மார்ஷியல் ஆர்ட் திரைப்படங்கள் - பகுதி 2.





மார்ஷியல் ஆர்ட் அல்லது தற்காப்புக் கலை என்பது சண்டைபோடுவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட மரபு சார்ந்த செயல்முறைகளை கொண்ட தொகுப்பு ஆகும். அதாவது சண்டையில் ஒருவரையோ பலரையோ அடித்து வீழ்த்துவதில் ஒரு நீதி ஒரு நேர்மை ஒரு நியாயம் ஒரு தர்மம் என நாட்டாமை கொள்கையை கடைபிடிப்பதாகும். இந்த ஒழுங்குமுறை அனைத்தும் கடவுள் மதம் ஆன்மீகம் புராணம் பூ பழம் பத்தி சூடம் சாம்பிராணி  ஆகிய நம்பிக்கைகளோடு தொடர்பு கொண்டவை. இந்தியாவின் இந்து மதத்தில் தொடங்கி பௌத்தம், தாவோயிசம், கான்பூசியனியம், சின்டோ போன்ற மதங்களில் இதற்கான தொடர்பை காணலாம். மனிதன் எப்படியாவது வாழ்ந்தாக வேண்டும் என ஆறாம் அறிவை எப்போது யோசிக்கத் தொடங்கினானோ அப்போதே தற்காப்பு கலைகள் தொடங்கியிருக்க வேண்டும். தற்காப்பு கலைகளின் வகைகளை எடுத்துக்கொண்டால் குத்துச்சண்டை, மல்யுத்தம், கராத்தே, காபோய்ரா, சாவாட், முயாய் தாய், சான்ஷோ, சுமோ, யாயுற்சு, சம்போ, யுடோ, ஜூடோ, அய்கிடோ, டைக்குவாண்டோ, டொமாட்டோ, பொட்டட்டோ என அடுக்கிக் கொண்டே போகலாம். நம் ஊர் சிலம்பமும் களரியும் இதில் உண்டு. இவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களே மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படங்கள் என அழைக்கப்படுகின்றன. அதிலும் சீனாவின் "வூசு" என்ற கலையை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் திரைப்படங்களே மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படங்களின் அடையாளமாக இருக்கின்றன. வூசு என்றால் என்ன? அது எப்போது தோன்றியது? அதை வடிவமைத்தவர்கள் யார் யார்? என்பதைப்பற்றி அடுத்த பதிவில் காண்போம். அதற்குமுன் சென்ற பதிவின் தொடர்ச்சியாக அடியேன் ரசித்த சில மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தை பார்த்துவிடலாம்.

3 Evil Masters (The Master).


சீனாவிலிருந்து வெளிவரும் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படங்களின் கதைகள் அவர்களின் புராண நம்பிக்கைகளோடு தொடர்புடையதாக இருக்கும். அல்லது பழிவாங்கும் பழைய காலத்து கதையாக இருக்கும். அந்த வகையில் காயம்பட்ட குங்ஃபூ மாஸ்டர் தான் பயின்ற கலையை அநாதையான ஒருவனுக்கு கற்றுத்தந்து தன்னை எதிர்த்த மூன்று கெட்ட சக்திகளை பழிவாங்குவதே இந்த திரைப்படத்தின் கதையாகும். கார்த்திகா சீயக்காய் விளம்பரத்தில் வருவதைப் போல நீண்ட கூந்தல் வைத்துக்கொண்டு மாஸ்டரும் வில்லனும் வித்தியசமாக தோன்ற, திரைப்படம் முழுவதும் கண்ணைக் கவரும் சண்டைக் காட்சிகளால் நிறைந்திருந்தது. குறிப்பாக திரைப்படத்தின் ஆரம்ப காட்சியின் சண்டை மெய்சிலிர்க்க வைப்பதாக அமைந்திருந்தது. 1980 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் சென் குவான் தை, லூ-சான், தக் யூன், ஃபை வேவ் லாம், போன்றவர்கள் நடித்திருந்தனர். அதில் "சென் குவான் தை" என்பவருக்கு இந்த திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. ஜாக்கி சானின் பள்ளித் தோழரான இவர் அவருடன் இணைந்து "செவன் லிட்டில் பார்சூன்" என்ற குழுவில் இருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

Martial Club.


இரண்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் பள்ளிகளுக்கு இடையே நடக்கும் செயல்பாடுகள் மற்றும் போட்டிகள்தான் இந்த திரைப்படத்தின் கதை. அதை அழகாக நகைச்சுவை கலந்து தயாரித்திருந்தனர். திரைப்படத்தின் பெரும்பகுதி நகைச்சுவையாக இருந்தாலும் வியக்க வைக்கும் அக்மார்க் குங்ஃபூ சண்டைக் காட்சிகளுக்கு குறையில்லாமல் நிறைந்திருக்கிறது. அதில் திரைப்படத்தின் கதாபாத்திரமான ஃபை வாங் என்பவரும் மாஸ்டர் ஷானும் ஒரு குறுகிய சந்திற்குள் மோதிக்கொள்ளும் சண்டைக் காட்சி ஆக்ஷன் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இரண்டு நபர்கள் இருக்கிறார். ஒருவர் திரைப்படத்தின் இயக்குனர் லு கார் லியூங், மற்றொருவர் நாயகியாக நடித்த காரா ஹூய். 1934 ஆம் ஆண்டு பிறந்த "லு கார் லியூங்" மிகச்சிறந்த சண்டைப்பயிற்சி நிபுணரும் இயக்குனரும் ஆவார். 70-80 களில் இவர் பணியாற்றாத சீனா திரைப்படங்களே இல்லை என சொல்லலாம். 1960 ஆம் ஆண்டு பிறந்த "காரா ஹூய்" சீனா திரைப்பட நாயகிகளில் மிக முக்கியமானவர். மிகவும் சிரமப்பட்டு சினிமாத்துறைக்கு வந்த அவர் பல நூறு படங்களில் நடித்து பல விருதுகளை வாங்கி இன்றும் நடிகையாக தொடர்ந்து வருகிறார்.

The Prodigal Son.



ஊதாரித்தனமாக சுற்றும் ஹீரோ இடைவேளைக்கு பிறகு மனம் திருந்தி சாதிக்கும் சினிமா பார்முலா உலக அளவில் பிரபலமானது. 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தின் கதையும் அத்தகையதே. ஊதாரித்தனமாக சுற்றித்திரியும் ஒருவன் தன் தந்தையின் சாவிற்கு சண்டைபோட்டு பழி வாங்குகிறான். சீனா திரைப்பட உலகில் ஹி-டா-கோ (Big brother) என செல்லமாக அழைக்கப்படும் "சாங்மோ ஹங்" என்பவர் இந்த திரைப்படத்தை எடுத்து அதில் தாமும் நடித்திருந்தார். ஜாக்கிசான் போன்ற பெரிய ஹீரோக்களுக்கெல்லாம் சண்டைக்காட்சிகள் அமைத்த இவர் சீனா திரைப்பட உலகில் புகழ்பெற்ற சண்டைக்காட்சி நிபுணர் மற்றும் இயக்குனர், நடிகர் ஆவார்.

Shaolin Temple.



புரூஸ்லி ஜாக்கி வரிசையில் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படங்களின் மும்மூர்த்திகளில் ஒருவரான ஜெட்லி நடித்த முதல் திரைப்படம் இந்த சவொலின் டெம்பில். கி.பி. 581-618 மற்றும் கி.பி. 618-907 காலகட்டத்தில் சீனாவில் நிலவிய சுயி மற்றும் டங் என்ற இரு வம்சங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நடப்பதாக இந்த திரைப்படத்தின் கதை அமைந்திருந்தது. மேலும் சீனாவில் இருக்கும் தற்காப்புக் கலையின் பிறப்பிடமாக கருதப்படும் சவொலின் கோவிலில் முதல்முதலாக இந்த திரைப்படம் படம்பிடிக்கப்பட்டது. பள்ளிக்கூடம் செல்லும் பையனைப்போல் மொட்டைத் தலையுடன் ஜெட்லி இதில் தோன்றியிருந்தார். ஜெட்லி தற்காப்பு கலையை முறையாக பயின்று அதில் நடத்தப்படும் போட்டிகளில் முதல் பரிசுகளையும் கருப்பு பச்சை ஊதா சிவப்பு என பல வண்ணங்களில் பட்டங்களையும் சிறுவயதிலேயே பெற்றவர். அதனால் இந்த திரைப்படத்தில் மார்ஷியல் ஆர்ட் சண்டைக் காட்சிகள் பஞ்சமில்லாமல் இருந்தது. "லீ லியான் ஜி"என்ற இயற்பெயர் கொண்ட அவரை நண்பர்கள் செல்லமாக ஜெட் என அழைக்க பின்நாட்களில் அவர் இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் ஜெட்லீயாக மிகப் பிரபலமடைந்தார். 2011 ஆம் ஆண்டு இந்த திரைப்படத்தை ரீமேக் செய்து கூட வெளியிட்டனர்.

The Blade.


வழக்கமான மார்ஷியல் ஆர்ட்ஸ் பார்முலா கதையில் ரத்தமும் சதையும் குங்ஃபூவும் கலந்து காக்டெயிலாக 1995 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளிவந்தது. மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படங்களின் சண்டைக் காட்சிகளின் சாராம்சத்திலிருந்து சற்று விலகி மிரட்டும் ஒளிப்பதிவினாலும் அதனை எடிட் செய்யப்பட்ட விதத்தாலும் ஆக்ஷன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. காற்று, புழுதி, மண், அழுக்கு சட்டை, இருள், நிர்வாணம் என பாலா படத்தில் வருவதைப் போன்று கதாபாத்திரங்கள் இதில் தோன்றி ரசிக்க வைத்தனர். உலகின் சிறந்த நூறு ஆக்ஷன் திரைப்படங்களின் பட்டியலில் 43 வது இடத்திலிருக்கும் இந்த திரைப்படத்தில் வின்சென்ட் ஜாவோ, மோசஸ் சான்,  ஹங் யான் யான், சாங் லீ, ஆஸ்டின் வே, சுங் பிக் - ஹெக் மற்றும் வேலரி சாவ் போன்றவர்கள் நடித்திருந்தனர்.