந்தானா? இறக்கும்போது தன் இறப்பை ஹேப்பி டெத்டேவாக கொண்டாடுங்கள் என சொல்லிவிட்டு செத்தானா? அவன் எந்த மதத்தை சார்ந்தவன்? ஆரியனா? திராவிடனா? ஆங்கிலோயனா? இல்லை செவ்வாய் கிரகத்து ஏலியனா? என்பதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. பண்டிகைகள் என்பது மக்களின் மன மகிழ்விற்காக கொண்டாடப்படுவதாகும். அது ஆதிகாலத்தில் குகைககளில் வாழ்ந்தபோதே தொடங்கியிருக்க வேண்டும். அப்போது மொழி வாய்க்கு வந்ததாக இருக்கக் கூடும், இனம் இடுப்பிற்கு கீழே மட்டும்தான். அதனைக் கருத்தில் கொண்டு பண்டிகைகளை கொண்டாடி மகிழ்வோம்.